Share on Social Media


சேலம்: சேலத்தில் 95 வயதான தாயை பராமரிக்காமல், கழிவறைக்குள் அடைத்து வைத்து, சாப்பாடு கூட தராமல் பெற்ற மகனே சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பழைய சூரமங்கலம் ஹவுசிங் போர்டு பகுதியில், ஒரு வீட்டின் கழிவறையில் இருந்து மூதாட்டியின் முனகல் சத்தமும், காப்பாற்றுங்கள் என்ற அவலக்குரலும் தொடர்ச்சியாக வந்துள்ளது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள், அந்த வீட்டின் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் யாரும் திறக்கவில்லை.  இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள போதிமரம் என்ற தொண்டு நிறுவன நிர்வாகிகள் ரமேஷ்குமார், ராஜராஜேஸ்வரி, பிரேமா ஆகியோர், அங்கு சென்றனர். வீட்டின் கழிவறையை திறந்தபோது, 95 வயதான மூதாட்டி ஒருவர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து திடுக்கிட்டனர். பின்னர், அந்த மூதாட்டியை மீட்டு தொண்டு நிறுவன நிர்வாகிகள் விசாரித்த போது, அவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். தொடர்ந்து அவரிடம் பேசிய போது, நெஞ்சை உருக்கும் தகவல்கள் வெளியானது.

அதுபற்றிய விபரம் வருமாறு: மீட்கப்பட்ட மூதாட்டியின் பெயர் ராதா(95). அவரது கணவர் ராஜகோபால் போலீஸ் ஏட்டாக பணியாற்றியவர். வளமாக வாழ்ந்த இந்த தம்பதிக்கு 4 மகன்கள். அதில் 2 பேர் ஏற்கனவே இறந்துவிட்டனர். 2 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஒரு மகன் எங்கிருக்கிறார் என்றே தெரியாத நிலையில், கடைசி மகன் டால்மியா போர்டில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் தான், மூதாட்டி வசித்துள்ளார். இவரது கணவரின் பென்ஷன் பணம் ரூ.12 ஆயிரத்தை, கடைசி மகன் வாங்கிக் கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால், தாயை கவனிக்கவில்லை. வேளா வேளைக்கு சரிவர சாப்பாடு கூட தராமல் துன்புறுத்தியுள்ளார். ஆதரிப்பார் யாருமில்லாததால் வேதனைப்பட்டு வந்த மூதாட்டி ராதாவை, பெற்ற தாய் என்றும் பாராமல் கழிவறைக்கு அருகே சிறு குளியலறையில் அடைத்து வைத்துள்ளார் மகன். மழை பெய்தால் ஒழுகும் அந்த சிறு அறையில், தன்னிடம் இருந்த ஒரே போர்வையை போர்த்திக் கொண்டு, கடும் சித்ரவதைகளை அனுபவித்து வந்துள்ளார். இவ்வாறு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உணவின்றி அவர் தவித்துள்ளார்.

இதையடுத்தே, வேறு வழியின்றி உதவி கேட்டு தொடர்ச்சியாக கூக்குரல் எழுப்பியுள்ளார். அதை அவ்வழியாக சென்றவர்கள் கேட்டு, கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னரே, அவர் மீட்கப்பட்டுள்ளார். மூதாட்டியின் சோகத்தை கேட்ட தொண்டு நிறுவன நிர்வாகிகள், அவரது மகனிடம் செல்போனில் விசாரித்தனர். அப்போது, அவர் எனது தாய் இறந்து விட்டால், நீங்களே புதைத்து விடுங்கள் என அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, மூதாட்டி ராதாவை போதிமரம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். பெற்ற தாயை கழிவறைக்குள் பூட்டி வைத்து, உணவு வழங்காமல் பெற்ற மகனே சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *