Share on Social Media

புதுடில்லி: சாகர் கொலை வழக்கில் கைதான சுஷில் குமாருக்கு எதிராக 8 பேர் சாட்சி அளித்துள்ளனர். 

இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் 38. சக வீரர் சாகர் 23, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இவர், போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். பல்வேறு ‘தாதா’ கும்பல்களுடன் உள்ள தொடர்பும் தெரியவந்துள்ளது. மலேசியாவில் உள்ள ‘தாதா’ காலா ஜதேதி சகோதரருடன் சுஷில் குமார் எடுத்த போட்டோ, இணையதளத்தில் பரவி வருகிறது. இதுகுறித்த விசாரணைக்கு துவக்கத்தில் ஒத்துழைக்க மறுத்த சுஷில் குமார், தற்போது போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில்கள் தெரிவித்து வருகிறார். சம்பவத்தன்று பயன்படுத்திய அலைபேசியை துாக்கி எறிந்த இடத்தை அடையாளம் காட்டியுள்ளார். 

இவர் கொடுத்த தகவலின் படி, சுஷில் குமார் நண்பர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தவிர அடிதடி நடந்த போது நேரில் பார்த்த 8 பேர், சுஷில் குமாருக்கு எதிராக போலீசாரிடம் சாட்சி அளித்துள்ளதால், வழக்கில் இருந்து தப்புவது கடினம் தான்.

இதுகுறித்து ரோகினி மாவட்ட உதவி கமிஷனர் பிரனவ் தயாள் கூறியது:

வீட்டை காலி செய்வது, தகுந்த பாடம் கற்பிப்பது போன்ற காரணங்களுக்காக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. உதவிக்காக ‘தாதா’ கும்பலை சேர்ந்தவர்களை  சுஷில் குமார் அழைத்துள்ளார். அவர்கள் சத்ராசல் மைதானம் வந்த போது, சுஷில் குமாரும், உடன் இருந்த 12 பேரும், சாகர் நண்பர்களை அடித்துக் கொண்டிருந்தனர். சாகர் இருப்பிடம் தெரிந்ததும், சுஷில் குமார் மற்றும் 15 பேர் சேர்ந்து மாடல் டவுன் பகுதிக்கு சென்று மல்யுத்த வீரர் சாகர், அவருடன் இருந்த சோனு (காலா ஜதேதி வலது கரம்), பகத்தை துாக்கி வந்தனர். வழியில் காருக்குள் வைத்தும் அடித்தனர். மைதானத்தில் மே 5, நள்ளிரவு 12:45 மணி முதல் 1.05 வரை தாக்கியுள்ளனர். போலீசார் வருவது தெரிந்ததும், கார்கள், ஆயுதங்களை அப்படியே விட்டு விட்டு, பின் வாசல் வழியாக தப்பினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

போலீஸ் காவலில் பிறந்தநாள் 

டில்லி போலீஸ் காவலில் உள்ள சுஷில் குமாருக்கு  மே 26ல் 38வது பிறந்த நாள். அன்று முழுவதும் மிக அமைதியாக, யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்தார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *