சென்னை: பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோயில் வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியை காணொலியில் காணும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொள்வற்கு தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை காஞ்சிபுரம் வந்தார். முதலில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் தரிசனம் செய்தபிறகு பிரதமரின் வாரணாசி நிகழ்ச்சியை காணொலி மூலம் கட்சித் தொண்டர்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மோடி ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை.
எனவே மாநில அரசு ஒன்றிய அரசு மீது புகார் அளிப்பதை தவிர்த்து விவசாயிகளுக்காக என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். ஒன்றிய அரசுடன், மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும். யாரெல்லாம் கடவுளை நம்பி ஆன்மிகத்தை நம்பி கோயிலில் சாமி தரிசனம் செய்ய விரும்புகின்றார்களோ, அவர்களுக்கு நமது நம்பிக்கையில் நிச்சயமாக இடம் இருக்கிறது. பாரபட்சம் இல்லாமல் யாரெல்லாம் தவறு செய்து இருக்கிறார்களோ அவர்கள் மீது நாளை எப்ஐஆர் பதிவு செய்தால் காவல்துறை தலைவரை முதல் ஆளாய் பாஜ வரவேற்கும். இவ்வாறு அவர் பேசினார்.