Share on Social Media


“சென்னையில், தொற்று குறைந்தாலும், தடுப்பு நடவடிக்கைகள் தொடரும்; கொரோனா மூன்றாவது அலை வந்தாலும், எதிர்கொள்ள தயராக இருக்கிறோம்,” என, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:சென்னையில் கொ ரோனா தொற்று குறைந்தாலும், தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது. மாநகராட்சி கள பணியாளர்கள், தற்போதும் வீடு, வீடாக சென்று, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபுணர்களுடன் நடத்திய ஆய்வு கூட்டத்தில், மூன்றாவது அலையை தடுக்க, தடுப்பூசி போடுவதும், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்வதும் அவசியம் என, வலியுறுத்தப்பட்டது.

இதற்கு முன்பே, மாநகராட்சி இம்முறையை பின்பற்றி வருகிறது. தினந்தோறும், சராசரியாக, 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அதேபோல், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.மும்பை, டில்லி உள்ளிட்ட நகரங்களை ஒப்பிடும்போது, சென்னையில் அதிகபட்சமாக, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கர்ப்பிணியர், அவர்கள் பரிசோதனை மேற்கொள்ளும், நகர்ப்புற சமுதாய மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல், பொது மக்களுக்கும், நெரிசல் இல்லாமல், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், முன்பதிவு செய்யவும், https://chennaicorporation.gov.in/gcc/covid-details/ என்ற இணையதளத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.மாநகராட்சி பல்வேறு வகையில், மூன்றாம் அலை வராமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு, பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.

— நமது நிருபர் –

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *