Share on Social Media

துபாய்: ஆசிய குத்துச்சண்டையில் இந்திய வீரர் சஞ்ஜீத் (91 கி.கி.,) தங்கம் வென்றார். மற்ற இந்திய வீரர்களான அமித் பங்கல் (52 கி.கி.,), ஷிவா தபா (64 கி.கி.,) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.

துபாயில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் ஆண்களுக்கான 52 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் அமித் பங்கல், உஸ்பெகிஸ்தானின் ஷாகோபிடின் சோய்ரோவ் மோதினர். ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய அமித் பங்கல் 2–3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இது, ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் இவரது 3வது பதக்கம். இதுவரை ஒரு தங்கம் (2019), ஒரு வெள்ளி (2021), ஒரு வெண்கலம் (2017) கைப்பற்றி உள்ளார்.

ஆண்களுக்கான 64 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் ஷிவா தபா, மங்கோலியாவின் பாதர்சுக் சின்சோரிக் மோதினர். இதில் ஏமாற்றிய ஷிவா தபா 2–3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். இது, இத்தொடரில் இவரது 5வது பதக்கம். இதுவரை ஒரு தங்கம் (2013), 2 வெள்ளி (2017, 2021), 2 வெண்கலம் (2015, 2019) கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் இவர், ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் அதிக பதக்கம் வென்ற இந்திய வீரரானார்.

சஞ்ஜீத் தங்கம்: ஆண்களுக்கான 91 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் சஞ்ஜீத், கஜகஸ்தானின் வாசிலி லெவிட் மோதினர். அபாரமாக ஆடிய சஞ்ஜீத் 3–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இம்முறை இந்தியாவுக்கு அதிகபட்சமாக 15 பதக்கம் கிடைத்துள்ளது. இதில் 2 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் அடங்கும். இதற்கு முன், 2019ல் 13 பதக்கம் கிடைத்திருந்தது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *