தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் சம்பளக் குறைப்பு, பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூகுள் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி ஆல்ஃபபட் இன்க் நிறுவனம், தனது ஊழியர்கள் அனைவரும் ஜனவரி 18 ஆம் தேதிக்குள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. அவ்வாறு ஜனவரி 18க்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு 30 நாட்களுக்கு ஈட்டு விடுப்பு அளிக்கப்படும். அதன் பின்னர் 6 மாதங்கள் வரை ஈட்டா விடுப்பு அளிக்கப்படும். அப்போதும் கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் பணி நீக்க நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் மீண்டும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி எதிர்பபாளர்களையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் அதிபர் பைடனின் தடுப்பூசி கட்டாயம் உத்தரவைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளது. ஒன்றரை லட்சம் ஊழியர்கள் கொண்ட கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் தடுப்பூசி செலுத்த ஊக்குவித்து வருகிறது.
கூகுள் அலுவலகத்துக்குள் நுழையும் யாராக இருந்தாலும் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. தடுப்பூசிக்கு வேறு எதுவுமே மாற்றில்லை என்றும் கூகுள் வலியுறுத்தியுள்ளது.