Tamil News large 2628044 Tamil News Spot
Share on Social Media

செங்குன்றம் : டேங்கர் லாரியில், ரகசிய அறை அமைத்து, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட, ௩.௫ கோடி ரூபாய் மதிப்புள்ள, 500 கிலோ கஞ்சாவை, மாதவரம் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், கொரோனா ஊரடங்கால், மார்ச் இறுதி முதல், ‘டாஸ்மாக்’ கடை மற்றும் பார்கள் மூடப்பட்டன.இந்நிலையில், பலரும் போதைக்காக, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி, பயன்படுத்த துவங்கினர்.இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளனர். இதனால், குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.கஞ்சா விற்பனைக்கு வரவேற்பு கூடியதால், சென்னை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த கஞ்சா வியாபாரிகள், தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தினர்.

சோதனை சாவடிஅவர்கள், அரிசி, காய்கறி, வெங்காயம் மொத்த வியாபாரி மற்றும் பயணியர் போல், ஆந்திராவிற்கு சென்று, நெல்லுார், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா ஆகிய பகுதிகளில் இருந்து, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்தனர்.சென்னை, செங்குன்றம் வழியாக, ஆந்திராவில் இருந்து, தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் கஞ்சா கடத்துவது தொடர்கிறது.

இந்நிலையில், மாதவரம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், தனிப்படை போலீசார், நேற்று காலை, 9:30 மணி அளவில், பாடியநல்லுார் சோதனை சாவடி அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து, சென்னைக்கு வந்த டேங்கர் லாரியை, போலீசார் சோதனை செய்தனர்.விசாரணைஅதில், லாரியின் மேல் பகுதி திறப்பு வசதி மூலம், டேங்கரின் ரகசிய அறைகளில், 21 சிறிய மூட்டைகள், 15 பெரிய பிளாஸ்டிக் மூட்டைகளில், 500 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது.அவற்றின் சந்தை மதிப்பு, 3.5 கோடி ரூபாய். ஆந்திர மாநிலம், கிந்தலை கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் சச்சின் நாராயணன், 35, சென்னை, ஷெனாய் நகர், அவ்வை புரத்தைச் சேர்ந்த, அவரது உதவியாளர் சுந்தர், 50, ஆகியோரிடம், தனிப்படை போலீசார் விசாரித்தனர்.அதில், லாரியில் கடத்தப்பட்ட கஞ்சா, திருச்சியில் உள்ள, பிரபல கஞ்சா வியாபாரிக்கு கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. இது குறித்து, போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

சாட்டையை சுழற்றும் கமிஷனர்!

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்ற பின், கஞ்சா விற்பனையை தடுக்க, 135 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், தனிப்படை அமைத்து, தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையை முடுக்கி விட்டார்.இதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக, ஆந்திராவில் இருந்து, போதை பொருள் வியாபாரிகள், சென்னைக்குள் வரும் எல்லைகள், தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, சந்தேகத்திற்குரியவர்கள், சோதனைக்கு ஆளாகினர்.

இந்நிலையில், செங்குன்றம், பாடியநல்லுார் சோதனை சாவடி, மாதவரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், ஜூலை, 13ம் தேதி முதல், 22ம் தேதி வரை, 256 கிலோ கஞ்சா, 1,325 போதை மாத்திரைகள், 4 கிலோ கஞ்சா ஆயில், ஆட்டோ, கார், மினி லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.அவற்றின் சந்தை மதிப்பு, 1.50 கோடி ரூபாய். அந்த வழக்குகள் மூலம், ஒரு பெண் கஞ்சா வியாபாரி உட்பட, 20 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, போதை பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *