Share on Social Media


காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞரணி தலைவர் ஸ்ரீநிவாஸ் டெல்லியில் கொரோனா பாதிப்பு மிகுதியாக உள்ளதால் அவரது தலைமையில் அம்மாநில நிர்வாகிகளை ஒன்றிணைத்து “எஸ்.ஓ.எஸ் – ஐ.ஓய்.சி” என்ற குழுவினை அமைத்தார். அந்த குழுவினர் டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தையும் செய்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வீட்டுச் சிகிச்சையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு உணவுப் பொருள்கள், மருந்து மாத்திரைகள் வழங்குவது முதல், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஏற்பாடு செய்து தருவது வரை அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். இளைஞரணி தலைவர் ஸ்ரீநிவாஸின் செயலுக்கு டெல்லி மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்துள்ளது. இக்கட்டான சூழலில் மக்கள் உயிர் காக்கக் களத்தில் இறங்கி உதவி வரும் ஸ்ரீநிவாஸ் குழுவினர் டெல்லியில் இயங்கி வரும் நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் இதர சில நாடுகளின் தூதரகங்களுக்கும் ஆக்ஸிஜன் வழங்கி உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ஸ்ரீநிவாஸ் பிவி மக்களுக்கு எப்படி உதவி செய்கிறார்?, உயிர் காக்கும் மருந்துகளை எப்படி, எங்கிருந்து ஏற்பாடு செய்து மக்களுக்கு வழங்கி வருகிறார்? என்று டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்கத் தேசிய காங்கிரஸ் இளைஞரணி தலைமை அலுவலகத்திற்கு விரைந்த டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் ஸ்ரீநிவாஸ் பிவியிடம் மருத்துவ பொருள்கள் எங்கிருந்து கிடைக்கிறது, இவ்வளவு செலவு செய்வதற்குப் பணம் எங்கிருந்து கிடைக்கிறது. குறிப்பாக ரெம்டெசிவிர் மருந்துகள் எப்படி கிடைக்கிறது என்று சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணை தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீநிவாஸ், “திடீரென என்னுடைய அலுவலகத்திற்கு வந்த போலீஸார், என்னை வெளியே வருமாறு அழைத்தனர். நானும் சென்றேன். அவர்கள் யாரோ ஒருவர் நீதிமன்றத்தில் அரசியல்வாதிகள் செய்து வரும் உதவிகளை போலீஸார் கண்காணிக்க வேண்டும் என்று மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதனால், நீதிமன்றம் எங்களைக் கண்காணித்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது என்றனர். நான் பதிலுக்கு நாங்கள் யாரைப் பார்த்தும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எங்கள் கட்சியின் சார்பில் ஒன்றும் சட்டவிரோத செயல்களைச் செய்து விடவில்லை.

மக்கள் உயிர்காக்கும் நடவடிக்கைகளைத் தான் மேற்கொண்டு வருகிறோம். அதனால் எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. நான் மிகவும் வெளிப்படையான முறையில் தான் மக்களுக்கு உதவி வருகிறேன். என் தரப்பு விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக போலீஸாரிடம் அளித்துள்ளேன். எங்களிடம் துருவி துருவி விசாரணை மேற்கொள்ளும் போலீஸார் டெல்லியில் கொரோனா நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தினார்களா என்று தெரிய வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *