Share on Social Media


புழல்-மாநகராட்சி மருத்துவமனை ஊழியர்கள், கொரோனா தடுப்பூசிக்கு, ‘லஞ்சம்’ வாங்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்த புகாரை, போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 23வது வார்டில், மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை உள்ளது. இங்கு, ஏப்., முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல், தடுப்பூசி இருப்பு இல்லை என பலரை திருப்பி அனுப்பி உள்ளனர்.

புழல் அடுத்த விநாயகபுரம், கல்பாளையம், சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்த நந்தகோபால், 29, நேற்று காலை, தடுப்பூசி போட்டுக் கொள்ள, அவரது மனைவியுடன் சென்ற போதும், தடுப்பூசி இல்லையென, ஊழியர்கள் கூறியுள்ளனர்.அவர் வெளியே வந்த போது, அங்குள்ள காவலாளி தினகரன், 42, என்பவர் அவர்களை நெருங்கி, ‘கோவிட்ஷீல்டுக்கு, 500 ரூபாய்; கோவாக்சினுக்கு, 800 ரூபாய் கொடுத்தால், தடுப்பூசி கிடைக்கும்’ என, ரகசியமாக கூறியுள்ளார். இதையடுத்து, நந்தகோபால், அங்குள்ள மற்றொரு ஊழியர் பிரசாத், 18, என்பவரை சந்தித்து பேச, அவரும் பணம் கொடுத்தால் தடுப்பூசி கிடைக்குமென கூறியுள்ளார்.

இதனால், 300 ரூபாய் ரொக்கமாகவும், 200 ரூபாயை, ‘கூகுள் பே’ மூலமும், நந்தகோபால் கொடுத்துள்ளார்.அவர் கொடுத்த துண்டு சீட்டு மூலம், அங்குள்ள மருத்துவர், நந்தகோபாலுக்கு, ‘கோவிட்ஷீல்டு’ தடுப்பூசி செலுத்திஉள்ளார்.தடுப்பூசிக்கு லஞ்சம் வாங்குவதால், அதிருப்தியான நந்தகோபால், அதற்காக நடந்த பேச்சுவார்த்தை மற்றும், ‘கூகுள் பே’ வில், பிரசாத் என்ற ஊழியரின் மொபைல் போனுக்கு, 200 ரூபாய் அனுப்பியதற்கான ‘ஆடியோ, வீடியோ’ ஆதாரங்களுடன், புழல் போலீசாரிடம் புகார் செய்தார்.

இது குறித்து, இருவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.முறைகேடு பணத்திற்காக, வசதியானவர்களின் வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் முறைகேடு, மாதவரம் மண்டலத்தில் தொடர்ந்து நடக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன், 25 மற்றும் 28வது வார்டுகளில், மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறையினர் இணைந்து, இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், புகார் எழுந்தது. தற்போது, அதை உறுதிப்படுத்தும் வகையில், இச்சம்பவம் நடந்துள்ளதாக, பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *