Share on Social Media


மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசும் தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசும் அரசியல் ரீதியாக எதிரும் புதிருமாக மோதி வருகின்றன. மத்திய அரசின் உளவுத்துறையான ஐ.பி-யின் தமிழக பிரிவு சென்னை மைலாப்பூரில் இயங்குகிறது. ஸ்பெஷல் டைரக்டர் அந்தஸ்தில் தமிழக ஐ.பி. தலைவராக ராஜன் இருந்துவந்தார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ராஜன், உளவுத்துறையில் நீண்டகால அனுபவம் கொண்டவர். அவரை திடீரென டெல்லிக்கு மாற்றியிருக்கிறது மத்திய உள்துறை.

சமீபத்தில் திருப்பதிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தார். மாநில அமைச்சர்களுடன் மாநாடு நடத்தினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. அவர் சார்பாக, அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். இந்த விசிட்டின் போது அமித் ஷா தமிழக அரசியல் நிலவரங்களை உளவுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தாராம். அவர் டெல்லி போனதும், பிரதமருடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, ராஜன் மாற்றப்பட்டிருக்கிறார். டெல்லி ஐ.பி.-யின் தலைமை அலுவலகத்தில் கூடுதல் டைரக்டர் அந்தஸ்தில் இருந்த ரவிச்சந்திரன், சென்னைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழகத்தில் பணியாற்றியவர்.

இந்த திடீர் மாற்றம் பற்றி உளவுத்துறை வட்டாரத்தில் பேசியபோது, ”ஆளுநர் ஆர்.என் ரவிதான் இந்த மாற்றத்திற்கு காரணம் என்கிறார்கள். அவரும், ரவிச்சந்திரனும் டெல்லியில் பல்வேறு சிக்கலான விவகாரங்களில் ஒன்றாக பணியாற்றியவர்கள். அந்தவகையில், ஆளுநர்தான், ரவிசந்திரனை கேட்டு வாங்கினாராம். ரவியும் ரவிசந்திரனும் இனிவரும் காலங்களில் ஆளும் தி.மு.க ஆட்சியினை பூதக்கண்ணாடி வைத்து கண்காணிக்கப்போகிறார்களாம்” என்கின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *