Share on Social Media

மொகாலி: இந்திய தடகளத்தின் பிதாமகன் மில்கா சிங்.  சர்வதேச போட்டிகளில் மின்னலாக ஓடிய இவர், ‘பறக்கும் சீக்கியராக’ உச்சம் தொட்டார். வாழ்க்கையில் சோதனைகளை சிங்கமென துணிச்சலாக சந்தித்த இவர், இளம் தலைமுறைக்கு ‘ரோல் மாடலாக’ விளங்கினார்.  பதக்க மழை பொழிந்து, தடகள மன்னனாக மகுடம் சூடினார். இந்த மண்ணில் இவரது ‘ஓட்டம்’ நின்றாலும், நாட்டுக்காக நிகழ்த்திய சாதனைகள் ரசிகர்களின் மனதில் என்றும் ஓடிக் கொண்டே இருக்கும்.

 

இந்திய தடகள ‘ஜாம்பவான்’ மில்கா சிங் 91.  பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர், ‘பறக்கும் சீக்கியர்’ என்று அழைக்கப்பட்டார். சமீபத்தில் இவருக்கு ‘கொரோனா’ தொற்று உறுதியானதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். திடீரென இவரது உடலில் ‘ஆக்சிஜன்’ அளவு குறைந்ததால் பஞ்சாப்பின் மொகாலியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதிலிருந்து தேறிய மில்கா சிங், சமீபத்தில் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். நான்கு நாட்களுக்கு பின், இவரது உடலில் மீண்டும் ‘ஆக்சிஜன்’ அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பரிசோதனையில் ‘நெகடிவ்’ என்று வந்தது. ஆனால் இவருக்கு காய்ச்சல் இருந்தது. தவிர, ஆக்சிஜன் அளவும் திடீரென சரிந்தது. இந்நிலையில் நேற்று முன்திம் இரவு 11:30 மணியளவில் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் காலமானார். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மகன் ஜீவ் மில்கா சிங், கோல்ப் வீரர்இவரது மறைவு இந்திய தடகள அரங்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர், பேராசிரியர் ஜெகத் ராம் கூறுகையில், ‘‘கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மில்கா சிங், ‘கோவிட்’ பிரிவில் இருந்து பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் சிறப்பான சிகிச்சை வழங்கிய போதும் ஆபத்தான நிலையில் இருந்து மில்கா சிங் உயிரை மீட்டெடுக்க முடியவில்லை,’’ என்றார்.

 

மனைவி சோகம்

மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மில்கா சிங்கின் மனைவியும்  இந்திய வாலிபால் அணியின் முன்னாள் கேப்டனுமான நிர்மல் கவுர் 85, கடந்த ஜூன் 13ல் காலமானார். இதை தொடர்ந்து மில்காவும் உயிரிழந்தது சோகமான விஷயம்.

 

பாதிப்பு பின்னணி

மில்கா சிங்கின் வீட்டில் வேலை பார்ப்பவருக்கு முதலில் ‘கொரோனா’ தொற்று உறுதியானது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மில்கா சிங், மனைவி நிர்மல் கவுர், பரிசோதனை செய்தனர். இதில் மில்கா சிங்கிற்கு ‘பாசிடிவ்’ என முடிவு வந்தது.

 

கலவரம்…பயங்கரம்

இந்தியா சுதந்திரத்திற்கு முன் தற்போது பாகிஸ்தானில் உள்ள கோவிந்த்புரா பகுதியில் பிறந்தார் மில்கா சிங்.  இவரது 11 வயதில் இந்தியா–பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பெற்றோர், இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரர் என 5 பேர் உட்பட ஒட்டுமொத்த கிராமத்தை சேர்ந்தவர்கள்  இவர் கண் முன் கொல்லப்பட்டனர். இவரது வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு ரயில் மூலம் டில்லிக்கு அகதியாக இடம் பெயர்ந்தார். இங்குள்ள தனது மற்றொரு சகோதரி வீட்டில் சில காலம் தங்கினார். பின் இந்திய ராணுவத்தின் சேர, மில்காவின் வாழ்வில் ஒளி பிறந்தது.

 

ராணுவத்தில் சேவை

மில்கா சிங், ராணுவத்தில் பணியாற்றினார். இவருக்கு, கவுரவ கேப்டன் அந்தஸ்து வழங்கப்பட்டது.

 

ஒரு கிளாஸ் பால்

ராணுவத்தில் இருந்த போது முதன் முதலாக ‘கிராஸ் கன்ட்ரி’ (காடு, மலை, நீர் பகுதிகளை கடந்து செல்வது) ஓட்டத்தில் தான் ஓடினார். இது ஒரு பந்தயம் என்பதே அவருக்கு தெரியாது. இதில் வெற்றி பெற்றதால் ஒரு கிளாஸ் பால் கூடுதலாக தரப்பட்டது. தவிர பயிற்சி அணிக்கும் தேர்வு செய்யப்பட்டார்.

 

76 வெற்றி

மில்கா சிங் ஒட்டுமொத்தமாக  உலகம் முழுவதும் 80 முறை பல்வேறு ஓட்டங்களில் பங்கேற்றார். இதில் 76 முறை வெற்றி பெற்றார்.

 

‘தங்கமகன்‘

இங்கிலாந்தின் கார்டிப் நகரில், 1958ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் 400 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற மில்கா சிங், சுதந்திரமடைந்தபின் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்தார். இதனை கொண்டாட, இந்தியா முழுவதும் ஒருநாள் விடுமுறை  அளிக்க வேண்டுமென மில்கா கேட்டுக் கொண்டார். இதனை அப்போதைய பிரதமர் நேரு நிறைவேற்றினார். 

* ஆசிய விளையாட்டில் 4 தங்கம் (1958ல் 200, 400 மீ., ஓட்டம், 1962ல் 400, 4*400 மீ., தொடர் ஓட்டம்) கைப்பற்றினார். இதன்மூலம் காமன்வெல்த், ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்தியரானார். தவிர இவர், இந்தியாவில் நடந்த தேசிய விளையாட்டிலும் 2 தங்கம் (1958ல் 200, 400 மீ., ஓட்டம்), ஒரு வெள்ளி (1964ல் 400 மீ., ஓட்டம்) என, 3 பதக்கங்களை அள்ளினார்.

 

நழுவிய பதக்கம்

மில்கா சிங், ஒலிம்பிக்கில் மூன்று முறை (1956, 1960, 1964) பங்கேற்றார். இதில் 1960ல் இத்தாலியின் ரோமில் நடந்த ஒலிம்பிக்கில், 400 மீ., ஓட்டத்தில் பைனல் வரை சென்று 4வது இடம் பிடித்திருந்தார். இதன்மூலம் ஒலிம்பிக் தடகள போட்டியில் பைனலுக்கு முன்னேறிய இந்தியரானார். பைனலில் இவர், 0.01 வினாடி தாமதமாக வந்ததால் வெண்கலப் பதக்கத்தை நழுவவிட்டார். இப்போட்டியில் இவர், 45.73 வினாடியில் இலக்கை அடைந்தார்.

 

பத்ம ஸ்ரீ விருது

சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த மிங்கா சிங்கிற்கு, 1959ல் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

 

ஆசை நிறைவேறுமா

ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் பதக்கம் வெல்ல விரும்பினார் மில்கா சிங். ஆனால் இதுவரை இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. இவரது வாழ்நாளில் நிறைவேறாத இந்த ஆசையை, அடுத்த மாதம் நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய தடகள நட்சத்திரங்கள் நிறைவேற்றுவர் என நம்பலாம்.

 

சினிமாவாக மாறிய சுயசரிதை

மில்கா சிங், தனது மகள் சோனியா சான்வால்காவுடன் இணைந்து ‘தி ரேஸ் ஆப் மை லைப்: ஆன் ஆட்டோபயோகிராபி’ என்ற பெயரில் சுயசரிதையை 2013ல் வெளியிட்டார். இதனை அடிப்படையாக கொண்டு ‘பாக் மில்கா பாக்’ என்ற இந்தி படம் 2013ல் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரூ. 100 கோடி வசூலாகி சாதனை படைத்தது.

 

‘பறக்கும் சீக்கியர்’ எப்படி

கடந்த 1960ல் லாகூரில் இந்தியா–பாக்., தடகள போட்டி நடந்தது. இதில் பாகிஸ்தானின் அதிகவேக ஓட்ட வீரராக கருதப்பட்ட அப்துல் காலிக்கை சுலபமாக முந்தினார் மில்கா சிங். 400 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார். பின் 200 மீ., பைனலில் காலிக்கை முந்தி சாதித்தார். இதனை பார்த்த அப்போதைய பாக்., அதிபர் அயூப் கான், மிங்கா சிங்கிற்கு ‘பறக்கும் சீக்கியர்’ என்ற பட்டம் கொடுத்தார். 

 

சுவாரஸ்ய தகவல்

 

* மூன்றுமுறை தோல்விக்குப்பின் நான்காவது முறையாக இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். 1950 –1952 வரை ரப்பர் தொழிற்சாலையில் பணியாற்றினார்.

 

* தனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டார்.

 

* 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் முதன்முதலாக களமிறங்கினார். ஆனால் துவக்க சுற்றிலேயே வெளியேறினார்.

 

* இவரது அனைத்து பதக்கம், கோப்பைகளையும் பாட்யாலா விளையாட்டு மியூசியத்துக்கு நன்கொடையாக வழங்கினார்.

 

* பயிற்சியின் போது பலமுறை சுயநினைவு இழக்கும் அளவுக்கு சென்றுள்ளார். சிலமுறை ஆக்சிஜன் உதவியும் தேவைப்பட்டது. அந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் உழைத்தார்.

 

* 1968 வரை எந்த திரைப்படமும் பார்த்ததில்லை. அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை பார்த்து கண்ணீர் சிந்தினார்.

 

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *