சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் வகையில், முதல்கட்டமாக 645 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டமைப்பு பணிகளுக்கு, ‘ஸ்மார்ட் சிட்டி’ நிறுவனம் ஒப்பந்தம் அறிவித்துள்ளது.
இதனால், அடுத்த சில ஆண்டுகளில் சாலைகள், சிக்னல், பஸ் போக்குவரத்து என அனைத்தும், சர்வதேச தரத்தில் நவீனமயமாகும் என்றும், சாலை போக்குவரத்தில் பாதுகாப்பு பல மடங்கு உறுதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் 904.88 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி, காவல்துறை, மாநகர போக்குவரத்து கழகம், ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் ஆகியவை இணைந்து, இந்த திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது
.சென்னை போக்குவரத்து மேலாண்மை, போக்குவரத்து தகவல் மையம், மாநகர பஸ் போக்குவரத்து திட்டம் ஆகிய மூன்று பிரிவுகளாக, இந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கு, ‘ஜிகா’ எனப்படும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி நிறுவனம், பெரும் பகுதி நிதியை கடனாக வழங்க உள்ளது.முதல் கட்டமாக, இந்நிறுவனம் மற்றும் தமிழக அரசின் நிதியை சேர்த்து 645.59 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் துவக்கப்பட உள்ளன.
இதற்கான ஒப்பந்த அறிவிப்பு, சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.புதிய திட்டங்கள்சென்னையில், 165 இடங்களில் நான்கு முனை சந்திப்புகள் உள்ளன. இவற்றின் போக்குவரத்து சிக்னல்களை ஒருங்கிணைத்து, தடையற்ற சீரான போக்குவரத்துக்கு,
இத்திட்டத்தின் கீழ் வழிவகை செய்யப்படும்.மேலும், மாநகர பஸ்கள் எங்கு வருகிறது போன்ற தகவல்களை, பேருந்து நிறுத்தங்கள் அல்லது மொபைல் போன் செயலி வாயிலாக, பொதுமக்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.சிக்னல்களில் சிவப்பு விளக்கை மதிக்காமல் செல்வது, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி அதிக வேகமாக பயணிப்பது போன்ற போக்குவரத்து விதிமீறல்களை, அதிநவீன கேமரா மற்றும் ‘சென்சார்’ உதவியுடன் கண்டறிந்து, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகள் இதில் அடக்கம்.மேலும், குறிப்பிட்ட சாலையில் செல்வதற்கு முன், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதா என்பதையும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு எவ்வாறு போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக செல்வது என்பதையும் அறிய, மொபைல் போன் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது
.இதுகுறித்து, சென்னை ஸ்மார்ட் சிட்டி தலைமை நிர்வாக அலுவலர் ராஜ் செரூபல் கூறியதாவது:சென்னை போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதால், தங்கு தடையற்ற போக்குவரத்துக்கு வழிவகுக்க முடியும். குறிப்பாக, 165 நான்கு முனை சந்திப்புகளை ஒருங்கிணைத்து, கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்படும். தனிப்பாதைஅனைத்து சாலைகளும் நவீன கேமரா உதவியுடன் கண்காணிக்கப்படும். ஒரு சிக்னலில் பச்சை விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது, அச்சாலையை கடக்க அதிகளவில் வாகனங்கள் இல்லையென்றால், காத்திருக்கும் வாகனங்களுக்கு ஏற்ப கண்காணிப்பு மையத்தில் இருந்தே சிக்னல் மாற்றப்படும்.
அதேபோல், ஒரு சாலையில் எவ்வளவு வாகனங்கள் செல்கிறது என்பதை அறிந்து, அந்த நேரத்தில், சிக்னலை வாகனங்கள் கடக்க அதிக நேரம் ஒதுக்கப்படும். குறைவான வாகனங்கள் வரும் சாலையில், சிக்னல்களுக்கான நேரம் குறைக்கப்படும். இதன் வாயிலாக, சீரான போக்குவரத்தை உறுதி செய்ய முடியும்.பல்வேறு நேரங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு, வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபடுவது தான் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, அதிநவீன கேமராக்கள் வாயிலாக கண்காணிக்கப்பட்டு, உடனடி அபராதம் விதிக்கப்படும். அதேபோல், விபத்து நடைபெற்ற பகுதிகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்வதுடன், வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும் திட்டமிடப்படும்.நான்குமுனை சந்திப்புகளில், தற்போது, சிக்னல் வழிகாட்டி வாயிலாகவே வாகனங்கள் கடந்து செல்கின்றன. அதற்கு பதிலாக, நேராக செல்லக்கூடிய வாகனங்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில், தனிப்பாதை குறியீடு செய்து காட்டப்படும்.’ப்ரீ லெப்ட்’ எனப்படும் சிக்னல் இல்லாமல் இடதுபுறம் திரும்புவதும் எளிதாக்கப்படும். வலதுபுறம் செல்லும் வாகனங்கள் மட்டுமே, சில வினாடிகள் நின்று செல்லும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். சாலை சந்திப்புகள் வளைவாக மாற்றப்பட்டு, சீரான போக்குவரத்து உறுதி செய்யப்படும். விண்ணப்பம்போக்குவரத்து மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் நவீன கேமராக்களின் செயல்பாடு, துல்லியம் போன்றவை குறித்து, பாதுகாப்பு கருதி வெளியில் கூற முடியாது. இத்திட்டத்திற்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்திற்கு, ஒப்பந்தம் கோரும் நிறுவனங்களின் தகுதி மற்றும் பணிகள் குறித்து, https://cscl.co.in/tender என்ற, சென்னை ஸ்மார்ட் சிட்டி இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இதை பார்த்து, தகுதியான நிறுவனங்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஒப்பந்தத்திற்கு விண்ணப்பிக்க, ஜன., 18ம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்கள் அதற்கான முன்பணம் ஆகியவை, இணையதளம் வழியாகவே செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.வாகனங்கள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்தில்!சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து வசதி மற்றும் கட்டமைப்புக்களையும் கண்காணிக்க, மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது, தற்போது சோதனை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டமைப்புக்கள் உருவாக்கப்படும் போது, இந்த மையம் முழுவீச்சில் செயல்படும். இதற்காக, ரிப்பன் மாளிகை வளாகத்தில் தனி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இம்மையத்தின் செயல்பாடுகள்: முக்கிய சாலைகளில், வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்வதை கண்காணிப்பு மையத்தில் இருந்தபடியே தடுத்தல் சாலை விபத்துகள் அல்லது போக்குவரத்து நெரிசல் போன்ற திடீர் சம்பவங்களுக்கு, மையத்தின் வாயிலாக உடனடி தீர்வு ஏற்படுத்துதல் சம்பந்தப்பட்ட பகுதியில்
இதற்கு முன் நடந்த சம்பவம் போல், வருங்காலங்களில் நடைபெறாமல் கண்காணித்தல் விபத்து அல்லது வாகன நெரிசல் குறித்து அறிவித்தல் நெரிசல் உள்ள, நெரில் இல்லாத மாற்று சாலைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு அடையாளம் காட்டுதல் சிக்னல்களில் விதிமீறும் வாகனங்கள், அதிவேகமாக செல்லும் வாகனங்களை, அவற்றின் பதிவெண்களை தானியங்கி முறையில் கண்டறிந்து கண்காணித்தல், தடுத்தல். விதிமீறலுக்கான புகைப்படத்துடன், அபராதம் விதித்தல் வாகன போக்குவரத்து மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிபரங்கள் திரட்டுதல்
நமது நிருபர் –