Share on Social Media

கடந்த சில வருடங்களாகவே மழைக்காலம் ஆரம்பிக்கும்போது கூடவே டெங்கு காய்ச்சல் சீஸனும் ஆரம்பித்துவிடுகிறது. கொரோனா அச்சத்துடன், `இந்த சீஸன்ல டெங்கு காய்ச்சலும் வந்துடுமோ’ என்கிற அச்சமும் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. டெங்கு வருவதற்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் குறித்து பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டோம்.

பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

“டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். கழிவு நீரல்லாத எந்த நல்ல தண்ணீரிலும் முட்டையிட்டு வளர்கிற `ஏடிஸ் ஏஜிப்தி’ (Aedes aegypti) என்ற கொசுவின் மூலம்தான் மனிதர்களுக்கு டெங்கு ஏற்படுகிறது. வெயில், மழை என ஒரே நாளில் வெவ்வேறு பருவநிலை நிலவும்போது, நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கும். வெறும் 3 வாரங்கள் மட்டுமே வாழக்கூடிய ஏடிஸ் ஏஜிப்தி கொசு, சிரட்டை, டயர், பிளாஸ்டிக் கப், ஆட்டுரல், ரப்பராலான கால் மிதியடி போன்றவற்றில் தேங்கி நிற்கிற சிறிதளவு நல்ல தண்ணீரிலும் முட்டையிட்டு பல்கிப் பெருகிவிடுகிறது. டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் கடித்துவிட்டு, மற்றவர்களையும் கடித்தால் அவர்கள் அத்தனை பேருக்கும் டெங்கு காய்ச்சல் வரும். இதன் காரணமாகத்தான், ஒரே நேரத்தில் பலரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனைகளில், டெங்கு காய்ச்சல் வந்தவர்களை கொசு வலைக்குள்தான் வைத்திருப்பார்கள். பாதிக்கப்பட்டவரைக் கடித்த கொசு மற்றவர்களைக் கடித்தால், மருத்துவமனையில் இருக்கிற அத்தனை பேருக்கும் டெங்கு வந்துவிடலாம் என்கிற எச்சரிக்கை உணர்வுதான் காரணம். மற்றபடி, இருமல், தும்மல், தொடுதல் போன்ற வழிகளின் மூலம் டெங்கு வைரஸ் பரவாது.

ஒரு தெருவில், ஒரேயொரு வீட்டில் நல்ல தண்ணீர் தேங்கியிருந்து, அதில் ஏடிஸ் ஏஜிப்தி கொசு முட்டையிட்டிருந்தாலும் அங்கிருந்து அரை கிலோ மீட்டர் வரைக்கும் ஏடிஸ் கொசுக்கள் பறந்துபோகும். விளைவு, அந்த அரை கிலோமீட்டரில் இருப்பவர்களில் எத்தனை பேரைக் கடிக்கிறதோ, அவர்கள் அத்தனை பேருக்கும் டெங்கு வரும். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாடு செல்கிறார் என்றால், அங்கிருப்பவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் வரலாம். ஒருவருடைய அலட்சியம் பலருக்கும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் என்பதால், நல்ல தண்ணீரைத் தேங்கவிடாமல் இருப்பதில் அனைவருமே கவனமாக இருக்க வேண்டும்.

vikatan 2020 07 ed6755d1 7035 4926 86eb a9a582ad7190 Actualidad dengu Tamil News Spot
டெங்கு பரவும் விதம்

Also Read: கொரோனா காலத்தில் டெங்கு காய்ச்சலின் வீரியம் எப்படி இருக்கும்? #NationalDengueDay

இந்தக் கொசு பகலில்தான் கடிக்கும் என்பதால், பகல் நேரங்களிலும் கொசுவிரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பகல் நேரங்களில் முழுக்கை சட்டை, பேன்ட் அணிவிக்க வேண்டும்.

டெங்கு வந்துவிட்டால் 101 டிகிரி, 102 டிகிரி என காய்ச்சல் அடிக்கும். உடலில் அத்தனை இணைப்புகளிலும் வலி கடுமையாக இருக்கும். அதனால்தான் இந்தக் காய்ச்சலை `பிரேக் போன் ஃபீவர்’ என்போம். இந்த சீஸனில் காய்ச்சல் வருகிறது என்றால், கை வைத்தியம் செய்வது, மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவது என்று இருந்துவிடாமல் மருத்துவரின் உதவியை நாடுவதே பாதுகாப்பு. ஏனென்றால், டெங்கு காய்ச்சலின்போது சிலருக்குத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். ரத்த உறைதலுக்குத் தேவையான தட்டணுக்கள் உடலில் குறையும்போது உடலின் உள்ளுறுப்புகளில் ரத்தப்போக்கு ஏற்பட ஆரம்பிக்கும். இதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா? அறிகுறிகளைச் சொல்லி நீங்களாகவே மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கிச் சாப்பிடும்போது, அவர்கள் வலி நிவாரண மாத்திரையும் சேர்த்தே தருவார்கள். இதன் விளைவாகவே, வயிற்றினுள்ளே ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிராபத்தும் நிகழலாம்.

vikatan 2020 07 6cc4a74e cbdc 4e03 bb71 bc21a3728680 Dengue symptoms Tamil News Spot
டெங்கு அறிகுறிகள்

Also Read: தடுப்பூசியால் ரத்தம் உறைதல் பிரச்னை: தவறாக ஊசிபோடும் முறை காரணமா? – மருத்துவர் விளக்கம்

`நமக்கு வந்திருப்பது டெங்குவாக இருக்கலாம்’ என்று சந்தேகம் வந்துவிட்டால், உடனே ரத்தப் பரிசோதனை செய்து உறுதி செய்துவிடுங்கள். ஒருவேளை டெங்கு காய்ச்சல் உறுதியாகிவிட்டாலும் பயப்படத் தேவையில்லை. 100 பேருக்கு டெங்கு காய்ச்சல் வந்தாலும் அதில் 95 அல்லது 96 பேருக்கு நார்மல் வைரல் ஃபீவராகவே டெங்கு கடந்துவிடுகிறது. 2 அல்லது 3 பேருக்கு மட்டுமே ரத்த உறைதலில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளுறுப்புகளில் ரத்தப்போக்கை ஏற்படுத்திவிடும். இதனால், உடலில் சிவப்புப் புள்ளிகள் ஏற்படும். இந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றிவிடலாம் என்பதால் அச்சப்படத் தேவையில்லை. நூறில் ஒருவருக்கு மட்டுமே அரிதாக ரத்த நாளங்களுக்குள் இருக்கிற நீரெல்லாம் வெளியேறி விடும். இதை உடனே கவனிக்காமல் விட்டு விட்டால், இதயம், மூளை போன்ற உறுப்புகளுக்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் மரணமும் நிகழலாம்.

நேற்று பிறந்த குழந்தைகளிலிருந்து முதியவர்கள் வரைக்கும் டெங்கு தாக்கலாம்; உயிரிழக்க வைக்கலாம் என்பதால், கொசு ஒழிப்பு நடவடிக்கையை அரசு உடனே எடுப்பதுதான் வருமுன் காப்பதற்கான வழி.”

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *