சென்னை ஆழ்வார் திருநகர், சித்து விநாயகர் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஆமெல்லா ஜோதினி. இவரின் கணவர் கோபால், தொழிலதிபர். கடந்த 17.11.2021-ம் தேதி வீட்டை பூட்டை விட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றனர். பின்னர், 20.11.2021-ம் தேதி வீட்டுக்கு வந்தபோது கதவு திறக்கப்பட்டு லாக்கரில் வைத்திருந்து நான்கரை கோடி ரூபாய் பணம், 30 சவரன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தன. இதுகுறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆமெல்லா ஜோதினி புகாரளித்தார். அதன்பேரில் சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன் உத்தரவின்பேரில் வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

கொள்ளை நடந்த வீட்டின் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளைக் கும்பல் பயன்படுத்திய காரின் பதிவு நம்பரைக் கொண்டு அவர்கள் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர். பின்னர் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மணி (31), சதீஷ்குமார் (32), சுரேஷ் (32), ஆறுமுகம் (49) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.35 கோடி ரூபாய், கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில் இந்தக் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த கோவூர், ஸ்ரீகுமரன் நகரைச் சேர்ந்த சேகர் (57) என்பவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து ஒரு கோடியே 70 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.