Share on Social Media


கடந்த, அ.தி.மு.க., ஆட்சியால் இப்போது, தமிழக அரசு, ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. எனவே, அரசுக்கு வணிகர்கள் தவறாமல் வரி செலுத்த வேண்டும். போலி பில்களை தயாரிக்கும் நபர்களை, வணிகர்கள் அடையாளம் கண்டு, அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
– தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி

‘தமிழக அரசின் கடனை அடைக்க, தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் சம்பளத்தை விட்டுக் கொடுக்க முன்வருவரா…’ என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேச்சு.

புதிய ஓய்வூதியத் திட்டம் 2003ல், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதை தடுக்காமல், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவில்லை என இப்போது, முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள் கூறுவது வேடிக்கையாகவுள்ளது.
– அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலர் செல்வம்

‘வழக்கமாக அரசு ஊழியர் சங்கம், ஆளும் அரசுக்கு எதிராகத் தானே குரல் கொடுக்கும்; நீங்கள் வித்தியாசமாக, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பேசுகிறீர்களே…’ என, கேட்கத் தோன்றும் வகையில், அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலர் செல்வம் பேட்டி.

வக்பு வாரியத்தின் சொத்துக்களை கண்டறியும் பணி நடக்கிறது. 7,000 இடங்களில் அவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதற்கான பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு, மீட்கும் பணி துவங்கப்படும்.
– சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான்

‘முஸ்லிம்களின் வக்ப் வாரிய சொத்துகள் ஆக்கிரமிக்கப்படாமல் காக்கவும், நிர்வகிக்கவும் தானே வக்ப் வாரியம் உள்ளது. அவர்கள் என்ன செய்தனர்…’ என, கேட்கத் தோன்றும் வகையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் பேட்டி.

திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் படைப்பு சுதந்திரத்தின், கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் திரைப்பட சட்ட திருத்தங்களை மோடி அரசு திரும்ப பெற வேண்டும்.
– மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன்

‘தியேட்டர்கள் செயல்பட இன்னும் அனுமதி அளிக்கப்படாத நிலையில், சட்ட திருத்தங்கள் இப்போது அவசியமா…’ என, மத்திய அரசிடம் கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் அறிக்கை.

உடல் என்பது வெவ்வேறு அங்கங்களின் தொகுப்பு அல்ல. மாறாக, அங்கங்கள் உடலின் ஒருங்கிணைந்த பாகங்களாகும். அதுபோலவே, இந்தியா என்பது உடல்.
– தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

‘இப்படித் தான் அவர்களும், அங்கங்கள் இல்லாவிடில் உடல் இல்லை என விதண்டாவதம் பேசுகின்றனர்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.

கடந்த மாதம் மட்டும் 11.50 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கிஉள்ளது. இந்த உண்மை புரியாமல், தடுப்பூசியின் உன்னதத்தை மறைக்கும் வகையில் அறிக்கை விட்டுள்ள காங்., முன்னாள் தலைவர் ராகுலை கண்டிக்கிறேன்.
– மத்திய இளைஞர் நலத்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு

‘துவக்கத்தில் இருந்தே, தடுப்பூசிக்கு எதிராக ராகுல் பேசி வருகிறார். தடுப்பூசியை பிடிக்காததால் தான், தடுப்பூசி போட்டதை கூட மறைத்து வைத்துள்ளாரோ…’ என, சொல்லத் தோன்றும் வகையில், மத்திய இளைஞர் நலத்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு அறிக்கை.

மிகப் பெரிய சர்வதேச நிறுவனங்கள் பல, தமிழகத்தில் தொழில் துவங்க ஆர்வமாக உள்ளன. அவற்றுடன் பேச்சு நடந்து வருகிறது. விரைவில் மேலும் பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில்களை துவக்கும்.
– தமிழக தொழில் துறை அமைச்சர் தென்னரசு

‘தமிழகத்தில், தி.மு.க., தலைமையில் ஆட்சி மலர்ந்துள்ளது; பாலாறும், தேனாறும் தான் இனி ஓடும் என அந்த நிறுவனங்கள் நினைத்திருக்கலாம்…’ என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், தமிழக தொழில் துறை அமைச்சர் தென்னரசு பேச்சு.

தமிழகத்தில் உள்ள தலைவர்களின் நினைவிடங்கள், நினைவுச்சின்னங்களை பராமரிக்கும் பொறுப்பை, லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம் போன்ற சங்கங்களிடம் ஒப்படைக்கலாம். இதனால் அவற்றின் பராமரிப்பு சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம்.
– தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்

‘தேவையற்ற பல தலைவர்களுக்கு நினைவிடங்கள், நினைவுச்சின்னங்களை அரசு தான் பராமரிக்க வேண்டுமா; அந்தந்த கட்சி, அமைப்புகளிடம் விட்டு விடலாமே…’ என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேச்சு.

டாஸ்மாக் கடைகளில் 18 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்களின் பணியை வரன்முறைப்படுத்தி, பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
– ‘டாஸ்மாக்’ ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச் செயலர் திருச்செல்வன்

‘அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தருபவர்களுக்கே சம்பளம் பத்தவில்லை என்றால், பிற துறைகள் எதற்கு…’ என, ஜாலியாக சொல்லத் தோன்றும் வகையில், ‘டாஸ்மாக்’ ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச் செயலர் திருச்செல்வன் அறிக்கை.

தமிழகத்தில், பல கிராமங்களில், கிறிஸ்தவ அமைப்புகளில், ஜாதி அடிப்படையில் இரண்டு வழிபாட்டு தலங்கள், இரண்டு கல்லறைகள், இரண்டு பிண ஊர்திகள் போன்றவை உள்ளன. மேலும், ‘சர்ச்’ நிர்வாகத்தில் தலித்துகள் பங்கேற்க தடையும் விதிக்கப்படுகிறது.
– தமிழக தலித் கிறிஸ்தவ இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மேத்யு

‘அட, இப்படியும் இருக்குமா… நிச்சயம் இது சரி செய்யப்பட வேண்டும். கிறிஸ்தவத்தில் நிலவும் இந்நிலை, மிகவும் வருந்தத்தக்கது…’ என, கூறத் தோன்றும் வகையில், தமிழக தலித் கிறிஸ்தவ இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மேத்யு பேட்டி.

தே.மு.தி.க., எப்போதுமே வலிமையான கட்சி. அரசியலில் வெற்றியும், தோல்வியும் சகஜம். வெற்றியைக் கண்டு ஆணவப்படும், தோல்வியைக் கண்டு துவண்டு போகும் கட்சி அல்ல தே.மு.தி.க.,
– தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா

‘கட்சி இனி தேறாது; இந்த அம்மா சும்மா சொல்கிறார் என, கட்சியின் தொண்டர்களும், ஆதரவாளர்களும் தான் துவண்டு விட்டனர்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேட்டி.

AdvertisementSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *