Share on Social Media


ஆர்.எஸ்.எஸ்., தலைவரின் மதுரை வருகையை முன்னிட்டு, சாலையை செப்பனிடச் சொன்ன, மதுரை சப் கலெக்டர், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியின் மயக்கத்திலிருந்து இன்னும் விடுபடாமல் இருக்கும் அதிகாரிகளுக்கு இதுவோர் எச்சரிக்கை.
– விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார்

‘தி.மு.க., ஆட்சியில், சாலைகள் மோசமாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பார்த்து விடக் கூடாது என்பதற்காக அந்த அதிகாரி அப்படி சொல்லி இருக்கலாம். அவரை பணியிலிருந்து விடுவித்தது சரி தானா…’ என, கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை.

குமரி மாவட்டம் அருமனையில் தேசவிரோத, ஹிந்து விரோத கருத்துகளை கூறி, மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து, பிரதமர் குறித்து தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த கிறிஸ்துவ மத போதகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
– தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என, பிரதமரை சாடுவதையே பலர் தொழிலாக வைத்துள்ளனரே…’ என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.

.
பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் உண்மையாகி விடும் என்ற, சர்வாதிகாரி ஹிட்லரின் அமைச்சர் கோயபல்ஸ் கொள்கையை, மத்திய அரசு பின்பற்றி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என, மோடி அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது.
– மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி

‘மோடி அரசு மட்டுமல்ல, இங்கே, ஸ்டாலின் அரசும் அப்படித் தான் சொல்கிறது. இரண்டு மாறுபட்ட கட்சிகள் சொல்வதால், உண்மையாகத் தான் இருக்குமோ…’ என, சந்தேகம் கிளப்பத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை.

காங்கிரஸ் ஆட்சியின் போது, தேசிய நலனுக்காக போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன என, அப்போதைய பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார். அந்த செயல் சட்டத்திற்கு உட்பட்டு நடந்ததா என்பதை, அப்போதைய நிதிஅமைச்சர் சிதம்பரம் தான் சொல்ல வேண்டும்.
– மாநில பா.ஜ., பொருளாளர் சேகர்

‘இப்போது அவர், எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதால், அப்போது செய்ததை மறந்திருப்பார் அல்லது இப்போது செய்தது தான் தப்பு என்பார்…’ என, கூறத் தோன்றும் வகையில், மாநில பா.ஜ., பொருளாளர் சேகர் அறிக்கை.

கொரோனாவை எப்படி சொதப்பலாக மத்திய அரசு கையாண்டது என, வட மாநிலங்களில் வெளிவரும், ‘டைனிக் பாஸ்கர்’ பத்திரிகை அம்பலப்படுத்தியது.அதற்கான விலையாக, அந்த அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.
– காங்., – எம்.பி., ஜெய்ராம் ரமேஷ்

‘செய்தி வெளியிட்டதற்கு சோதனையா; மத்திய அரசு தவறான பாதையில் பயணிக்கிறது…’ என, சொல்லத் தோன்றும் வகையில், காங்., – எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *