Share on Social Media

இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் 7 விக்கெட்கள் வீழ்த்தி, ஓவர்சீஸ் கண்டிஷன்களுக்கு ஒத்து வரமாட்டார் என்ற வாதங்களை உடைத்து நொறுக்கியிருக்கிறார் அஷ்வின். இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கு ‘ஆல் செட்’ என சூப்பர் ஃபார்மில் தயாராகியிருக்கிறார்.

இங்கிலாந்து – இந்திய டெஸ்ட் தொடருக்கு முந்தைய, சிறிய இடைவெளியில், மற்ற வீரர்கள், பயோபபிளுக்கு வெளியே, ஓய்வெடுத்துக் கொண்டுள்ள வேளையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் மட்டும், இங்கிலாந்து பிட்சுகளின் நீள, அகலம், தன்மைகளுக்குப் பழக கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆடுகிறார்.

இதற்கு முன்னர் வொர்செஸ்டர்ஷையருக்காக 2017-லும், நாட்டிங்காம்ஷையருக்காக 2019-லும் ஆடியுள்ளார் அஷ்வின். இம்முறை, கவுன்ட்டி போட்டிகளில், சர்ரே அணியின் சார்பாக களமிறங்கி ஆடி வரும் அஷ்வின், ஓவலில் நடைபெற்ற, சாமர்செட்டுக்கு எதிரான போட்டியில், இரண்டு இன்னிங்ஸுக்கும் சேர்த்து, மொத்தமாக ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

அஷ்வின்

இரண்டாவது இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட, அஷ்வினின் 6 விக்கெட் ஹால்தான் முக்கியத்துவம் வாய்ந்தது‌. இந்தப் போட்டியின், முதல் இன்னிங்சில், சாமர்செட் களமிறங்க, போட்டியின் முதல் பந்தையே அஷ்வின்தான் வீசினார். கடந்த 11 ஆண்டுகால கவுன்ட்டி வரலாற்றில், சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் முதல் ஓவரை வீசுவது, இதுவே முதல்முறை. அந்தளவு, நம்பிக்கையையும் பொறுப்பையும் சுமந்து ஆரம்பித்த அவரது பந்துவீச்சு, முதல் இன்னிங்சில் சிறப்பாகவே இருந்தது. சரியான லைன் அண்ட் லென்த்தில் பந்து வீசி நெருக்கடி தந்தார். ஆனால், மளமளவென விக்கெட்டுகளை வீழ்த்துவார் எனக் கருதப்பட்ட நிலையில், முதல் செஷன் ஆட்டம் முழுவதும், அஷ்வின் விக்கெட் எடுக்கவில்லை.

இந்நிலையில், அவர் எந்த அணிக்காக ஆடினாரோ, அதே சர்ரே அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அஷ்வின் ஃபீல்டிங் செய்வதைப் போன்ற படத்தை வெளியிட்டு, ‘’இன்னமும் விக்கெட் எடுக்கவில்லை’’ என சிரிக்கும் எமோஜி போடப்பட்டிருந்தது. வீரர்கள், சக வீரர்களாலோ, எதிரணியாலோ, கேலிக்கு ஆளாகும் கதைகளைப் பார்த்திருக்கிறோம்தான். ஆனால், சொந்த அணியே, அதுவும் 400 டெஸ்ட் விக்கெட்டுகளுக்கு மேல் வீழத்தி இருக்கும் ஒரு நட்சத்திர வீரரை, கிண்டல் செய்து ஒரு ட்வீட் போட்டிருந்தது. இது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. அஷ்வினும் 43 ஓவர்களை வீசி, 99 ரன்களை கொடுத்து, ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தி இருந்தார்.

இங்கிலாந்து தொடருக்கான, பயிற்சியாக அமையட்டும் என களம் கண்டவருக்கு, இன்னொரு சவாலாக இது அமைய, அதனை ஏற்று, இரண்டாவது இன்னிங்ஸில், ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி, “யாரென்று தெரிகிறதா?” என தான் சார்ந்த அணிக்கே தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார் அஷ்வின்.

Screenshot 2021 07 16 164547 Tamil News Spot
அஷ்வின் – Surrey Cricket

முதல் இன்னிங்சில், சாமர்செட், 429 ரன்களைக் குவித்திருந்தது. சர்ரே அணி, வெறும் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிலும், ஆறாவது வீரராக இறங்கிய அஷ்வின், லீச்சின் பந்தில், கோல்டன் டக்காகி வெளியேற, பேட்டிங்கிலும் ஏமாற்றினார். இந்நிலையில், 189 ரன்கள் முன்னிலை என்ற நிலையில், நம்பிக்கையோடு இன்னிங்ஸை தொடங்கிய சாமர்செட் அணிக்கு, ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார், அஷ்வின்.

இடக்கை ஆட்டக்காரரான, டேவீஸுக்கு நெருக்கடி தந்து, போட்டியின் ஏழாவது ஓவரிலேயே, 7 ரன்களோடு களத்தில் இருந்த டேவீஸை வெளியேற்றினார். இதன்பிறகு, ஒன் டெளனில் இறங்கிய இன்னொரு இடக்கை ஆட்டக்காரரான டாம் லாமன்பையின் விக்கெட்டை வீழ்த்தவும், அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை அஷ்வின். தான் வீசவந்த அடுத்த ஓவரிலேயே, அவரையும் அனுப்பி வைத்தார். முதல் இன்னிங்சிலும், அவர் அஷ்வினின் பந்தில்தான் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இடக்கை ஆட்டக்காரர்களின் விக்கெட் மீதான அஷ்வினின் அதிதீவிர அன்பு இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது.

Also Read: ஸ்மிருதி மந்தனாவின் மிரட்டல் பேட்டிங்… ஆனாலும், இங்கிலாந்திடம் தொடர் தோல்வி ஏன்?!

ஒரு ஓப்பனரையும், ஒன் டெளனில் இறங்கியவரையும் காலி செய்தவரின் கண்கள், அடுத்ததாக, மிடில் ஆர்டர் வழியாக ஊடுருவிச் சென்றது. கேப்டன் ஹில்டிரெத்தை, எல்பிடபிள்யூவில் ஆட்டமிழக்கச் செய்ய 31/3 என தடுமாறியது சாமர்செட் அணி. இதன்பிறகு, பார்ட்லெட்டின் ஆஃப் ஸ்டம்பை சிதறச் செய்து அனுப்பி வைத்தார் அஷ்வின்.

இதன்பின்னர், வான் டர் மெர்வை எல்பிடபிள்யூ ஆக்கியதன் வாயிலாக, தனது ஐந்து விக்கெட் ஹாலைப் பதிவு செய்த அஷ்வின், வீசிய பத்தே ஓவர்களில், ஐந்து விக்கெட்டுகளை வெட்டி வீழ்த்தி இருந்தார். கவுன்ட்டி போட்டிகளில், இது அஷ்வினின் ஏழாவது ஐந்து விக்கெட் ஹால் என்பது குறிப்பிடத்தக்கது.

E6Qi 07XEAMjp44 Tamil News Spot
அஷ்வின்

இறுதியாக, பென் கிரீனை க்ளீன் போல்டாக்கியதன் மூலம், தனது ஆறாவது விக்கெட்டையும் எடுத்தார் அஷ்வின். வெறும் 69 ரன்களுக்கு, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது சாமர்செட். அந்த இன்னிங்ஸில் வீசப்பட்ட, 30 ஓவர்களில், 15 ஓவர்களை, அஷ்வின்தான் வீசி இருந்தார். அந்த இன்னிங்ஸின், ஒற்றைப்படை எண்ணுடைய ஓவர்கள் அனைத்துமே அஷ்வினால் வீசப்பட்டவைதான்.

ஒரே ஸ்பெல்லில், ஒரு மூச்சில், ஆறு பேட்ஸ்மேன்களை பேக் செய்து அனுப்பிய அஷ்வினின் மந்திர ஸ்பெல்லால், 69 ரன்களுக்கு எதிரணியைச் சுருட்டிய சர்ரே அணி, அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி, 106/4 என முடித்து போட்டியை டிராவாக்கியது.

தனது வீரர் என்று கூட யோசிக்காமல், கேலி செய்த சர்ரேவுக்கு, தனது பந்தால் பதிலடி கொடுத்திருக்கிறார் அஷ்வின். மேலும், இந்திய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின், இங்கிலாந்து மண்ணில், தன்னுடைய திறனைக் காட்டியுள்ளது, வர இருக்கும் டெஸ்ட் தொடருக்கு, இந்தியாவுக்கான அதிரடி முன்னோட்டமாக இருக்கிறது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *