Share on Social Media


திருப்பூர்;தொற்றின் இரண்டாவது அலை தணியத் துவங்கியதில் இருந்து, திருப்பூர் பின்னலாடைத் துறை மீண்டெழுந்து வந்தது. மூலப்பொருட்கள் விலை உயர்வு உட்பட பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதும், இவற்றை சமாளிக்க தொழில்துறையினர் தயாராகிவருகின்றனர்.

கடந்த மே மாதம், கொரோனா இரண்டாவது அலை சுழன்றடித்தது.முதல் அலையைவிட, இரண்டாவது அலை, தொழில் துறையிலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டின் பின்னலாடை நகரான திருப்பூர், தேசம் முழுவதும் உள்ள பல லட்சம் தொழிலாளர்களளுக்கு வேலைவாய்ப்பு அளித்துவருகிறது.கொரோனாவால், ஒரு மாதத்துக்கும் மேலாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை ஸ்தம்பித்தது.

இந்த துறை சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், வேலை இன்றி, வருவாய் இழந்து பரிதவித்தனர். வர்த்தக இழப்பு, நிதி நெருக்கடி என பின்னலாடை தொழில்முனைவோருக்கும் நெருக்கடிகள் ஏற்பட்டன.தொற்று பரவல் குறைந்ததையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல், படிப்படியாக திருப்பூர் பின்னலாடை துறை இயக்கத்தை துவக்கியது.
முன்னெச்சரிக்கையிலும் முன்னோடிஅதிநவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் நிறுவி, பின்னலாடை தொழில் துறையின் நாட்டின் பிற நகரங்களுக்கெல்லாம் முன்னோடியாக திருப்பூர் பின்னலாடை துறையினர் திகழ்கின்றனர்.கொரோனா ஒழிப்பிலும் கூட, திருப்பூர் தொழில் துறையினர் முன்மாதிரியாக செயல்பட்டனர். தனியார் மருத்துவமனைகளிடம் விலை கொடுத்து வாங்கி, தங்கள் தொழிலாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தி, தொற்று பரவலை தடுக்க உதவினர்.
ஆர்டர் வருகை அதிகரிப்பு

அமெரிக்கா, ஐரோப்பா, கனடா உட்பட உலகளாவிய நாட்டு மக்கள், அதிகளவு ஆடை ரகங்களை வாங்கத் துவங்கிவிட்டனர். பல்வேறு நாடுகளிலிருந்து, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிகளவில் வந்துகொண்டிருக்கின்றன. நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்., முதல் அக்., வரையிலான ஏழு மாதங்களில், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 16,420 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

உள்நாட்டு சந்தைக்காக ஆடை தயாரிக்கும், நிறுவனங்களுக்கும், நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்களிடமிருந்து, குளிர், பண்டிகை கால ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன. புதிய ஆர்டர் வருகை, பின்னலாடை துறையினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நிறைவேறின ஒப்பந்தங்கள்கொரோனாவால் தடைபட்ட, பல்வேறு ஒப்பந்தங்களும் தற்போது நிறைவேறியுள்ளன.

‘சைமா’ – பவர்டேபிள் சங்கம் இடையே, கடந்த 2016ல் போடப்பட்ட பவர்டேபிள் கட்டண உயர்வு ஒப்பந்தம், 2020, அக்டோபரில் காலாவதியானது.கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்ததையடுத்து, இரு சங்கங்களும் கூடிப்பேசின. பின்னலாடை டஜனுக்கு 6 ரூபாய் பவர்டேபிள் கட்டண உயர்வு நிர்ணயித்து, ஆக. 2ம் தேதி, ஒரு இடைக்கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.பின்னலாடை தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்காக, ஆறு பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்கள் – எட்டு தொழிற் சங்கங்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்துவந்தது.

நீண்ட இழுபறிக்குப்பின், கடந்த செப்., 29 ல், ஒப்பந்தம் கையெழுத்தானது. நடப்பு ஆண்டு முதல், வரும் 2025ம் ஆண்டுவரை, 19, 5, 4, 4 சதவீதம் என, மொத்தம் 32 சதவீதம் சம்பள உயர்வு வழங்கவேண்டும் என்பது ஒப்பந்த ஷரத்து.திருப்பூர் மாவட்ட சரக்கு போக்குவரத்து சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு., – ஏ.ஐ.டி.யு.சி., – அண்ணா தொழிற் சங்கங்களிடையே, கடந்த அக்டோபரில், சுமை பணியாளர் கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. வாகனங்களில் சரக்கு ஏற்றி, இறக்குவதற்கான கூலி, டஜனுக்கு 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சோதனை தொடர்கிறது
கொரோனா ஒழிந்து, வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆர்டர் வருகை அதிகரித்துள்ள நிலையில், தற்போது அடுத்தடுத்த இன்னல்கள் திருப்பூர் பின்னலாடை துறையை சூழ்ந்துள்ளன.கொரோனாவுக்கு பின், உலக அளவில் கண்டெய்னர் தட்டுப்பாடு நிலவுகிறது. சரக்கு கப்பல் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. இதையடுத்து, உற்பத்தி செய்த ஆயத்த ஆடைகளை வெளிநாடுகளுக்கு உரிய காலத்தில் அனுப்பமுடியாமை; ஆடைகளை அனுப்புவதற்கான செலவினம் அதிகரிப்பால், திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் தவித்துவருகின்றன.
பருத்தி – பஞ்சு விலை உயர்வால், தமிழக நுாற்பாலைகள், அனைத்து ரக நுால் விலையை உயர்ந்தி வருகின்றன. வரலாறு காணாதவகையில், இம்மாதம் 1ம் தேதி, ஒரேநாளில், கிலோவுக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டது.பஞ்சு, நுால் ஏற்றுமதியை கட்டுப்படுத்தக்கோரி, அனைத்து பின்னலாடை தொழில் அமைப்பினர் ஒருங்கிணைந்து, கடந்த 26ம் தேதி முழு அடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தியுள்ளன.

பின்னலாடை உற்பத்தி சங்கிலியில், பத்துக்கும் மேற்பட்ட ஜாப்ஒர்க் துறைகள் அங்கம்வகிக்கின்றன. சாயம், விறகு உட்பட எல்லாவகை மூலப்பொருட்கள் விலை உயர்வால், நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, ரைசிங், ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங், காஜாபட்டன், செக்கிங், அயர்னிங் உட்பட அனைத்து ஜாப்ஒர்க் கட்டணங்களும், 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன.எலாஸ்டிக், பாலிபேக், அட்டைபெட்டி, அக்சசரீஸ்கள் என, ஆடை தயாரிப்பு துறைக்கு தேவையான எல்லாவகை பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளன.

இதனால், பின்னலாடை நிறுவனங்களின் ஆடை தயாரிப்பு செலவினங்கள் அதிகரித்துள்ளன. பெறப்பட்ட ஆர்டர்களுக்கு ஆடை தயாரிப்பது; ஆடைகளுக்கு விலை நிர்ணயித்து, புதிய ஆர்டர்களை பெறுவது சவாலாகியுள்ளது. வர்த்தகர்களிடம் ஆடைகளுக்கு விலை உயர்வு பெற்றால் மட்டுமே, சவால்களை சமாளிக்கமுடியும் என்ற நிலை உள்ளது.ஜி.எஸ்.டி., கவுன்சில், சாயமேற்றுதல், பிரின்டிங்கிற்கான ஜி.எஸ்.டி., வரியை, 5ல் இருந்து, 12 சதவீதமாக உயர்த்தியுள்ளது; அதேபோல், அனைத்து விலையுள்ள ஆடைக்கான வரி, 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வரி உயர்வு, திருப்பூரில், சாய ஆலை துறையினர் மற்றும் ஏற்றுமதி பின்னலாடை ஆடை உற்பத்தி துறையினருக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.அதேநேரம், பிரின்டிங், உள்நாட்டு சந்தைக்கு ஆடை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, வரி உயர்வு பாதகமாகிறது. இவ்விரு துறையினரும், வரி உயர்வு கூடாது என, அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு சோதனை ஒன்றும் புதிதல்ல; சாய ஆலை மூடல், பல மணி நேர மின்வெட்டு, மூலப்பொருட்கள் விலை உயர்வு என, கடந்த காலங்களில் ஏராளமான சோதனைகளை கடந்தே இந்த துறை சாதித்துவந்துள்ளது.தற்போது மலைபோல் எழுந்துள்ள பிரச்னைகளெல்லாம், தொழில் துறையினரின் அயராத முயற்சிக்கு முன்னால், பகலவனைக்கண்ட பனிபோல் உருவாகி ஓடிவிடும் என்பது திண்ணம்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *