Share on Social Media


பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றியபோது “கொரோனா நமது மிகப்பெரிய எதிரி. அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தடுப்பூசி தயாரிப்பதற்கு முன்பே முன் களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்துச் சேவையாற்றினர். தடுப்பூசியைப் பொறுத்தவரையில் சில இடங்களில் பற்றாக்குறை நிலவுகிறது. இது விரைவில் சரி செய்யப்படும். தடுப்பூசியை வாங்குவது உள்ளிட்டவற்றை நாங்களும் செய்கிறோம் என சில மாநில அரசுகள் வலியுறுத்தின. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் சில மாநிலங்களுக்கு மாற்று கருத்து இருந்தன. தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என மாநிலங்கள் கோரின. இதனையடுத்து அவர்களுக்கும் உரிமை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் உள்ள சிக்கல்களை மாநில அரசுகள் உணர்ந்து விட்டன. தற்போது மத்திய அரசே இதைச் செய்யட்டும் என்று அந்த மாநில அரசுகள் கூறுகின்றன. இதனால் மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியைத் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையைத் தொடரும். ஜூன் 21-ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு இது அமலில் இருக்கும். நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாகவே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். எனினும் தனியார் மருத்துவமனைகள் மூலம் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள விரும்பினால் அதற்கும் அனுமதி வழங்கப்படும்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இன்று வரை 23 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்னும் ஓராண்டில் கொரோனா பரவலைத் தடுக்க இன்னும் 2 தடுப்பூசி விரைவில் வரவுள்ளன. மேலும் 3 தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும். கொரோனா தடுப்பு மருந்து விரைவில் வரும். தடுப்பூசி குறித்து சிலர் தவறான பிரசாரம் செய்கின்றனர். இதைக் கைவிட வேண்டும்” எனப் பேசினார்.

மத்திய அரசு கொரோனா தடுப்பூசியில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதற்குக் காரணம் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்தானா எனவும் இதனால் மாநிலங்களுக்கு என்ன பயன் எனவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம் “மோடி பிரதமரானதும் மாநிலங்களிடம் இருந்து வரி விதிக்கும் உரிமையை முழுமையாக அபகரித்துவிட்டார். தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கொடுக்கும் வரியில் தான் ஒன்றிய அரசே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அதிக வரி செலுத்தும் நம்மைப் போன்ற மாநிலங்களைத் தவிர்த்து குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்கள்தான் அதிகப் பலன் அடைகின்றன. நம்மை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. எனவே, ஒன்றிய அரசு என்ன முடிவு எடுத்தாலும் அதனால் நமக்கு எந்தப் பலனும் இல்லை. தொடக்கத்திலிருந்தே கொரோனா தொடர்பான நிர்வாக முடிவை எடுப்பதில் தெளிவான புரிதலோ திட்டமிடலோ இல்லை. முடிவை முதலில் அறிவித்து விட்டு அந்த அறிவிப்புக்கு ஏற்ப விதிகளை வகுத்து கொள்கிறது பா.ஜ.க அரசு. பண மதிப்பிழப்பு, வேளாண் சட்டம், சிஏஏ என அனைத்திலும் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறார்கள்.

பீட்டர் அல்போன்ஸ்

பீட்டர் அல்போன்ஸ்

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கிய ஆயுதமான தடுப்பூசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளை விநியோகம் செய்யச் சொல்ல வேண்டும் எனக் கடந்த மே மாதத்திலேயே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். 1971-இல் கொண்டுவரப்பட்ட தடுப்பூசி கொள்கையின்படி எந்தத் தொற்றாக இருந்தாலும் ஒன்றிய அரசுதான் கொள்முதல் செய்துதர வேண்டும். அதனடிப்படையில் தான் காலரா, காசநோய், தட்டம்மை உள்ளிட்ட பல பெருந்தொற்றுகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி இந்திய வரலாற்றில் முதல் முறையாகத் தடுப்பூசி கொள்கையைப் புறந்தள்ளியதோடு ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் தனியாருக்கு என மூன்று விதமான விலையை நிர்ணயித்தது. இதைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம் அந்த முடிவு பகுத்தறிவுக்கு ஒவ்வாதது, ஒருதலைபட்சமானது, எதேச்சதிகாரமானது எனக் கடுமையாகச் சாடியது. மேலும், தடுப்பூசி தொடர்பாக ஒன்றிய அரசின் தெளிவான கொள்கையையும் பல தரப்பட்ட விலை நிர்ணயம் தொடர்பாக அரசு எடுத்த முடிவுகளை உள்ளடக்கிய அரசாங்கத்தின் கோப்புகளையும் 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதனால்தான் தற்போது மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசியை ஒன்றிய அரசே வழங்கும் எனப் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். 200 கோடி தடுப்பூசி தேவை. தற்போதைய உற்பத்தி வேகத்தின் அடிப்படையில் இந்த இலக்கை அடைய ஏறக்குறைய ஓராண்டிற்கும் மேலே ஆகும் என்கிறார்கள். இந்தச் சூழலில் 25 விழுக்காட்டை தனியாருக்கு ஒதுக்குவதை எப்படிப் பார்ப்பது. எல்லோருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் அல்லவா இவர்கள் தனியாருக்கு ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும்.

தடுப்பூசிகள்

தடுப்பூசிகள்

கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் ஒதுக்கீடு, பி.எம்.கேர்ஸ் நிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை வேண்டும். மக்கள் தொகையின் அடிப்படையில், தொற்றின் அடிப்படையில் தான் தடுப்பூசி ஒதுக்கப்படும் என்று சொல்கிறார்கள். இது தவறானது. ஏனெனில் தொற்று எண்ணிக்கை ஏற்ற இறக்கத்தில்தான் இருக்கும். அப்படியே பார்த்தாலும் நம்மைவிட எல்லாவற்றிலும் குறைவாக உள்ள குஜராத்திற்கு அதிகளவில் தடுப்பூசி ஒதுக்கப்பட்டிருக்கிறதே எப்படி? மக்கள் தொகையின் அடிப்படையிலும் தேவையின் அடிப்படையிலும் தான் தடுப்பூசி ஒதுக்கப்பட வேண்டும்” என்றார்.

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்து தமிழக பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரனிடம் பேசினோம் “யாருக்குத் தேவை அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும். அதன் அடிப்படையில்தான் தடுப்பூசி தயாரித்ததும் அதை முன்களப் பணியாளர்களுக்குக் கொடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அப்படிக் கொடுத்ததால்தான் இரண்டாம் அலையின் போது மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் எந்த அச்சமும் இன்றி தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முடிந்தது. அதன் அடிப்படையில்தான் தற்போதும் மக்கள் தொகையின் அடிப்படையிலும் தொற்று எண்ணிக்கையின் அடிப்படையிலும் தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தினால்தான் தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஓரிரு மாதங்களில் இது செயல்படுத்தப்படும். அதன்பின் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் அது பரவலாக்கப்படும். இது மாநிலங்கள் மூலமாகத்தான் கொடுக்கப்படும்.

கே.எஸ்.நரேந்திரன்

கே.எஸ்.நரேந்திரன்

மாநிலங்களுக்கு மத்திய அரசே தடுப்பூசியைக் கொள்முதல் செய்து கொடுக்கும் என்று அறிவித்துள்ளதால் மாநிலங்களுக்கான நெருக்கடி குறைந்துள்ளது. தடுப்பூசி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எல்லா மக்களையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறது. கொரோனா தடுப்பில் தேவையின் பொருட்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துச் செயல்படுத்தி வருகிறது. உச்சநீதிமன்றம் சொல்லித்தான் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றில்லை. எப்போதும்போல மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வழிகாட்டத்தான் செய்திருக்கிறது” என்றார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *