Share on Social Media


அதிக ஜி.எஸ்.டி., வருவாய் தரும், எதிர்க்கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், ராஜஸ்தான், தமிழகம், கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப், டில்லி, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் கோரிக்கைகளை, அரசியல் உள்நோக்கத்தோடு பார்ப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
– தமிழக காங்., தலைவர் அழகிரி

‘தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் கொளுத்தி போட்டுள்ளார்; நீங்கள் உயர்த்தி பிடிக்கிறீர்கள்… அவரே வெத்து வேட்டாய், புரியாமல் ஏதோ, ‘அடித்து விட்டிருக்கிறார்’ என, வல்லுனர்கள் சொல்கையில், தேவையா இது உங்களுக்கு…’ என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை.

அனாதரவான குழந்தைகளுக்கு நிதிஉதவி அளித்ததன் மூலம், தமிழக அரசு, மணிமேகலை காப்பியத்தில் வரும் அமுதசுரபி போல ஆகி விட்டது. மனிதநேயத்தின் மறுபதிப்பாக முதல்வர் ஸ்டாலின் விளங்குகிறார்.
– ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ

‘முதல்வராக ஜெ., இருந்தபோது, செ.கு.தமிழரசன் என்ற எம்.எல்.ஏ., தமிழக அரசு என்ன செய்தாலும், இப்படித் தான், ‘பாராட்டுவார்!’ அது நினைவுக்கு வருகிறது…’ என, கூறத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை.

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தில், தடுப்பூசி தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு, ‘பரிசீலித்து விரைவில் தகவல் தெரிவிக்கப்படும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
– விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிக்குமார்

‘உங்கள் கட்சித் தலைவராக இருந்திருந்தால், இதை அனுமதிக்கவில்லை என்றால் சிறுத்தைகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றிருப்பார்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிக்குமார் அறிக்கை.

கொரோனா நோய்க்கு மக்கள் செத்து மடிவதைத் தடுக்க, மோடி அரசு, காலம் தாழ்த்துவதைத் தவிர்த்து, உடனடியாக அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். 7,500 ரூபாய் நிவாரணத்தையும் விரைந்து வழங்க வேண்டும்.
– அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் லாசர்

‘தடுப்பூசியை மோடியா வந்து போட்டு விட முடியும்… அவரவர் ஆர்வமாக போட்டுக் கொள்ள வேண்டியது தான்…’ என, கூறத் தோன்றும் வகையில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் லாசர் அறிக்கை.

தமிழகத்திலிருந்து பா.ஜ.,வுக்கு எம்.பி.,க்கள் இல்லாவிட்டாலும், தி.மு.க., செய்தி தொடர்பாளர் சொன்னது போல, ‘கோவைக்கு தடுப்பூசியை, பிரதமரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்’ என, பா.ஜ.,வில் யாரும் பேசியதில்லை. தி.மு.க., எப்போதுமே தமிழர்கள் விரோத கட்சி தான் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
– பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா

‘இன்னும் கொஞ்சம் பொறுங்கள். கொரோனா ஓயட்டும். அவர்களின் ஒரிஜினல் முகம் தெரியும் பாருங்கள்…’ என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா அறிக்கை.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *