திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை: காசோலைகளை தமிழில் எழுத வேண்டும். இதை செய்தாலே தமிழக வங்கிகளில் இருந்து மொழி வெறியர்கள் விரட்டப்படுவர். அந்த இடத்தில் தமிழர்கள் நிரப்பப்பட வேண்டும் அல்லது இப்போது இருப்பவர்கள், தமிழை கற்றே ஆக வேண்டும். இன்னும் தங்களின் கையெழுத்தை கூட தமிழில் பதிக்க தயங்குபவர்களையும், மறுப்பவர்களையும் வைத்துக் கொண்டு, நாம் இங்கே என்ன மாற்றங்களைச் செய்து விட முடியும்?
தமிழ் மீதான உங்கள் ஆசையும், வெறியும் நியாயமானதே! ஆனால், வேலைவாய்ப்பு விஷயத்தில் தான் சற்று இடறுகிறது; தமிழக மக்கள் உலகெங்கும் பரவிக் கிடக்கின்றனர். அவர்கள் அனைவரும் நம் மாநிலத்திற்கே திரும்ப வேண்டி இருக்கும்; பரவாயில்லையா?
முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி: முன்னாள் அமைச்சர்கள் மீது நடத்தப்படும் சோதனை என்பது, சாதனை படைத்தவர்கள் மீது நடத்தப்படும் சோதனையாக எடுத்து கொள்கிறோம்.
லஞ்சமும், ஊழலும் கரை புரண்டு ஓடும் இந்த காலத்தில், ‘சாதனை’ப் பேச்சு பேசினால், ‘மாஜி’க்கள் எல்லார் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கத் துவங்குமே… தாங்க முடியுமா?
பத்திரிகை செய்தி: நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
‘சென்னையை மட்டும் அழகு படுத்துவது சரியில்ல’ என பலரும் கருத்து தெரிவிப்பதால், இப்போது நாகப்பட்டினம் செல்கிறதோ அரசு? ‘இதெல்லாம் சிறிய செலவு’ என்ற கணக்கில் சேர்ந்தாலும், கூட்டினால் பெரிய தொகை ஆகி விடுமே! அடிப்படை கட்டுமானங்களான மின் அமைப்பு, பாதாள சாக்கடை, நீர்நிலை பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க பணம் இருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி!
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: கொடைக்கானல் மற்றும் கோவை சரவணம்பட்டியில் பெண் குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பை அரசு பள்ளிகளால் தர முடியவில்லை என்றால், அதை விட மிகக் கொடிய கடமை தவறுதல் எதுவும் இருக்க முடியாது.
உண்மை தான். ஆனால், மாநிலமே ஏதோ அவசரகதியில் ஓடிக் கொண்டிருப்பதைப் போல் தோன்றுகிறது. கொரோனாவைக் கையாள வேண்டி இருக்கிறது; முதன்முதலாக கையில் பதவி வந்திருக்கிறது… நல்ல பெயர் எடுக்க வேண்டுமே என்ற பதற்றம் ஆகியவற்றால், கட்சியினரின் அராஜகப் போக்கை அடக்க முடியவில்லை; எங்கெல்லாம் இரும்புக் கரம் தேவை என்பதைத் தெளிவாக கவனித்து, அமல்படுத்த முடியவில்லை… என்ன செய்வது!
பத்திரிகை செய்தி: புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட சினிமா கட்டணத்தை குறைக்கவும், சுற்றுலா தளங்களில் படப்பிடிப்பிற்கான அனுமதியை எளிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சந்தானம், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தினார்.

சங்கீதமும், திரைப்படமும் பொழுதுபோக்கு வகையறாவைச் சேர்ந்தவை. அரசுகள் இவற்றின் வாயிலாக கட்டணம் வசூலித்து, பொதுமக்களுக்கு செலவழிப்பதில் தவறேதும் இல்லையே… உங்களைப் போன்ற முன்னணி நடிகர்களுக்கும், முன்னணி தயாரிப்பாளர்களுக்கும், முன்னணி இயக்குனர்களுக்கும் பண முடை ஏற்பட்டு விட்டதா என்ன!
மார்க்., கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் கட்டமைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.
சும்மா பேருக்கு ஒரு பேட்டி கொடுத்துட்டு இருக்கப் போகிறீர்கள். இந்நேரம், பள்ளி வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டிருந்தால், உண்மையான போராளி என, உங்களை கொண்டாடலாம். அந்த புகழ் வேண்டாமோ உங்களுக்கு?’
பாலியல் பலாத்காரத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும்’ என, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கர்நாடக மாநில காங்., – எம்.எல்.ஏ., ரமேஷ் குமார் சட்டசபையில் மீண்டும் பேச்சு: சட்டசபை மாண்பை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் அவ்வாறு பேசவில்லை. என் பேச்சு, யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்கிறேன்.
அருவறுக்கும் வகையிலான சிந்தனை உள்ளவரை கர்நாடக மாநிலம் எம்.எல்.ஏ.,வாக வைத்திருப்பது வேதனை தான்.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சண்முகம் பேச்சு: ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த முதல்வர் ஸ்டாலின், கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஒரு கோடி கொடுக்க வேண்டியது தானே?
‘ஓ… ஸ்டாலினைப் போல பணக்காரராக வேண்டும் என்பதால் தான் அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களும் போட்டி போட்டு, அரசு டெண்டர்கள் எடுத்து, ‘காசு’ பார்த்தனரோ…’ என, விவரம் அறிந்த அரசு அதிகாரிகள் யாராவது கேள்வி கேட்டால், பதில் சொல்வீங்களா சார்?