Share on Social Media


கோவை:வினியோகிப்பதற்கு தயார் நிலையிலுள்ள ரேஷன் கார்டுகளுக்கும், கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை பொருள் தொகுப்பு வழங்க வேண்டும் என்று, அரசு உத்தரவிட்ட நிலையில், அவை மக்களுக்கு இனியும் சென்றடையவில்லை.

கோவை மாவட்டத்தில், 10 லட்சத்து 64, 860 ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. 1,401 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் வாயிலாக, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு போய் சேர்க்கப்படுகின்றன.இந்நிலையில், புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு, மாவட்டத்திலுள்ள 11 தாலுகாக்களிலிருந்து, 11,876 விண்ணப்பங்கள், மாவட்ட வழங்கல் அலுவலர்கள் வசம் வந்து சேர்ந்தன.அவற்றை பரிசீலனைக்கு உட்படுத்தி, வழங்கல் துறை அலுவலர்கள் கள விசாரணை மேற்கொண்டனர்.

மொத்தம் வந்து சேர்ந்த 11,876 விண்ணப்பங்களில், 9,706 விண்ணப்பங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டன.அவை அச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, சம்மந்தப்பட்ட குடும்ப தலைவரின் மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கும், கொரோனா நிவாரணத்தொகையை, குறுஞ்செய்தியின் அடிப்படையில், ஆதார் அட்டையை சரிபார்த்து வழங்க வேண்டும் என்று, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.அதன்படி, ரேஷன்கடைகளில் குறுஞ்செய்தியை காண்பித்து நிவாரணத்தொகையை கேட்டால், இது சம்மந்தமாக எந்த அறிவிப்பும் தங்களுக்கு வரவில்லை என்று, ரேஷன்கடைக்காரர்கள் கைவிரிக்கின்றனர்.

இது குறித்து, தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ”புதிய ரேஷன்கார்டுதாரர்களுக்கு, நிவாரணத்தொகை வழங்க அரசு உத்தரவிட்டது உண்மை. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீட்டை, ரேஷன்கடைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதை செய்யாமல், ரேஷன்கடைக்காரர்கள் எப்படி தொகையை கொடுக்க முடியும். அதே போல்தான் மளிகை தொகுப்பும். கடைகளுக்கு முறையாக ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றால், கட்டாயம் நாங்கள் வழங்க தயாராக இருக்கிறோம்,” என்றார்.அப்படியானால், தமிழக அரசின் அறிவிப்பு சும்மா ஆசை காண்பிக்கத்தானா!

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *