Share on Social Media


கோவை:கோவை மாநகராட்சி இணையதளத்தில், மேலும், 279 தீர்மானங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, வெளிப்படையான நிர்வாகத்துக்கு, அடித்தளம் இட்டுள்ளார், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால். அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல், தொடர்ந்து சுத்தமான நிர்வாகத்தை அவர் அளிப்பார் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
தமிழகத்தில், 2016ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால், அவ்வாண்டு, அக்., 25 முதல், மாநகராட்சி கமிஷனர்களாக, தனி அலுவலராக செயல்பட்டு, தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.கோவை மாநகராட்சியில், அவ்வாறு நிறைவேற்றிய தீர்மானங்கள் இதுநாள் வரை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தன.மாநகராட்சியின் புதிய கமிஷனர் ராஜகோபால், இதுநாள் வரை மறைத்து வைக்கப்பட்டிருந்த, அனைத்து தீர்மானங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டு, வெளிப்படையான நிர்வாகத்துக்கு அடித்தளம் இட்டார்.
அதன்படி, முதல்கட்டமாக, 160, இரண்டாம் கட்டமாக, 25 தீர்மானங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. 2018, பிப்., முதல் ஆக., 24 வரை நடந்த எட்டு கூட்டங்களில் நிறைவேற்றிய, 279 தீர்மானங்கள், நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.இதில், 2018, ஜூன் 30ல் பணி ஓய்வு பெற இருந்த உதவி கமிஷனர் ரவிக்கு, ஓராண்டு காலத்துக்கு பணி நீட்டிப்பு வழங்குவது, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில், ‘அம்ரூட்’ திட்டத்தில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்வது, 24 மணி நேர குடிநீர் திட்டத்தை கண்காணித்து, அறிக்கை சமர்ப்பிக்க அமைத்துள்ள நிறுவனத்துக்கு (திட்ட மேலாண்மை அலுவலர்), ரூ.19.40 கோடி வழங்குவது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
‘நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோம்!’கோவை மாநகராட்சியில், 2016, நவ., 11ல், தனி அலுவலர் தலைமையில், முதல் மாமன்ற கூட்டம் நடந்திருக்கிறது. அது முதல், 2017, மார்ச், 27 வரை, 10 கூட்டங்கள் நடத்தப்பட்டு, 585 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.பின், 2017, ஏப்., 12 முதல் டிச., 29 வரை, 12 கூட்டங்கள் நடத்தப்பட்டு, 325 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதில், மே மாதம் நிறைவேற்றிய, 64 தீர்மானங்கள் மட்டும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல், ‘மிஸ்’ ஆகியுள்ளது.கடந்த, 2018, ஜன. 29 முதல், ஆக., 24 வரை, 9 முறை கூட்டங்கள் நடத்தி, 304 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2018, செப்., முதல், 2021, ஜூன் வரையிலான தீர்மானங்கள் பதிவேற்றம் செய்வதற்கான வேலைகள், படிப்படியாக நடந்து வருகின்றன.அதிரடி தொடரட்டும் கமிஷனர் சார்!

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *