Share on Social Media


தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனியார் ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் அளித்த “கோயில்களை அரசிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுவது தவறானது. ஜக்கி ஒரு விளம்பரப் பிரியர். இதன் மூலம் மேலும் வருமானம் ஈட்டும் வழியைத்தான் ஜக்கி செய்து வருகிறார்” எனப் பதிலளித்திருந்தார். மேலும் அந்த நேர்காணலில் “ஜக்கி வாசுதேவ் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்” எனவும் கூறியிருந்தார்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

ஜக்கி வாசுதேவ் குறித்துத் தொடர்ந்து அதே கேள்வி நிதி அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டபோது அது தன்னுடைய துறை இல்லை என்றும் துறை சார்ந்த அமைச்சரவை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்வியின் அடிப்படையிலேயே பதில் அளித்தேன் என்றும் கூறியிருந்தார். இனி ஜக்கி வாசுதேவ் குறித்து ஒரு புகார் எழுந்தால்தான் அவர் குறித்துப் பேசுவேன் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில், சிவகங்கையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தேசிய தலைவர் ஹெச்.ராஜா “சென்னை மலர் மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் அருணாசலபுரத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோயில்களின் மனைக்கட்டுகளில் விஸ்தீரணம் 28 கோடி சதுர அடி கோயில் நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றை மீட்டு கோவில்களை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த சத்குருவை பழனிவேல் தியாகராஜன் மிரட்டுகிறார். கோவையில் இருக்கும் காருண்யாவைப் பற்றிப் பேச எந்த மந்திரிக்காவது முதுகெலும்பு இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பியவர் “நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா ஜெயிலர் ஜெயப்பிரகாஷை கொன்ற அல் உம்மாவின் ஆள்தான் இன்று பாபநாசம் எம்.எல்.ஏ.” என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-வைக் குறித்தும் பேசியிருக்கிறார்.

ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

‘நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா பெயர் தாஸ் எனவும் அவரும் ஜெயிலராகத்தான் இருந்தார். மேலும் கொல்லப்பட்டதாக சொல்லும் ஜெயப்பிரகாஷ் துணை ஜெயிலராக இருந்தவர். இது தெரியாமல் தவறான தகல்களை ஹெச்.ராஜா சொல்லி வருகிறார்’ என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்ல தன்னைக் குறித்து முகாந்திரம் இல்லாத குற்றச்சாட்டுகளை ஹெச்.ராஜா வைத்துள்ளார் என்பதால் அவர் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளதாக ஜவாஹிருல்லாவும் கூறியுள்ளார்.

ஜக்கி வாசுதேவ் குறித்து யார் பேசினாலும் அதற்கு ஹெச்.ராஜா உடனடியாக எதிர்வினை ஆற்றி வருகிறார். அதற்கான என்ன என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் வன்னியரசுவிடம் பேசினோம் “ஹெச்.ராஜா எப்போதாவது தரத்தோடு பேசியிருக்கிறாரா? தரம் தாழ்ந்த, இழிவான அரசியல்வாதி யார் என்ற கேள்வி எழுமானால் அதற்கு பதில் ஹெச்.ராஜா என்றுதான் இருக்கும். அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் பழனிவேல் தியாகராஜனின் கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளாமல் அச்சுறுத்தும் வகையில் மிரட்டியிருக்கிறார். ஜக்கி மீது மத்திய தணிக்கை குழு பதிவு செய்துள்ள குற்றவியல் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

வன்னியரசு

வன்னியரசு

ஜக்கி வாசுதேவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதை அரசியல் நோக்கில் இல்லாமல் சமூக நீதிப் பார்வையின் அடிப்படையிலேயே வலியுறுத்துகிறோம். மேலும், ஆன்மிகம் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டு வரும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தையும் இந்து சமய அறநிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அரசு கொண்டுவர வேண்டும் என்பதுதான் வி.சி.க-வின் நீண்ட நாள் கோரிக்கை” என்றவர்.

“ஜக்கி பேசும் கருத்தும் ஹெச்.ராஜா பெரும் கருத்தும் வேறுவேறில்லை ஒன்றுதான். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து தமிழகக் கோயில்களை விடுவிக்க வேண்டும் என்பதுதான் ஹெச்.ராஜா மற்றும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-இன் நீண்ட நாள் கோரிக்கை. ஆரம்பத்தில் இது குறித்துப் பேசாமல் இருந்த ஜக்கி வாசுதேவ் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததோடு தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு இணக்கமான, அனுசரணையான அரசாங்கம் வந்தபிறகு கொஞ்சம் தீவிரமாகவே அதைப் பேச ஆரம்பித்துவிட்டார். தங்களின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குமுன் சாமியார்கள், பெரிய பணக்காரர்கள் மூலம் பேச வைப்பதைத்தான் ஆர்.எஸ்.எஸ்-இன் வழக்கம். அதன்படிதான் கோயில்களை இந்துகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை ஜக்கியை வைத்துப் பேச வைத்துள்ளனர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். ஹெச்.ராஜா அதை அரசியல் தளத்திலிருந்தும் ஜக்கி வாசுதேவ் ஆன்மிகத்தளத்தில் இருந்தும் பேசுகின்றனர். அவ்வளவுதான் வித்தியாசமே தவிர இருவரும் ஒரே கருத்தை, சமூக நீதிக்கு எதிரான கருத்தைத்தான் பேசிவருகிறார்” என்றார்.

ஈஷா யோகா மையம்

ஈஷா யோகா மையம்

பா.ஜ.க-வின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசனிடம் பேசினோம் “பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையிலேயே இந்து கோயிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். தமிழகத்தில் இருக்கும் கோவில்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த இந்திய கோயில்களின் எண்ணிக்கையைவிட அதிகம். அதுபோல சொத்துகள் மற்றும் அதன்மூலம் வருமானமும் அதிகம். எனவே அவை அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் இருப்பது தவறு. பக்தர்கள் கோயிலுக்காகத்தான் செய்கிறார்களே தவிர ஆட்சியாளர்களுக்காச் செய்யவில்லை. சர்ச் நிர்வாகம், இஸ்லாமியர்களின் மசூதிகளை அரசு நெறிப்படுத்துகிறதே தவிர அவற்றில் தலையிடுவதில்லை. சமயசார்பற்ற அரசு என்று சொல்லிவிட்டு இந்து கோயில் மட்டும் கவனம் செலுத்துவது ஏன்? இதைத்தான் ஜக்கியும் சொல்கிறார்.

இராம ஶ்ரீநிவாசன் பா.ஜ.க

இராம ஶ்ரீநிவாசன் பா.ஜ.க

ஜக்கி வாசுதேவ் லட்சக்கணக்கானோரால் பின்பற்றப்படும் ஆன்மிகவாதி, பழனிவேல் ராஜனை விட வயதில் மூத்தவர் இல்லையா? அவரை ‘ஜக்கி வாசுதேவ் என்ன கிழிச்சான்?’ எனப் பேசுவது தவறில்லையா? இதுதான் தமிழர் பண்பாடா? ஆட்சிக்கு வந்ததும் அவன், இவன் என்று பேசும் உரிமை வந்துவிடுமா? அடிப்படை நாகரிகம் அற்ற செயல்தானே. நான் அப்படிப் பேசியது தவறுதான் என்று கூறி மன்னிப்புகூடக் கேட்கவில்லையே” என்றார்.

மேலும் “பொது வாழ்க்கைக்கு வரும்போது வார்த்தைகளை எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டாமா? அதுதான் எங்களுடைய கோபம், வருத்தம் எல்லாம். ஹெச்.ராஜா அப்படிப் பேசுவதற்கு தூண்டுகோலாக இருந்தது யார்? பழனிவேல் தியாகராஜன் அமெரிக்காவில் படித்தவர், மரியாதைக்குரியவர், பெரிய பாரம்பர்யமான குடும்ப பின்புலத்திலிருந்து வந்தவர். மற்ற அமைச்சர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவரே இப்படிப் பேசலாமா என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது. கோயிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று ஜக்கி பேசினால் அதில் உடன்பாடு இல்லை என்றால் இல்லை என்று சொல்லுங்கள்.

சிதிலமடைந்த கோயில்

சிதிலமடைந்த கோயில்

பா.ஜ.க சொல்வதை தி.மு.க ஏற்க வேண்டிய அவசியமும் இல்லை. நிச்சயம் ஒருநாள் பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அப்போது எங்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டுப் போகிறோம். விவாதங்களில் மூலம் புதிய வெளிச்சம் உருவாக வேண்டுமே தவிர எதிர்த்தரப்பினரை சூடாக்கும் வார்த்தைகள் இருக்கக் கூடாது. அப்படியான விவாதத்தை பா.ஜ.க எப்போதும் வரவேற்கும்” என்றார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *