Share on Social Media


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன், 30 ஆண்டுகாலமாக சிறையில் இருந்து வருகிறார். தற்போது, விடுதலையை எதிர்பார்த்து, பரோலில் வந்துள்ள அவர், ஜோலார்பேட்டையிலுள்ள தனது வீட்டில் தங்கியிருக்கிறார். இந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காகப் போலீஸாரின் உத்தரவின்படி, பேரறிவாளன் வீட்டுக்குப் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவர் பந்தல் அமைத்து மின் விளக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதற்கான, வாடகைப் பணத்தை போலீஸாரே தருவதாகக் கூறியுள்ளனர். ஆனால், ஐம்பது நாட்களைக் கடந்தும் வாடகைப் பணம் தராததால், மனமுடைந்த பந்தல் அமைப்பாளர் சம்பத், ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கே சென்று அங்குப் பணிபுரியும் போலீஸார் மீதே புகாரளித்துள்ளார்.

பெற்றோருடன் பேரறிவாளன்

அவரின் புகார் மனுவில், ‘‘கடந்த மே மாதம் 28-ஆம் தேதி முதல் பேரறிவாளன் வீட்டின் முன்பு நான்குப் பந்தல், நாற்காலிகள் மற்றும் மின்விளக்கு வசதி அமைத்துக் கொடுத்துள்ளேன். நேற்று வரை அதற்கான வாடகை 45,000 ரூபாய் ஆகிறது. ஆனால், போலீஸார் 11,000 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர். மீதித் தொகையை எப்போது தருவீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார் தொழிலாளி சம்பத். தங்கள் மீதான புகார் என்பதால் முதலில் சம்பத்திடமிருந்து மனுவை வாங்க மறுத்த போலீஸார், விவகாரம் மேலிடம் பறந்தவுடன் உடனடியாக வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. ஓரிரு நாளில், மீதித் தொகையை கொடுத்துவிடுவதாகவும் சம்பத்திடம், போலீஸார் உத்தரவாதம் கொடுத்துள்ளார்களாம்.

Also Read: இன்றோடு சிறையில் 30 ஆண்டுகள் நிறைவு செய்த பேரறிவாளன்… மு.க.ஸ்டாலினிடம் மன்றாடும் அற்புதம்மாள்!

இதுகுறித்து, ஜோலார்பேட்டை போலீஸாரிடம் கேட்டபோது, “பந்தல் வாடகைக்கான பேலன்ஸ் கொடுக்க வேண்டும் என்பது உண்மைதான். பந்தல் அமைப்பாளர் மதுபோதையில் வந்து புகாரைப் பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தினார். நாங்களும், புகார் மனுவைப் பெற்றுக்கொண்டு, ‘போ பாத்துக்கலாம்’ என்று சொல்லி அனுப்பிவிட்டோம். சீக்கிரம் பேலன்ஸை கொடுத்துவிடுவோம்” என்றனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *