Share on Social Media

தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. அரும்பும் திறமைகளுக்கு அடிக்கோடிட்டு, ஐபிஎல் அணிகளுக்கும், இந்திய அணிக்கும் ஏற்றுமதி செய்யும் கனவுத் தொழிற்சாலையான டிஎன்பிஎல்-ன் வெற்றிகரமான ஐந்தாவது சீசன் இது!

சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் நின்று நிரூபிக்க, ஒரு களம் தேவை. அந்த வகையில் தமிழக இளைஞர்களின், இந்திய ஜெர்ஸி கனவை நிறைவேற்றி வருகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக். 2022-ம் ஆண்டு, ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் என்பதாலும், கூடுதலாக இரண்டு அணிகளும் அதில் சேர்க்கப்படுவதாலும், டிஎன்பிஎல்-ல் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு, ஐபிஎல்-ல் வாய்ப்பு காத்திருக்கிறது என்பதாலும், இத்தொடர், வழக்கத்தை விடவும், கூடுதல் கவன ஈர்ப்பைப் பெறுகிறது.

ரவுண்ட் ராபின் முறை!

ஐபிஎல் நடைபெறும் அதே பாணியில் 8 அணிகள், ரவுண்ட் ராபின் முறைப்படிதான், டிஎன்பிஎல்லும் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன், ஒருமுறை மோதும். அந்த வகையில், 28 லீக் போட்டிகள், ஒரு எலிமினேட்டர், இரண்டு குவாலிஃபையர்கள், இறுதிப் போட்டி என மொத்தம் 32 போட்டிகள். ஜுலை 19 தொடங்கி, ஆகஸ்ட் 15 வரை போட்டிகள் நடைபெற இருக்கின்றன. எல்லாப் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கும், வார இறுதியில், நாளொன்றுக்கு இரண்டு போட்டிகள் என்பதால், மற்றொரு போட்டி, 3:30 மணிக்கும் நடைபெற இருக்கிறது.

TNPL

முன்னாள் சாம்பியன்கள்!

டிஎன்பிஎல்-ன் முதல் சாம்பியனாக தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணி இருக்க, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடப்பு சாம்பியனாக இருக்கிறது. 2017-ஆம் ஆண்டு சேப்பாக் அணியும், 2018-இல் மதுரை அணியும், சாம்பியன்களாக மகுடம் சூடிக் கொண்டன. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, கடந்த இருமுறையும், இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது.

சாதித்தது என்ன?

தோனியால் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்ட டிஎன்பிஎல்லின் நோக்கம், முதல் சீசனிலிருந்தே நிறைவேறிக் கொண்டேதான் வருகிறது. வாஷிங்டன் சுந்தர், நடராஜன், வருண் சக்ரவர்த்தி ஆகிய வீரர்கள், இங்கிருந்து ஐபிஎல்-குத் தேர்வாகி, இந்திய அணிக்குள்ளேயே இடம்பெற்று விட்டனர். சுந்தரின் பவர்பிளே பௌலிங்கும், நடராஜனின் யார்க்கர்களும், அவர்களைப் பற்றிப் பேச வைத்துள்ளன.

வருண் சக்ரவர்த்தி ஐபிஎல்-ல் மிகப் பெரிதாகச் சாதித்ததோடு, இந்திய அணிக்குள்ளும் நுழைந்து, அறிமுகப் போட்டிக்காகக் காத்திருக்கிறார். உண்மையில் அந்த வாய்ப்பு, அவருக்கு பலமுறை கனிந்து வரும் சூழல் நிலவியும், காயங்களால் தட்டிப் போனது. ஜெகதீசன், ஷாருக்கான் ஆகியோர் ஐபிஎல்-ல் முகம்காட்டத் தொடங்கி, பெரிய மேடைக்காகக் காத்திருக்கின்றனர். சாய் கிஷோர் பல வருடங்களாக சிஎஸ்கே-யிலும், பெரியசாமி, நெட் பௌலராகவும் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். ‘சிஎஸ்கேவுக்காக ஆடியிருக்க வேண்டியவர்கள்!’ எனப் பேச வைத்தது, அவர்கள் டிஎன்பிஎல்-ல் ஆடிய விதம்தான். இவர்களைத் தவிர ஹரி நிஷாந்த், சித்தார்த், சஞ்சய் யாதவ் ஆகியோரும், ஐபிஎல் வாய்ப்பை, இங்கிருந்தே பெற்றுள்ளனர்.

அஷ்வின் இல்லை!

அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதால் இந்த ஆண்டு டிஎன்பிஎல் சீசனில் இல்லை. இன்னொரு நட்சத்திர வீரரான நடராஜன் முழங்கால் காயத்திலிருந்து மீளாத நிலையில், அவரும் பங்கேற்க முடியாத சூழல். இவர்களைத் தவிர, முரளி விஜய் சொந்தக் காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியிருக்கிறார்.

E6eQnRAVcAEFVCJ Tamil News Spot
TNPL

சேப்பாக்குக்குச் சாதகம்!

இதுவரை இரண்டு முறை சாம்பியனான ஒரே அணி என்னும் பெருமையுடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வலம் வருகிறது. மூன்றாவது கோப்பை மீது கண்வைத்து இறங்குகின்றது, சேப்பாக் அணி. அணியின் பயிற்சியாளரான ஹேமங்க் பதானியின் அனுபவமும், அவர்களுக்கு நன்றாகவே கைகொடுக்கும்.

கவனிக்கவேண்டிய வீரர்கள்!

இந்த முறை, சேப்பாக் அணியுடன் இணைந்திருக்கும் ஜெகதீசன் டிஎன்பிஎல்-ல் அதிக ரன்களை அடித்த வீரராக இருக்கிறார். மேலும், கௌஷிக் காந்தி, ஷாய் கிஷோர், சந்தீப் வாரியர் ஆகியோர், மீது சற்று கூடுதலான கவனம் பதிகிறது. இவர்களைத் தவிர சகோதரர்களான இரட்டைத் துப்பாக்கிகளான பாபா அபராஜித், பாபா இந்திரஜித் ஆகியோர், முதல்முறையாக, ஒரே அணிக்காக, களமிறங்குகின்றனர். ஸ்பின்னர் முருகன் அஷ்வின் சேலம் அணிக்காக விளையாடுகிறார்.

ஹாங்காங் வீரர்!

டிஎன்பிஎல்லில் புதிதாக இணைந்துள்ள, முன்னாள் ஹாங்காங் வீரரான, ஜாதவெத் மதுரை அணிக்காக ஆட இருக்கிறார். இரண்டு கைகளாலும் பந்து வீசக் கூடியவரான அவர், வலக்கையால் லெக் ஸ்பின்னும், இடது கையால், ஆஃப் ஸ்பின்னும் வீசக் கூடியவர். இவரது பௌலிங் ஸ்டைலும் நிச்சயம் பேசப்படும்!

E6bSy sUYAQLgkj Tamil News Spot
E6bS6c7VEAMQsTF Tamil News Spot

முதல் போட்டி!

முதல் போட்டியில், லைகா கோவை கிங்ஸும், சேலம் ஸ்பார்டன்ஸும் மோதிக் கொள்கின்றனர். சேலம் அணிக்கு முதல்முறையாக கேப்டனாகப் பொறுப்பேற்றிருக்கும் ஃபெர்ராரியோ, 23 வயது இளைஞர். அவருக்கு கேப்டன் பதவி புதிது என்பதால், அது அவருக்கு சவாலானதாக இருப்பினும், திறமையை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். மேலும், கடந்த ஆண்டுகளில், டிஎன்பிஎல்-ல் அற்புதமாக பந்து வீசிய பெரியசாமி, இந்த வருடம் சேலம் அணிக்காக ஆடுகிறார். அவரும் எதிரணியான கோவையில் உள்ள, ஷாருக்கானும் தங்கள் முழுத் திறமையைப் பயன்படுத்தி ஆடுவார்கள் என நம்பலாம்.

டிஎன்பிஎல் கமென்ட்ரி பாக்ஸுக்குள் சர்ப்ரைஸ் என்ட்ரியா 15 இந்திய வீரர்கள் நுழையப்போகிறார்கள். முதல் நாளான இன்று அந்த சர்ப்ரைஸ் வர்ணணையாளர் சுரேஷ் ரெய்னா.

ஒலிம்பிக், இரு இந்திய அணிகள் பங்கேற்கும் இருவேறு தொடர்கள் என பல முக்கியத்துவம் வாய்ந்த தொடர்களுக்கு நடுவே தொடங்குகிறது, டிஎன்பிஎல். இங்கே அடிக்கும் ஒவ்வொரு ரன்னும், எடுக்கப்படும் ஒவ்வொரு விக்கெட்டும் தங்களது லட்சியத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான ஊன்றுகோல்கள் என்பதால், கொஞ்சமும் விட்டுத் தராமல், தங்களுக்காகவும், அணிக்காகவும் போராட ஒவ்வொரு வீரரும் நினைப்பார்கள் என்பதால், விறுவிறுப்பு குறையாமலே இருக்கப் போகிறது ஒவ்வொரு போட்டியும்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *