Share on Social Media


சென்னை: தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் மிகுந்த தொலைநோக்கு பார்வையோடு தயாரிக்கப்பட்டுள்ளது என்று அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): திமுக அரசு பொறுப்பேற்று, முதல் நிதிநிலை அறிக்கையின் மூலம் தமிழகத்தை தலைநிமிர வைக்கும் தொலைநோக்கு திட்டங்கள் ஏராளமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்த மக்களும் பயனடையும் வகையில் மிகுந்த தொலைநோக்கு பார்வையோடு தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்): தமிழ்நாடு அரசின் 2021-22ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையை படித்தேன். பல மக்கள் நலத் திட்டங்கள் புத்துயிர் பெற்றிருப்பதை வரவேற்கிறேன். பெருந்தொற்றின் தாக்கத்தில் மக்கள் இன்னும் துன்பத்தில் இருப்பதை உணர்ந்து நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் அளித்திருக்கிறார். இன்னும் 6 மாதத்தில் தரவிருக்கும் 2022-2023ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் பல முன்னேற்றம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): ஊரக வேலை உறுதித்திட்ட வேலை நாட்களின் எண்ணிக்கை நூறிலிருந்து 150 ஆக உயர்த்தப்படும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2756 கோடி கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல்  வாக்குறுதிகள் பட்ஜெட்டில் வெளியாகியுள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகியவை கலந்த கலவையாக உள்ளது.

வைகோ (மதிமுக பொது செயலாளர்):அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, மின்னணு கொள்முதல்,  அனைத்துத் துறைகளிலும் முழுமையாகக் கணினி மயம் போன்ற அறிவிப்புகள் மூலம்,  ஊழல் அற்ற நேர்மையான திறன் மிகுந்த அரசு நிர்வாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்து இருக்கிறார். மொத்தத்தில் பொற்கால ஆட்சிக்கான திறவுகோலாக நிதிநிலை அறிக்கை அமைந்து இருக்கிறது. வரவேற்கிறோம்;  பாராட்டுகிறோம்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): பெட்ரோல் மீதான வரியில், தற்போது 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 ரூபாய்க்கு கீழ் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. இது சாமான்ய மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதால் பெட்ரோல் விலை குறைப்பை தேமுதிக வரவேற்கிறது. இந்த பட்ஜெட் நடுநிலையான பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): இதுநாள் வரை நடைமுறையில் இருந்து வரும் அரசியல் சலுகைகளும், மானியங்களும் தொடரும் என்பதுடன் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு போன்றவற்றை தொழிலாளர்களும், மாத ஊதிய பிரிவினரும் நன்றி பாராட்டி மகிழ்வார்கள். நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு தலை நிமிர்ந்து நடைபோட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையை வெளிப்படுத்தும் அரசின் நிதிநிலை  அறிக்கையை வரவேற்கிறோம்.  

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை பொதுவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்பதோடு,  தற்போது பெரும் நட்டத்தில் உள்ள தமிழக பொதுத்துறை நிறுவனங்களை சீரமைத்து வலுப்படுத்த வேண்டும்.

திருமாவளவன் (விசிக தலைவர்): அனைத்து தளங்களிலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டை மீட்டு வளர்ச்சிப் பாதையில் செலுத்துகிற வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள திமுக அரசின் நிதிநிலை அறிக்கை.
வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்): தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி, ஏழைகளின் நலன், இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இது போல தமாகா தலைவர் ஜி.கே.வாசன், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர்  நெல்லை முபாரக், தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *