Share on Social Media


தமிழக நிதி அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் பழனிவேல் தியாகராஜன் ஆரம்பம் முதலே அதிரடி காட்டி வருகிறார். ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவை ‘விளம்பர பிரியர்’ என்று விமர்சித்தது, பாஜகவின் ஹெச்.ராஜாவைக் காட்டமாகச் சாடியது எனக் கருத்து மோதலில் அதகளம் செய்து வரும் பழனிவேல் தியாகராஜனுக்கும் கோவா போக்குவரத்துத்துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோவுக்கும் இடையே தற்போது கருத்து மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 43-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாகக் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற அந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். முதல் முறையாக மத்திய அரசின் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டாலும் தான் சொல்ல வந்ததைச் சமரமில்லாமல் பழனிவேல் தியாகராஜன் சபையில் கொட்டித் தீர்த்தார் என்றே சொல்லலாம். கொரோனா காரணமாக 2021-2022 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும். மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும், எனப் பட்டாசாக வெடித்திருந்தார். ‘மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை’ என்று பழனிவேல் தியாகராஜன் கூறியது தமிழக அரசியலில் மட்டுமில்லாமல் தேசிய அளவில் பேசுபொருளானது.

பழனிவேல் தியாகராஜன்

இந்நிலையில் சில நாள்கள் கழித்து தற்போது அதே ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நடந்த மற்றுமொரு சம்பவம் பெரியளவில் மோதலாக வெடித்திருக்கிறது. நடந்து முடிந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டது போல், ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “ஜி.எஸ்.டி கவுன்சிலின் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை, பொருளாதாரம் போன்றவற்றின் அடிப்படையிலேயே வாக்கு அளிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையிலேயே கவுன்சில் கூட்டத்தில் பேசுவதற்கான நேரத்தையும் நிர்ணயிக்க வேண்டும்” என்றார்.

கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜனின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய கோவா போக்குவரத்துத்துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ தனது எதிர்ப்பை சபையில் தெரிவித்தார். ‘பெரிய அண்ணன் மனப்பான்மையில் பேசக்கூடாது!’ என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை குறிப்பிட்டு கோவா அமைச்சர் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். அது முதற்கொண்டு இரு மாநில அமைச்சர்களுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்தது.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கோவா அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ, “தமிழக அரசின் பிரதிநிதியின் நடத்தை மிகவும் ஆட்சேபகரமானது. கோவா சிறிய மாநிலம் என்பதால் கோவாவின் குரலைப் பறிக்க முயற்சிக்கப்பட்டது. இது ஜனநாயகக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. இதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

கோவா அமைச்சரின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” 17 ஆண்டுகளாகக் காங்கிரஸிலிருந்து தற்போது பாஜகவில் உள்ள அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ பத்திரிகையாளர் சந்திப்பில் பொய் கூறியதாகக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ” 8 கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் பல்வேறு துறைகளைக் கவனித்து வருகிறேன். 3 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்பவன் நான். தேவையில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் கூறி என் நேரத்தை வீணடிப்பதில்லை. ஆனால் கோவா மக்களை நான் அவமானப்படுத்திவிட்டதாக அம்மாநில அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலடி கொடுக்க விரும்புகிறேன்.

முதலில் ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற முறையே தவறு. மாநில உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் அடிப்படையிலேயே அக்கூட்டத்தில் பேசினேன்.நான் கோவா மக்களை அவமானப்படுத்தும் வகையில் எதுவும் பேசவில்லை. அதனால், நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. நான் கோவா மக்களுக்காகவும், அவர்களுக்கும் ஆதரவாகத்தான் பேசினேன். அதற்காக எனக்கு நன்றி தெரிவிக்கத் தேவையில்லை. ஆனால் உங்களுக்கு இது போன்ற அமைச்சர் கிடைத்ததற்காக வருத்தப்படுகிறேன்” என்று கோவா மக்களை மேற்கோளிட்டு குறிப்பிட்டுள்ளார்.

பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பழனிவேல் தியாகராஜனை டேக் செய்துள்ள வானதி சீனிவாசன், “கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நடத்தை ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில் அமைந்திருந்தது. மேலும், இது போன்ற செயல்கள் நம் மாநிலத்தின் மீதான நல்ல பிம்பத்தைக் கெடுக்கும் வகையில் அமைகின்றன” என்று பதிவிட்டிருந்தார்.

வானதி சீனிவாசனின் கருத்துக்குப் பதிலளித்துள்ள பழனிவேல் தியாகராஜன், “உங்களுடைய பொய்களால் என்னை டேக் செய்வதை நிறுத்தி விட்டு மாற்றத்திற்கான வேலைகளைச் செய்யுங்கள்” என்று பதிவிட்டு விட்டு வானதி சீனிவாசனை ட்விட்டரில் பிளாக் செய்து விட்டார். தமிழக அமைச்சர் – கோவா அமைச்சர் என்ற நிலையில் வெடித்த மோதல் தற்போது, திமுக அமைச்சர் VS பாஜக எம்.எல்.ஏ என்று மாறியிருக்கிறது.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *