Share on Social Media

தமிழில் பதிப்புத்துறையில் இயங்கும் பெண்கள் மிகக்குறைவு. `ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ்’ மூலம் கவனிக்கத்தக்க புத்தகங்களைப் பதிப்பித்துவரும் காயத்ரி, அவர்களில் ஒருவர். எப்படி இந்தத் துறைக்கு வந்தார் என்பதில் தொடங்கி எதிர்காலத் திட்டம் வரை அவரிடம் பேசினேன்.

“நீங்கள் பதிப்பகத்துறைக்கு வர காரணமென்ன? அதற்கு முன்பாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?”

“நான் இத்துறைக்கு வருவதற்கு முன்பாக ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பிரெஞ்சு மொழி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தேன். அப்போது பிரெஞ்சு மொழி எழுத்தாளருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதைத் தெரிந்துகொண்டபோது தமிழில் எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் இருந்தும் ஏன் அவர்களுக்கு நோபல் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. லா.ச.ரா, மெளனி, புதுமைப்பித்தன் போன்ற முன்னோடி எழுத்தாளர்களில் தொடங்கி இப்போது மிக நன்றாக எழுதும் புதிய இளம் எழுத்தாளர்கள் வரை இவர்களின் படைப்புகள் ஏன் கவனிக்கப்படவில்லை என்று வருத்தமாக இருந்தது. அப்போதுதான் இவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடலாமென்ற எண்ணம் தோன்றியது.

அப்போது என் நீண்ட நாள் குடும்ப நண்பர் ராம்ஜியுடன் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது நண்பர் எழுத்தாளர் சாருநிவேதிதாவைச் சந்தித்து இது குறித்துப் பேசியபோது அவரும் ஆதங்கப்பட்டுப் பேசினார். தமிழில் வெளிநாட்டு எழுத்தாளர்கள் மார்க்வெஸ், பாவ்லோ கொய்லோ, போன்றோரின் நூல்களை உடனுக்குடன் மொழிபெயர்த்து வெளியிடும் நாம், நம் எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்த்து உலக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை என்றதும் சாருவின் `எக்ஸைல்’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை வெளியிட பல பதிப்பகங்களுக்கு ஏறி இறங்கினோம். யாரும் போட முன்வரவில்லை.

உடனே ராம்ஜீ `நாமே ஏன் ஒரு பதிப்பகம் ஆரம்பித்து சாருவின் அனைத்து நூல்களையும் கொண்டு வரக்கூடாது?’ என்று சொல்லவே ஏற்கெனவே எனக்குள்ளிருந்த ஆசை நிறைவேறும் இடத்துக்கு வந்ததாக உணர்ந்து உடனே ஜீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பெயரைச் சூட்டி சாருவின் அனைத்து நூல்களையும் கொண்டு வரும் தீவிர முயற்சியில் இறங்கி வெற்றிகரமாகக் கொண்டு வந்துவிட்டோம். பதிப்புப் பணியில் முழுமையாகக் கவனம் செலுத்த, பிரெஞ்சு ஆசிரியர் பதிவியிலிருந்து விலகினேன்.

எனக்கு கிடைத்த அரசு வேலையையும் கைவிட்டேன். எல்லோரும் என்னைப் பைத்தியம் என்றனர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் என் வாழ்வில் நான் செய்ய விரும்பியதைச் செய்ய நினைத்தேன். வாழ்வில் பணம் பொருட்டல்ல. விருப்பப்பட்ட வாழ்வை நாம் நினைத்த வழியில் செயல்படுத்துவதுதான் சிறந்தது என்று இந்தப் பதிப்பகத் துறையில் என்னை நிலைநிறுத்த ஆரம்பித்துள்ளேன்.

“ஒரு பெண்ணுக்கு ஏற்கெனவே பல தடைகள் இருக்கும் இந்தியச் சூழலில் உங்களால் பதிப்பகப் பணியில் முழுமையாகக் கவனம் செலுத்த முடிகிறதா?”

“பெண்கள்தான் இந்தத் துறைக்கு ஏற்றவர்களென்று நான் நினைக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல் இது கடினமான பணிதான். படைப்பாளிகளுடனும் நூல் தயாரிப்பு பணியில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுடனும் இணக்கமாக இருந்துகொண்டு நூல்களை நல்ல முறையில் கொண்டு வர வேண்டும். மேலும் 24 மணி நேரமும் இந்தத் துறையைப் பற்றிய சிந்தனைகளுடனே இருக்கிறேன். இந்தத் துறைக்கு முழுமனதுடன் பணிபுரிய வந்ததால் எனக்கு இந்தப் பதிப்பகத்துறை கடினமானதாகவே தெரியவில்லை என்றே சொல்வேன்”

“ஒரு சின்ன குழுவாக இருந்துகொண்டு மூன்று வருடங்களில் 250 நூல்களைக் கொண்டு வந்துள்ளீர்கள். அதற்கான பொருளாதாரமும் உழைப்பும் எப்படி சாத்தியப்பட்டது?”

“முதல் மூன்று வருடங்கள் நானும் ராம்ஜீயும் சேர்ந்து பெரும் முயற்சி எடுத்து 200 நூல்களைக் கொண்டுவந்தோம். அதற்குப் பிறகு இப்போது நால்வராகச் செயல்படுகிறோம். இந்தப் பதிப்பகத்துக்கான பெரிய மூலதனத்தை நானும் ராம்ஜீயும்தான் செய்திருக்கிறோம். எத்தனையோ பெரிய பதிப்பகங்கள் இருந்தபோதும் எங்களை நம்பி எங்களுக்கு பேராதரவு தந்தது எழுத்தாளர்கள்தான். அவர்கள் சின்ன பதிப்பகமென்று பாராமல் எங்களிடம் அவர்களின் படைப்புகளைத் தந்து ஊக்கப் படுத்தினார்கள். குறிப்பாக, எழுத்தாளர் சாருநிவேதிதா தன்னுடைய 60 நூல்களையும் எங்களுக்கே தந்து பதிப்பகம் வளர ஒரு விதையாக இருந்தார். ஆகையால்தான் அவருக்கு நன்றி செலுத்தும்விதமாக, பதிப்பகத்தின் பெயரை ஜீரோ டிகிரி என்று வைத்தோம். அதுதவிர இந்தப் பதிப்பகத்துக்கும் அவருக்கும் வேறு எந்தத் தொடர்புமில்லை”

`ஜீரோ டிகிரி பப்ளிஷிங்’ காயத்ரி

Also Read: வாடிவாசல்: கையெழுத்தானது பதிப்பாளர் – இயக்குநர் ஒப்பந்தம்! தமிழ்த் திரையுலகில் முதல் முறை?!

“ஒரு புத்தகத்தை வெளியிட எவையெல்லாம் அடிப்படை என்று நினைக்கிறீர்கள்?”

“ஒரு படைப்பை பத்து, இருபது பக்கங்கள் படித்தவுடனேயே உள்ளிழுக்க வேண்டும். 21 வது பக்கத்தை அந்தப் படைப்பு புரட்ட வைக்க வேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்களைத்தான் கொண்டு வருகிறோம். குறிப்பாக, இப்போது எழுதும் புதிய எழுத்தாளர்கள் அமல்ராஜ் பிரான்சிஸ், சாதனா போன்றவர்கள் மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள். அவர்களைப் போன்ற இளம் எழுத்தாளர்களின் படைப்புகளையும் அறிமுகம் செய்திருக்கிறோம். இது தவிர, ஏற்கெனவே தங்களை சிறந்த எழுத்தாளர்களாக நிறுவியுள்ள மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளையும் தொடர்ந்து கொண்டு வருகிறோம்.”

“உங்கள் புத்தகங்களின் தரத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.”

“பதிப்பகம் ஆரம்பிப்பதற்கு முன்னால் எங்களுக்கு நூல் தயாரிக்கும் பணி பற்றி எதுவும் தெரியாது. ஆகையால் ஓடிசி, ஸ்டார் மார்க் போன்ற பெரிய புத்தகக் கடைகளுக்குச் சென்று நூல்களை ஆராய்ச்சி செய்தோம். அங்கிருந்த ஆங்கிலப் புத்தகங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு அழகாக இருந்தன. ஒரு 500 பக்க நாவலை கையில் எடுத்தபோது அது கனமற்றதாக இருந்தது. அப்போது இந்த நூல்கள் எங்கு அச்சிடப்படுகின்றனவோ அங்கேயே நாமும் அச்சிட்டு நூல்களைக் கொண்டு வருவோம் என்று ராம்ஜீ சொன்னார்.

அதே போல் ரிபளிக்கா, தாம்ஸன், மணிபால் டெக்னாலஜி போன்ற பதிப்பகங்கள்தான் இது போன்ற நூல்களைக் கொண்டு வருகின்றன என்று தெரிந்துகொண்டு எங்களுக்கு எளிதாக அடையும் தூரத்திலிருந்த மணிபால் டெக்னாலஜியை அனுகினோம். அங்கு போய் பார்த்தால் அவ்வளவு பிரமாண்டமான பிரின்டிங் ஹவுஸாக அது இருந்தது. ஹாரி பார்ட்டர், நேஷனல் ஜியோகிராபிக் போன்ற நூல்கள் அங்குதான் அச்சிடப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. அவர்களின் தொழில் நேர்த்தியைப்ப் பார்த்த பிறகு, நானும் ராம்ஜீயும் இங்குதான் நம் நூல்களைக் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து நூலாக்கத்தை மணிபாலில் தொடங்கினோம். மேலும் புத்தக அட்டையையும் தரமுடன் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து சிறந்த டிசைனர்களுடன் வேலை செய்து தரமிக்கதாகக் கொண்டு வந்தோம்.

Screenshot 2021 07 15 at 3 23 49 PM Tamil News Spot
`ஜீரோ டிகிரி பப்ளிஷிங்’

“இந்தத் துறையில் உங்கள் பதிப்பகத்தை மேலும் எவ்வாறு முன்னேற்றப் போகிறீர்கள்?”

“இப்போது நிறைய யோசனைகள் வைத்திருக்கிறோம். பென்குயின், காப்பர் காலின்ஸ் போன்ற பதிப்பகங்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் இம்பிரின்ட்ஸ் என்று தனித்தனியாக நூல்களைக் கொண்டு வருவார்கள். ஏனெனில், ஒரு பேனருக்கு கீழ் எல்லா நூல்களையும் கொண்டு வர மாட்டார்கள். ஒவ்வொரு துறையையும் தனித்தனியாகப் பிரிப்பார்கள். தமிழில் இம்பிரின்ட்ஸ் முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் நாங்களாகத்தான் இருப்போம். ஜீரோ டிகிரி என்ற பேனரின் கீழ் நேரடி ஆங்கில நூல்களை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளை மட்டும் கொண்டுவருகிறோம். எழுத்து பிரசுரம் என்ற பேனரின் கீழ் தமிழ் நூல்களைக் கொண்டு வருகிறோம். “

அதே போல குழந்தைகள் நூல்களுக்கு கமர்கட் என்ற பேனரின் கீழ் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொண்டு வரத் தொடங்கியிருக்கிறோம். அதே போல் zdp specifics என்ற பேனரில் பொதுவான நூல்களை அதாவது சுயமுன்னேற்ற நூல்கள், விளையாட்டுத்துறை சார்ந்த நூல்கள் ஆகியவற்றைக் கொண்டு வருகிறோம். இப்போது புதிதாக இம்பிரின்டுக்கு கீழ் அறிவியல் புதினங்கள், ஷிட்னி ஷெல்ட்டன், ஜெப்ரி ஆர்ச்சர் போன்ற த்ரில்லர் கதைகள், பாப்புலர் ஃபிக்‌ஷன் போன்றவற்றைக் கொண்டு வரலாம் என்றிருக்கிறோம். பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் போன்ற பிரபலமான எழுத்தாளர்களின் நூல்களையும் உலகத் தரமானதாகக் கொண்டு வரலாமென்றிருக்கிறோம். வெளிநாட்டில் இருப்பவர்களுக்காக ஆடியோ புக்ஸ் கொண்டுவரும் திட்டமும் உள்ளது. இதுதவிர மாதந்தர விமர்சன அரங்குகள் நடத்தலாமென்ற யோசனையுமிருக்கிறது. ஜீரோ டிகிரி பெயரில் விருதுகள் வழங்குவது எங்கள் எதிர்காலத் திட்டம்.”

“இணையங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் புத்தகங்களெல்லாம் இ புக்காகவும் பிடி எஃப்பாகவும் இலவசமாகக் கிடைக்கின்றன. இதனால் அச்சுத்துறை பாதிக்கப்படுமா?”

“அப்படி எனக்குத் தோன்றவில்லை. சோஷியல் மீடியா வந்த பிறகு, நூல் வாங்குவதும் படிப்பதும் அதிகமாகியிருக்கிறது. புத்தகமாய் வாசிக்க விருப்பப்படுகிறவர்கள் புத்தகங்களை வாங்கிய வண்ணம்தான் இருக்கின்றனர். இருப்பினும் கடின உழைப்பில் கொண்டு வரப்படும் நூல்களைக் கவனத்தில் கொண்டு இது போன்ற பைரசிகளைக் கட்டாயம் அரசாங்கம் தடை செய்யத்தான் வேண்டும். சினிமாவுக்கு நிகழ்வதுபோல இது அச்சுத்துறைக்கும் வந்துவிட்டது. ஆனால், என்னைப் பொறுத்தவரை இதனால் அச்சுத்துறை பெரிதாகப் பாதிக்கப்பட்டிக்கிறது என்று சொல்வதற்கில்லை.”

books 5937716 1280 Tamil News Spot
Books (Representational Image)

“பதிப்பாளாராக இருக்கும் உங்களுக்குப் படைப்பாளராகும் எண்ணமிருக்கிறதா?”

“எல்லோருக்கும் ஓர் ஆசை இருக்கத்தான் செய்கிறது. சில பேர் சினிமாவில் முகம் காட்ட நினைப்பார்கள். சிலபேர் பாடகராக வேண்டுமென நினைப்பார்கள். எனக்கு எழுத்தாளராக ஆகும் எண்ணம் இல்லைதான். ஆனால், ஆசை இருக்கிறது. ஒரு நூல் வெளியிட்டு ஓர் அறிவுஜீவி முகத்தை, அடையாளத்தை அடைய வேண்டுமென்று விருப்பமிருக்கிறது. இப்போதைக்கு அது போன்று எந்த எண்ணமும் உதிக்கவில்லை. ஆனால், மொழிபெயர்ப்பு செய்துகொண்டுதானிருக்கிறேன். அவற்றை நூலாக்கம் செய்துகொண்டிருக்கிறேன்.”

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *