இந்த விமர்சனங்கள் குறித்து, தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர், சிவ.ஜெயராஜிடம் பேசினோம்,
“டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்பது பா.ம.க-வின் விருப்பம். ஆனால், 2016 தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என வாக்குறுதி கொடுத்ததால்தான் நாங்கள் ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தோம். நாங்கள் சொன்னால் செய்துவிடுவோம் என மக்களுக்குத் தெரியும். கடந்த காலத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியிருக்கிறோம். அந்தவகையில், டாஸ்மாக் கடைகளைக் குறைக்கவேண்டும், பள்ளிகளுக்கு, கோயில்களுக்கு அருகில் கடைகள் இருக்க்கூடாது என துறையின் ஆய்வுக்கூட்டத்தில் முதல்வரும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் அதிகாரிகளுக்கு தெளிவாக உத்தரவிட்டிருக்கிறார்கள்.

பார் டெண்டர் விடுவதை டாஸ்மாக் நிறுவனம் செய்யவில்லை. ஒருபோதும் செய்வதற்கும் வாய்ப்பே இல்லை. இது தவறான தகவல். அதேவேளையில், டாஸ்மாக் நிர்வாகத்திடம் அனுமதிபெற்று பார் நடத்துகிறார்கள். இந்த நடைமுறை கடந்த அ.தி.மு.க ஆட்சியிலும் இருந்தது. கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில், அரசே பார் நடத்துகிறது. ஆனால், இங்கு அப்படியான நிலை இல்லை. ஒரு சில சமூக விரோத சக்திகள் மீண்டும் கள்ளச்சாராயத்தைக் கொண்டு வருவதற்காக டாஸ்மாக் நிர்வாகத்தைச் சீர்குலைக்க நினைக்கிறார்கள். கஞ்சா, போதை ஊசி, குட்கா போன்ற பல போதைப்பொருள்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. ஆனால், டாஸ்மாக்கின்மீது மட்டும் பா.ம.க-வினர் குறியாக இருப்பதற்கு பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என நான் சந்தேகப்படுகிறேன்” என்கிறார் அவர்.