‘சூர்யவன்ஷி’ படத்தின் முதல் நாள் வசூலை ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ முறியடித்துள்ளது.
மார்வெல் – சோனி கூட்டுத் தயாரிப்பில் மூன்றாவது படமாக ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ நேற்று (16.12.21) வெளியானது. கடந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் முக்கியப் பாத்திரங்களாக நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட அனைவருமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
மார்வெல் ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியாகும் படம் என்பதால் படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே இப்படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. டிக்கெட் முன்பதிவு தொடங்கியபோது உலகமெங்கும் டிக்கெட் புக்கிங் தளங்கள் முடங்கும் அளவுக்கு ஒருசில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
இந்நிலையில் இப்படம் இந்தியாவில் வெளியான ஒரே நாளில் ரூ.32.67 கோடி வசூல் செய்துள்ளது. கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியாகி முதல் நாளில் ரூ.26.29 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருந்த ‘சூர்யவன்ஷி’யின் வசூல் சாதனையை ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ முறியடித்துள்ளது. அதுமட்டுமின்றி ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்துக்குப் பிறகு முதல் நாளில் அதிக வசூல் செய்த இரண்டாவது ஹாலிவுட் படமும் இதுவாகும்.