Share on Social Media


“விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்கள் இனி இயற்கை வேளாண்மை முறைக்கு திரும்ப வேண்டும். இயற்கை வேளாண்மையை வெற்றிகரமாகச் செய்ய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இன்று குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் நடைபெற்ற `ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை’ கருத்தரங்கில் காணொலி மூலமாகக் கலந்து கொண்டபோதுதான் பிரதமர், இப்படிப் பேசியுள்ளார். ஏன் இப்படி பிரதமர் விவசாயிகளை இயற்கை வேளாண்மை திரும்ப வேண்டும் திடீரென கூறுகிறார்? இதற்கு ஒரு நீண்ட நெடும் வரலாறு உள்ளது.

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மைக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இயற்கை விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

பசுமை விகடன் இதழ்

`பசுமை விகடன்’ இதழ் இந்தக் கோரிக்கையை இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல துணை நின்றது. ஒரு வழியாக விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்து சேர்ந்தது.

கடந்த ஜூலை 5-ம் தேதி, 2019 – 20-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இரண்டாம் முறை அரியணையில் ஏறிய பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட் இது. அப்போது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “பிற தொழிலாளர்களைப் போலவே விவசாயிகளுக்கும் தொழில் மற்றும் வாழ்க்கையை நடத்துவது எளிமையாக இருக்க வேண்டும். இதற்காக ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்ற முறையைப் பின்பற்ற ஊக்குவிக்க இருக்கிறோம். ஜீரோ பட்ஜெட் விவசாயம் மூலம் அடிப்படை விஷயங்களுக்குத் திரும்பப் போகிறோம். இது புதிய விஷயம் அல்ல. நாம் இந்த முறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். சில மாநிலங்களில் இம்முறை முன்னரே பின்பற்றப்பட்டு வருகிறது. அங்குள்ள விவசாயிகள் இதற்கான பயிற்சிக்குத் தயாராக இருக்கிறார்கள். இதுபோன்ற முயற்சிகள் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த உதவும்” என்றார்.

சரி, முதலில் ஜீரோ பட்ஜெட் என்றால் என்னவென்று பார்ப்போம்.

உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம், உரக்கடைகளில் கொண்டுபோய் படியளந்துகொண்டிருந்த விவசாயிகளுக்கு,`உங்கள் மாடே ஓர் உரத் தொழிற்சாலைதான்’ என்ற குரல் ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டுப் பசு மாட்டின் சாணத்தையும் சிறுநீரையும் மட்டுமே பயன்படுத்தியதில் பயிர்களின் பல்வேறு சிக்கல்கள் தீர்ந்துபோனபோது ஆனந்தத்தின் உச்சிக்கே போனார்கள் விவசாயிகள். அதுவரை விவசாயிகளுக்குப் பெரும் சுமையாக இருந்த முட்டுவளிச் செலவு என்ற சாகுபடிச் செலவை உடைத்தெறிந்தது இந்தப் புதிய சித்தாந்தம். ஆம், இத்தனை அற்புதங்களையும் நிகழ்த்திய அந்தச் சித்தாந்தம்தான், `பைசா செலவில்லாத சாகுபடி’ என்றழைக்கப்படும் ஜீரோ பட்ஜெட் சித்தாந்தம்.

மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த `வேளாண் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர் கண்டறிந்ததுதான் இந்த ஜீரோ பட்ஜெட் சாகுபடி முறை.

3 Tamil News Spot
சுபாஷ் பாலேக்கர்

அடிப்படையில் வேளாண் பட்டதாரியான சுபாஷ் பாலேக்கர், தனது சித்தாந்தத்தை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பரப்பிக்கொண்டிருந்தார். 2007-ம் ஆண்டு இவரை தமிழ்நாட்டுக்கு அழைத்து பயிற்சிப் பட்டறைகளை முதலில் நடத்தியது பசுமை விகடன் இதழ்தான். இந்த நுட்பம் குறித்து இதழ் தோறும் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இதன் மூலம் ஏராளமான விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை முறைக்கு மாறினார்கள்; மாறி வருகிறார்கள்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, சுபாஷ் பாலேக்கரின் ஆலோசனையில் சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பல பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன. ஒரு பயிற்சியில் 9,000 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றதை நாடே திரும்பிப் பார்த்த சம்பவமும் நடந்தது. ஐ.நா.சபையில் சந்திரபாபு நாடு ஜீரோபட்ஜெட் பற்றிப் பேசி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை விவசாயிகள் பின்பற்றி வருவதை அறிந்த மத்திய அரசு, `நிதி ஆயோக்’ மூலம் சுபாஷ் பாலேக்கருக்கு அழைப்பு விடுத்து அவரின் ஆலோசனைகளைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாகத்தான் மத்திய பட்ஜெட்டில், “2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்துக்குத் திரும்பப் போகிறோம்” என்று அறிவிக்கப்பட்டது.

சரி, இத்தனை ஆண்டுகள் கழித்து, குஜராத்தில் ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை குறித்த நிகழ்ச்சி பெரிய அளவில் நடக்கிறதே… இதை அறிமுகப்படுத்திய சுபாஷ் பாலேக்கரை அழைத்தார்களா என்று அறிந்து கொள்ள அவரை தொலைபேசியில் அழைத்தால், மனிதர் பொங்கித் தீர்த்துவிட்டார்.

4 Tamil News Spot
சுபாஷ் பாலேக்கர்

Also Read: `ஜீரோ பட்ஜெட் விவசாயம் மத்திய பட்ஜெட் வரை செல்ல காரணமே பசுமை விகடன்தான்!’ – #15YearsOfPasumaiVikatan

“எந்த விதமான கட்டணமும் பெறாமல், விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுப்பதை வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். இந்த இயற்கை விவசாயத் தொழில்நுட்ப முறையை உருவாக்க நான் 12 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்திருக்கிறேன். மகாராஷ்டிராவில் காட்டில் வாழும் ஆதிவாசிகளுடன் சேர்ந்து வாழ்ந்து இவ்வளவையும் கற்றுக்கொண்டேன். பிறகு, என் கிராமத்துக்குச் சென்று ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்தேன். இப்படித் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம். தற்போது, இந்தத் தலைப்பைப் பலரும் விரும்பவில்லை. ஏனெனில், இந்த நுட்பத்தில் ஊடுபயிர்களால் கிடைக்கும் வருமானம் பிரதான பயிரின் சாகுபடி செலவை ஈடு செய்வதால், முன்பு `ஜீரோ பட்ஜெட்’ எனப் பெயர் வைத்திருந்தேன். ஆனால், நெல் சாகுபடி செய்யும்போது அதில் ஊடுபயிர்களைச் சாகுபடி செய்ய முடிவதில்லை. இதனால், பிரதானப் பயிருக்காகச் செய்யும் செலவை, செலவு கணக்காகவே கொள்ள வேண்டியுள்ளது. அதனால், இதை ஜீரோ பட்ஜெட் என்று சொல்ல இயலாது என்பது உண்மையே.

அதனால், 2018-ம் ஆண்டு முதல் என்னுடைய இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களுக்கு, `சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம்’ என்று பெயர் மாற்றியுள்ளேன். இயற்கை விவசாய தொழில்நுட்பங்களை உருவாக்க மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு அதிகப்படியான உழைப்பைக் கொடுத்துள்ளேன். ஆனால், தற்போது நான் கண்டுபிடித்த இயற்கை விவசாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள் என்னுடைய பெயரைப் பயன்படுத்துவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அதனால்தான், என் பெயரையே இயற்கை விவசாயத் தொழில்நுட்பத்திற்கு வைக்க வேண்டியிருக்கிறது. தற்போது சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம் என்ற பெயரை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இனி அனைவரும் இந்தப் பெயரையே பயன்படுத்துமாறு விவசாயிகளைக் கேட்டுக் கொள்கிறேன். பலரும் இப்படித்தான் அழைக்கிறார்கள். இமாச்சலப் பிரதேச அரசு கூட `சுபாஷ் பாலேக்கர் இயற்கை வேளாண்மை’ என்றுதான் பயன்படுத்தி வருகிறது. `நிதி ஆயோக்’ அமைப்புக்கும் பல முறை பெயர் மாற்றம் குறித்து கடிதம் அனுப்பினேன். அதன்பிறகும் கூட, `ஜீரோ பட்ஜெட்’ என்பதை `சுபாஷ் பாலேக்கர் இயற்கை வேளாண்மை’ என்று பெயர் மாற்ற மத்திய அரசு முன்வரவில்லை.

1 Tamil News Spot
சுபாஷ் பாலேக்கர்

Also Read: பிரதமர் மோடி பாராட்டிய தூத்துக்குடி தீவுகள்; பனை நடுதலில் சாதித்தது எப்படி?

அரசியல் லாபத்துக்காக என் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மத்திய பி.ஜே.பி அரசுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன்.

உங்கள் கட்சிக்கு முன்பு ஜனசங்கம் என்றுதான் பெயர். பின்னாளில்தான், பாரதிய ஜனதா கட்சி (பி.ஜே.பி) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகும், ஜனசங்கம் என்று பழைய பெயரையே ஊடகங்கள் பயன்படுத்தினால் விடுவீர்களா?

விவசாயிகளின் ஆதரவை மட்டும் பின்புலமாகக் கொண்ட என்னையும் என் தொழில்நுட்பத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இருட்டடிப்பு செய்துள்ளது. இதனால், எனக்கு நஷ்டம் கிடையாது. நான் நாள் தோறும் விவசாயிகளுக்காகப் பேசி வருகிறேன்.

எனவே மேடைக்காகவும் அரசியலுக்காகவும் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போவதாக வெற்றுக் கூச்சலும், போலி நாடகமும் வேண்டாம். கொஞ்சமாவது உண்மையாக விவசாயிகளுக்கு உதவுங்கள். என் பெயரைக் குறிப்பிடாமல் விட்டால் கூடப் பரவாயில்லை. விவசாயிகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் சென்று சேர்ந்தால் போதும். இயற்கை வேளாண்மை மட்டுமே, எக்காலத்துக்கும் விவசாயிகளுக்கு உதவும். விவசாயிகள் கடன் பெறாமல் விவசாயம் செய்ய இதுவே சிறந்த வழி. இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக மட்டுமல்ல. பல மடங்காக மாற்ற முடியும். விவசாயிகளே, அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம்; இயற்கை வேளாண்மையை நம்புங்கள் ’’ என்று சொல்லி முடித்தார் சுபாஷ் பாலேக்கர்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.