Share on Social Media


புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணையை திறந்த தமிழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள காங்கிரஸ் எம்.பி.,க்கள் பாராளுமன்றத்தில் காந்தி சிலை முன் அமர்ந்து கையில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி அருகே அமைந்துள்ளது. கேரளாவில் அணை அமைந்திருந்தாலும் அதை நிர்வகிக்கும் உரிமை தமிழக அரசிடம் உள்ளது. 19ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இவ்வணையின் மொத்த உயரம் 176 அடி. உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி அணையில் 142 அடி வரை நீரை பராமரிக்கலாம். அணை வலுவாக இருப்பதாக நிபுணர் குழு சான்றளித்துள்ளது. தற்போது கேரள காங்கிரஸ் அணையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி அங்கு அரசியல் செய்து வருகின்றது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் 9 கதவுகளையும் தமிழக அரசு திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அணையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டதாகவும், தமிழக அதிகாரிகள் மக்களின் உயிருடன் விளையாடுவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் முல்லைப் பெரியாறு அணையிடமிருந்து கேரளாவை காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பாராளுமன்றத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இது பற்றி கேரள காங்., எம்.பி., ஜோஸ் கே. மணி கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது. இந்த அறிவிக்கப்படாத முடிவால் முல்லை பெரியாற்றின் கரையோர தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அணையின் நீர் தமிழகத்துக்கு சொந்தமானது, அதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், கேரள மக்களின் பாதுகாப்பையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *