Share on Social Media


கோல்கட்டா : மத்திய அரசுடனான, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மோதல் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. தலைமைச் செயலரை திரும்பப் பெறும் உத்தரவை, ‘வாபஸ்’ பெறக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய சில மணி நேரத்தில், அவர் ஓய்வு பெற்றதாக அறிவித்து, புதிய பதவியை மம்தா வழங்கியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வரான திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறார்.சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் இது உச்சகட்டத்தை எட்டியது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.மேற்கு வங்கம், ஒடிசாவில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி சமீபத்தில் பார்வையிட்டார். மேற்கு வங்கத்தில், மோடி பங்கேற்ற ஆய்வு கூட்டத்தை, முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். அவருடன் தலைமைச் செயலர், அலபன் பந்தோபாத்யாயாவும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் தலைமைச் செயலரை, மத்திய அரசு பணிக்கு உடனடியாக திரும்பும்படி உத்தரவிடப்பட்டது. நேற்று ஓய்வு பெற இருந்த நிலையில், சமீபத்தில் தான், அவருக்கு மூன்று மாதம் பணி நீட்டிப்பை மத்திய அரசு அளித்திருந்தது.அவரை மத்திய அரசு பணிக்கு திரும்ப அழைத்ததற்கு மம்தா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவரை பணியில் இருந்து விடுவிக்கவும் மறுத்தார்.ஏற்க முடியாதுஇது குறித்து பிரதமர் மோடிக்கு, நேற்று எழுதியுள்ள கடிதத்தில், மம்தா கூறியுள்ளதாவது:பணி நீடிப்பு அளித்த சில நாட்களிலேயே, தலைமைச் செயலரை மத்திய அரசு திரும்ப அழைத்து உள்ளதை ஏற்க முடியாது.

கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், அவரை தற்போது விடுவிக்க முடியாது. அதனால் அவரைத் திரும்பப் பெரும் உத்தரவை வாபஸ் பெறும்படி வேண்டுகிறேன்.மாநில அரசுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்து உள்ளது; அது மாநில நிர்வாகம் மற்றும் மாநில மக்களின் நலனுக்கு எதிராக அமைந்துவிடும். அதனால், உத்தரவை திரும்பப் பெறும்படி, பணிவுடன் வேண்டுகிறேன்.அவருடைய பணிக்காலத்தை மூன்று மாதங்கள் நீட்டித்து ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு, சட்டத்துக்கு உட்பட்டு, தீவிர ஆலோசனைக்கு பிறகே பிறப்பிக்கப் பட்டிருக்கும்.

அந்த நல்ல முடிவு தற்போதும் பொருந்தும் என்ற நம்பிக்கையில், அவரை பணியில் இருந்து விடுவிக்க இயலாது.நம் சந்திப்புக்கும், மத்திய அரசின் உத்தரவுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது என நம்புகிறேன். தலைமைச் செயலரை திரும்பப் பெறும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மூன்றாண்டுகள்இந்த கடிதம் அனுப்பிய சில மணி நேரத்தில், அலபன் பந்தோபாத்யாய், பணி ஓய்வு பெற்றதாகவும், புதிய தலைமைச் செயலராக, எச்.கே. திவேதியை நியமிப்பதாகவும், மம்தா அறிவித்தார். அத்துடன், ‘அலபன் பந்தோபாத்யாய், மேற்கு வங்க அரசின் சிறப்பு ஆலோசகராக, மூன்றாண்டுகள் செயல்படுவார்’ என, மம்தா அறிவித்தார்.

மம்தா கூறியுள்ளதாவது:என் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியில் மத்திய அரசு மோசமாக நடந்து கொள்கிறது. சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததால், மோடி அரசு இவ்வாறு செயல்படுகிறது.அதிகாரிகளை கொத்தடிமைகளாக மோடி நினைக்கிறாரா. மத்தியப் பணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பல, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். அவர்களை நான் திரும்ப அழைத்துக் கொள்ளட்டுமா. ஹிட்லர், ஸ்டாலின் போன்ற சர்வாதிகாரி போல் மோடி நடந்து கொள்கிறார். அதிகாரிகளை மிரட்டி பார்க்கிறார். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ‘மத்திய அரசு பணிக்கு திரும்பும்படி பிறப்பித்த உத்தரவை மீறிய பந்தோபாத்யாய் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *