Share on Social Media


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று மதியம் முதல் மீண்டும் கன மழை துவங்கியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு, இன்று ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி மற்றொரு வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கடந்த வாரம் பெய்த கன மழையால் தேங்கிய மழை நீரே பல இடங்களில் அகற்றப்படாத நிலையில், தற்போது அடுத்த கன மழை துவங்கியுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனினும், நிலைமையை சமாளிக்க, மாநகராட்சி சார்பில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் துவங்கிய வடகிழக்கு பருவ மழையால், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது.

இந்நிலையில், கடந்த வாரம் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால், 6 மற்றும் 7ம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. பாதிப்புசென்னையில், அதிகபட்சமாக, ஒரே நாளில், 23 செ.மீ., மழை கொட்டியது.

இதனால், சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.வட சென்னையில் புளியந்தோப்பு, காசிமேடு, கொரட்டூர், அம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதே போல், சென்னையின் மத்திய பகுதியான, தி.நகர், கே.கே.நகர், வடபழநி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால், அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியதால், சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தென்சென்னையில், வேளச்சேரி, பெருங்குடி, சோழிங்கநல்லுார், கண்ணகி நகர், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம் போல வெள்ளம் சூழ்ந்ததுடன், மழை நீருடன் கழிவு நீரும் கலந்ததால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.மடிப்பாக்கத்தில் வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகம் இருந்தது. வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் வழக்கம் போல் கடலுக்கு நடுவே உள்ள தீவு போல் காட்சி அளித்தது. சென்னையில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி சார்பிலும், புறநகர் பகுதிகளில் அந்தந்த உள்ளாட்சிகள் சார்பிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில், 11ம் தேதிக்கு பின், வறண்ட வானிலை நிலவியது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை நின்றதால், பாதிப்பில் இருந்து மீண்டு மக்கள் நிம்மதி அடைந்தனர்.மழையால் நான்கு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் பெரும்பாலும் நிறைந்ததால், அவற்றில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.’ரெட் அலெர்ட்’மழை சற்று ஓய்ந்ததால் உபரி நீர் திறப்பின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிஇருப்பதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், இன்று அதிக கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதன் துவக்கமாக, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றே பல இடங்களில் கனமழை துவங்கியது. கடந்த மழையின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், மீண்டும் கன மழை பெய்ய துவங்கிஇருப்பதால்,

மற்றொரு வெள்ள அபாயத்தால், சென்னை வாசிகள் பீதியில் உறைந்துள்ளனர். கடந்த மழையின் போது தேங்கிய வெள்ளமே இன்னும் பல இடங்களில் வடியாததால், மற்றொரு கன மழையை எதிர்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்படும் என, வெள்ள பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.குறிப்பாக வேளச்சேரி, செம்மஞ்சேரி, கண்ணகிநகர், பெரவள்ளூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில், இன்னும் மழை நீர் அகற்றப்படாததால், அப்பகுதி மக்களால் அடுத்த மழையை எதிர்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், தாழ்வான பகுதிகள் மற்றும் மழை நீர் வடியாக பகுதிகளில் தேங்கிய நீரை உடனடியாக அகற்ற மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். நேற்று மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டோரை தங்க வைக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.மாநகராட்சி சார்பில் உணவு தயாரித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேங்காமல் இருக்க அனைத்து மண்டலங்களிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் பீதியடைய வேண்டாம் என, மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

துாண்டில் வளைவுகளை சீரமைக்க வேண்டும்சென்னை, எண்ணுாரில், முகத்துவார குப்பம், நெட்டுகுப்பம், எண்ணுார் குப்பம், தாழங்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம், எர்ணாவூர் குப்பம் மற்றும் திருவொற்றியூரில், கே.வி.கே., குப்பம், திருவொற்றியூர் குப்பம், ஒண்டிக்குப்பம், நல்லதண்ணீர் ஓடை குப்பம் என, 22 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு வசிப்போர், மீன் பிடிப்பதை தங்கள் பிரதான தொழிலாக மேற்கொண்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், கடலரிப்பு, கடல் சீற்றத்தால், மீனவ கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.பாதிப்பை தவிர்க்க, சுனாமிக்கு முன், செரியன் நகர் – பாரதியார் நகர் வரை, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில், 0.5 கி.மீ., 1 கி.மீ., துார அளவில், கடலில் பாறாங்கள் கொட்டப்பட்டு,

துாண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டன. அதன் பின், மேலும் இரண்டு கட்டங்களில் துாண்டில் வளைவு அமைக்கும் பணி நடந்தது. இதன் பிறகு, கடலரிப்பு மற்றும் சீற்றம் காரணமாக, மீனவ கிராமங்கள் பாதிக்கப்படுவது, பெரும்பாலும் குறைந்தது. இருப்பினும், 2016 ம் ஆண்டிற்கு பின், அடுத்தடுத்து படையெடுத்த, நடா, வர்தா, ஒகி, கஜா, நிவர் போன்ற புயல்கள் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால், ஆர்பரித்த கடல்சீற்றத்தால், துாண்டில் வளைவுகளின் கற்கள், கடலில் சரிந்து விட்டன. தற்போது, வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கடல் சீற்றம் ஏற்பட்டால், அதை தாங்கும் அளவிற்கு, துாண்டில் வளைவுகள் உள்ளதா என, சந்தேகம் எழுந்துள்ளது.எனவே, உடனடி தீர்வாக, பலவீனமாக இருக்கும்துாண்டில் வளைவுகளை, சீரமைக்க வேண்டும்.

நிரந்தர தீர்வாக, துாண்டில் வளைவுகளில், கரைந்து கடலில் சென்ற கற்களுக்கு பதிலாக, புதிதாக கற்களை கொட்டி, துாண்டில் வளைவுகளை மறு கட்டமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தறிகெட்டு ஓடிய உபரி நீரால் பல கிராமங்கள் துண்டிப்புபுழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர், எண்ணுார் முகத்துவாரம் வழியாக, 13.5 கி.மீ., துாரம் பயணித்து, கடலில் கலக்கும். இது, நாரவாரிகுப்பம், தண்டல் கழனி, வடபெரும்பாக்கம், கொசப்பூர், ஆமுல்லைவாயில் தரைப்பாலம் வழியாக உபரிநீர் கால்வாய்செல்கிறது. எஸ்.ஆர்.எப்., சந்திப்பு, எம்.எப்.எல்., சந்திப்பு, பர்மா நகர் இரும்பு பாலம், சடையங்குப்பம் மேம்பாலம் பகுதியை கடந்து எண்ணுார் முகத்துவாரத்தை அடையும். உபரி

நீர் கால்வாயில், ஆமுல்லைவாயில் தரைப்பாலம் வரை மட்டுமே இருபக்கமும் கரைகள் உள்ளன. அதன்பின், கரைகள் ஏதும் கிடையாது. எஸ்.ஆர்.எப்., சந்திப்பில் இருந்து, இருபக்கம் உள்ள தனியார் நிறுவன சுவரே கரைகளாக உள்ளன. பர்மா நகர் இரும்பு பாலத்துக்கு பின், திறந்த வௌியில் எந்த தடுப்புகளும் இல்லாமல் வெட்டவெளியாக உள்ளது. ஆமுல்லைவாயில் தரைப்பாலத்திற்கு பின், எந்த கரைகளும், கட்டமைப்புகளும் கிடையாது என, பருவமழைக்கு முன்பே, நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. ஆனால், அதிகாரிகள் எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் விளைவாக, புழல் ஏரியில் இருந்து, நொடிக்கு நொடிக்கு அதிகரித்த உபரி நீர், ஆமுல்லைவாயில் தரைப்பாலத்திற்கு பின், தறிகொட்டு ஓடியது. இதனால், நெடுஞ்செழியன் தெருவையும், உபரி நீர் மூழ்கடித்தது. மணலி மக்கள் வெளியேற முடியாமல், தவிக்க நேர்ந்தது. மாறாக, மஞ்சம்பாக்கம் வழியாக பல கி.மீ., துாரத்திற்கு சுற்றி செல்ல வேண்டியிருந்தது.

மூன்று பக்கம் வெள்ள நீர் சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் வெளியேற வழியில்லாமல், நான்கு நாட்கள் சிக்கி தவித்தனர்.மீண்டும் கனமழை பெய்ய துவங்கியிருப்பதால், மேற்கண்ட பகுதிகளில் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. தொடர் பாதிப்பை தவிர்க்க, இப்பகுதியில் கரை அமைத்து பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

– நமது நிருபர் குழு –



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *