Share on Social Media

புதுடில்லி: ஒலிம்பிக்கில் சாதிக்க 90 பேர் கொண்ட இந்திய நட்சத்திரங்கள் தனி விமானத்தில் டோக்கியோ கிளம்பினர்.

ஜப்பானின் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டி வரும் 23 முதல் ஆக. 8 வரை நடக்கவுள்ளது. 206 நாடுகளில் இருந்து 11,238 க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் களமிறங்க காத்திருக்கின்றனர். இதற்காக இந்தியாவின் படகுப் போட்டி நட்சத்திரங்கள் நேத்ரா, வருண் உட்பட 6 பேர் முதல் அணியாக டோக்கியோ சென்றனர். அடுத்து பளுதுாக்குதல் வீராங்கனை மீரா பாய், துப்பாக்கிசுடுதல் நட்சத்திரங்கள் அங்கு சென்றனர்.

இதனிடையே ஒலிம்பிக் துவங்க 5 நாள் மட்டுமே உள்ள நிலையில் இந்திய ஆண்கள், பெண்கள் ஹாக்கி அணியினர், பாட்மின்டன் வீராங்கனை சிந்து, பயிற்சியாளர்கள் உட்பட 90 பேர் அடங்கிய அணி, நேற்று டில்லியில் இருந்து தனி விமானத்தில் டோக்கியோ கிளம்பியது. இந்த விமானத்தில் பயணிகள் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இவர் டோக்கியோ சென்றதும் மூன்று நாள் தனிமைப்படுத்தப்படுவர். கொரோனா சோதனையில் தேறிய பின், ஒலிம்பிக் கிராமத்துக்கு செல்ல அனுமதி கிடைக்கும். இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலர் ராஜிவ் மேத்தா கூறுகையில்,‘‘டோக்கியோ சென்ற மறுநாள் முதல், 3 நாள் தனிமையில் இருக்க வேண்டும். இதன் பின் தங்கள் அறைகளுக்கு செல்லலாம்,’’ என்றார்.

இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் அஜந்தா சரத் கமல் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ஒலிம்பிக் போட்டிக்கு கடந்த ஆண்டு புதிய சோதனை வந்தது. ஒரு வழியாக இந்திய நட்சத்திரங்கள் டோக்கியோ செல்கிறோம்,’’ என தெரிவித்துள்ளார்.

நேரடியாக பயிற்சி

இந்திய துப்பாக்கிசுடுதல் நட்சத்திரங்கள் குரோஷியாவில் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டனர். அங்கிருந்து நேற்று டோக்கியோ சென்றனர். இவர்களுக்கு ‘தனிமை’ வேண்டாம் என தெரிவிக்கப்பட பயிற்சிக்கு தயாராகி வருகின்றனர்.

மீராபாய் தீவிரம்

ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் இந்திய பளுதுாக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, பயிற்சியாளர்கள் இருவருடன் டோக்கியோ சென்றார். இங்குள்ள மையத்தில் பளுதுாக்குதல் பயிற்சியை துவக்கினார்.

மத்திய அமைச்சர் வாழ்த்து

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘இந்தியா சார்பில் முதன் முறையாக ஒலிம்பிக்கில் 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். முதல் கட்டமாக நமது நட்சத்திரங்கள் டோக்கியோ செல்கின்றனர். ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படத்தக்க விஷயம் இது. அனைவரும் வாழ்த்துங்கள்,’ என தெரிவித்துள்ளார்.

கிராமத்தில் ‘கொரோனா’

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் முதன் முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நபர் கிராமத்தில் இருந்து அகற்றப்பட்டு, ஓட்டலில் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டார். இவர் யார் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

தெரியுமா ‘மோக்கோ’

கடந்த 2011 பூகம்பம், சுனாமியில் ஜப்பானின் டோகோகு பகுதி மோசமாக பாதிக்கப்பட்டது. இங்குள்ள சிறுவர்களின் சிந்தனையில் உருவான கற்பனை உருவம் தான் ‘மோக்கோ’. இந்த கதையில் ஈர்க்கப்பட்ட திரைக்கதை ஆசிரியர் கன்குரோ குடோ இந்தப் பெயரை சூட்டினார்.

ஒலிம்பிக் துவக்க விழாவில் ‘டோகோகு டு டோக்கியோ’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதையடுத்து ராட்சத ‘மோக்கோ’ உருவம் கடந்த மே 15 முதல் டோகோகுவின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, நேற்று டோக்கியோ பார்க் கொண்டு வரப்பட்டது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *