Share on Social Media


கொரோனா தொற்று பரவல் மெதுவாகக் குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. “தற்போதைய நிலவரப்படி 81 ஆயிரம் தடுப்பூசிகள் தமிழ்நாடு முழுவதும் இருப்பில் உள்ளன. தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்துக்கு 42 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 5.50 லட்சம் வரை வந்துள்ளது. 36.5 லட்சம் தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வளவு வருகிறதோ அவை உடனுக்குடன் மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது” எனத் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். மேலும், “தடுப்பூசியை வாங்கிக்கொள்ளத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் உலகளாவிய டெண்டர் கோரியிருந்தன. ஆனால், இந்த டெண்டர் நேற்றோடு நிறைவு பெற்றது. இதில், யாரும் பங்கேற்காததால், மறு டெண்டர் விடுத்து, தடுப்பூசியை நாமே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அவர் கூறியிருக்கிறார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் (07.06.2021) அமலுக்கு வந்துள்ளது. ஊரடங்கு விதிகளை மக்கள் முறையாகப் பின்பற்றி, தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மக்கள் வெளியில் சுற்றுவது அதிகரித்துள்ளது. “தடுப்பூசி இன்னும் பரவலாக வழங்கப்படாத சூழலில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு அறிவித்த தளர்வுகளைத் தவறாகப் பயன்படுத்துவதால் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது” என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

தடுப்பூசி பெறுவதில் பல்வேறு சிக்கல்களையும் நெருக்கடியும் சந்தித்து வரும் தமிழக அரசு அதைச் சரிசெய்வதற்கு என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம் “தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு வெளியிட்ட உலகளாவிய டெண்டரில் யாரும் பங்கேற்காததால் மறுபடியும் டெண்டர் விடப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை விரைவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் அல்லது டெண்டர்கள் மூலம் கொள்முதல் செய்வதற்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும் எனப் பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். ‘தடுப்பூசி உற்பத்திக்காக 35,000 கோடி ஒதுக்கியுள்ளீர்கள். அதன்மூலம் ஒன்றிய அரசுதானே மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.

இதுவரை ஏற்பட்ட அனைத்து சுகாதார பேரிடர்களுக்கும் ஒன்றிய அரசுதானே தேவையான தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து வழங்கியிருக்கிறது. மேலும், தேவையான தடுப்பூசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்யும்போது செலவும் குறையும். அதை விட்டுவிட்டு மாநிலங்களைத் தனித்தனியே கொள்முதல் செய்துகொள்ளச் சொன்னால் அதனால் தடுப்பூசிக்கான டிமாண்ட் அதிகரித்து விலை அதிகமாக வாய்ப்பும் இருக்கிறது. இதனால் மாநிலங்களுக்குத் தேவையில்லாத நிதிச் சுமை ஏற்படும் தானே’ என உச்ச நீதிமன்றமும் ஒன்றிய அரசை கிடுக்கிப்பிடி பிடித்துள்ளது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளால் இன்னும் ஓரிரு நாட்களில் ஒன்றிய அரசு நமக்குத் தேவையான தடுப்பூசியை ஒதுக்க வேண்டும் அல்லது மாநில அரசுகள் வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசி கொள்முதல் செய்து கொள்வதற்கான விதிகளைத் தளர்த்த வேண்டும். அமெரிக்காவில் இருக்கும் மனித உரிமைகள் ஆணையத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். பயோடெக் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். செங்கல்பட்டு ஹெச்எல்எல் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். தமிழக அரசு எடுத்துவரும் இப்படியான பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இன்னும் பதினைந்தே நாட்களில் மக்களுக்குத் தேவையான தடுப்பூசி எந்தத் தட்டுப்பாடும் இன்றி கிடைக்கும்” என்றார்.

பா.ஜ.க மூத்த நிர்வாகி திருப்பதி நாராயணனிடம் பேசினோம்…

“தடுப்பூசி தட்டுப்பாடே இல்லை. உற்பத்தியைப் பொறுத்துத்தான் விநியோகம் மற்றும் மக்களுக்குச் செலுத்தும் பணி தொடங்கும். எனவே, தட்டுப்பாடு என்பதே வடிவமைக்கப்பட்ட, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. ஊரடங்கைப் பொறுத்தவரைத் தளர்வுகள் என்பது அத்தியாவசியமானது. தடுப்பூசிகள் வழங்கப்பட்டால்தான் தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு இன்னும் நீண்ட நாட்கள் எடுக்கும். தளர்வுகள் இருந்தாலும் கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும். தேவைக்கேற்ப உற்பத்தி செய்யும் பொருள் அல்ல தடுப்பூசி. எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் தடுப்பூசியை உற்பத்தி செய்துவிடவும் முடியாது. தற்போது உலகம் தற்போது தடுப்பூசி தேவை இருக்கிறது. பல நாடுகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப தற்போதும் தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் நீடித்துவருகிறது.

நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி

அதிக தொழில்நுட்பமும், தகுதி வாய்ந்த ஆய்வாளர்கள், அதிக முதலீடு இருக்கும் நாடுகளால் மட்டும்தான் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும். அவர்களால் மட்டும்தான் மற்ற நாடுகளுக்கும் உதவ முடியும். அந்த வகையில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவை விட மக்களுக்கு அதிகளவு முதல் தடுப்பூசி செலுத்திய நாடும் இந்தியாதான். சரியான புரிதல் இல்லாமல் மலிவான அரசியலை முன்னிட்டு செய்யப்படும் விமர்சனம்தான் தடுப்பூசி தட்டுப்பாடு” என விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *