Share on Social Media

டி20 ஃபார்மட்டின் ஆதர்ச நாயகர்களான கரீபியன் வீரர்கள், பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்துக்குமான ஃபுல் பேக்கேஜாகக் கிடைக்க, உலக டூர் போவதைப் போல், பூமிப்பந்தின் எந்த மூலையில் நடக்கும் டி20 தொடர்களிலும், தவிர்க்க முடியாதத் தேர்வாகி விட்டனர். பொல்லார்ட், ரசல், பிராவோ என நீளும் இப்பட்டியலில், தலையாய தனித்துவமான வீரர்தான், சுனில் நரைன். மிஸ்டரி ஸ்பின்னராகத் தொடங்கிய இவரது பயணம், ஓப்பனராக, பின்ச் ஹிட்டராக பல தடவாளங்களிலும் பயணம் செய்து, பல உச்சங்களையும் தொட்டுக் கொண்டுள்ளது.

மிஸ்டரி பவுலர்களுக்கு பொதுவாக ஆயுட்காலம் மூன்றாண்டு என்பார்கள். அந்த மூன்றாண்டுகளில், முதல் ஆண்டு அவர்களது ஹனிமூன் காலமாக இருக்கும், அவர்களது பந்தை அவ்வளவு சீக்கிரத்தில் கணிக்க முடியாது, பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, விக்கெட்டுகளை கொத்துக் கொத்தாக அறுவடை செய்வார்கள். ஆனால் நாள்கள் செல்லச் செல்ல, இவர்களது கண்கட்டு வித்தையை வீடியோ அனலிஸ்ட் துணை கொண்டு ஆராய்ந்து, மொத்தமாக அவர்களுக்கு முடிவுரை எழுதிவிடுவார்கள், அதே பேட்ஸ்மேன்கள். சயித் அஜ்மல், அஜந்தா மென்டீஸ் என்ற மாயபிம்பங்கள் நம் கண்முன்னே அழிந்தது இந்த வகையில்தான். ஆனால் சுனில் நரைன், இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர். தனது திறமையை இன்றளவும் மங்கவிடாமல் செய்து, தொடர்ந்து லைம்லைட்டில் இருப்பவர்.

சுனில் நரைன்

2011-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரில் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் சார்பாக கலக்கிய சுனில் நரைனைக் கவனித்த கம்பீர், கேகேஆருக்கு இவர்தான் வேண்டுமென கேட்டு வாங்க வைத்தார். கேகேஆர் மூலம், தனது திறைமையைப் பெரியதாக இந்த உலகத்திற்கு நிரூபிக்கும் வாய்ப்புக் கிடைத்தது நரைனுக்கு. முதல் மூன்றாண்டுகள், விக்கெட் வேட்டை நடத்திக் குவித்துவிட்டார். அவர் எடுத்தது 67 விக்கெட்டுகள்! எந்த ஒரு பௌலரும் டி20 லீக் வரலாற்றில் இப்படி ஒரு விக்கெட் வேட்டையை நடத்தியது இல்லை. இதன் காரணமாகவே, கேகேஆர், அந்த மூன்றாண்டுகளில் இரண்டு முறை கப் அடித்து வெற்றிகரமான அணியாக வலம் வந்தது.

பொதுவாக, ஃப்ர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகள்தான் வீரர்கள் கற்றுக்கொள்வதற்கான தளமாகவும், தங்களைச் செதுக்கிக் கொள்வதற்கான ஒன்றாகவும் கருதப்படும். இன்றைய தேதிவரை, சுனில் நரைன் விளையாடியிருக்கும் மொத்த ஃப்ர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகள், 13 தான். எனினும், அது அவருடைய விளையாட்டுத்திறனில் எந்தக் குறைபாடையும் கொண்டு வந்துவிடவில்லை.

ஸ்பின்னர்கள் என்றாலே, மத்திய ஓவர்களில்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். அவர்களது எக்கானமி, குறைவாக இருப்பதற்கு, இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படும். ஆனால், நரைனின் விஷயத்தில், நடப்பதே வேறு. பவர்பிளே ஓவர்கள், மத்திய ஓவர்கள், டெத் ஓவர்கள் எனப் போட்டியின் எல்லா நிலைகளிலும், நம்பத்தகுந்த வீரராகவும், பேட்ஸ்மேனுக்கு சவால் விடுக்கும் வீரராகவே நரைன் வலம் வருகிறார்.

sunil Tamil News Spot
சுனில் நரைன்

2012 ஐபிஎல்லில் ஜொலித்த நரைனின் வெற்றிநடை, அந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக ஆடியபோதும் தொடர்ந்தது. ஏழு போட்டிகளில், ஒன்பது விக்கெட்டுகளை வெறும் 5.63 எக்கானமியோடு எடுத்த நரைன், அந்தத் தொடரில் அவரது அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவராகவும் இருந்தார். குறிப்பாக, இறுதிப்போட்டியில், இலங்கைக்கு எதிராக தனது திறமையை அரங்கேற்றினார் நரைன். வெறும் 137 ரன்களுக்கு, மேற்கிந்தியத்தீவுகள் சுருள, கருக இருந்த கோப்பைக் கனவை, வண்ணக் கனவாக்கி நனவாக்கினார் நரைன். ஜெயவர்த்தனே உள்ளிட்ட 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நரைன், 3.4 ஓவர்களில் வெறும் 9 ரன்களை மட்டுமே கொடுக்க, 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை. தனது முதல் டி20 உலகக்கோப்பையை மேற்கிந்தியத் தீவுகளுக்கு பெற்றுத் தந்து சம்பவக்காரனானார், நரைன்.

2013-ம் ஆண்டு ஐபிஎல்லில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில், டேவிட் ஹசி, அசார் மகமூத், குர்கீரத் சிங் ஆகிய மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ஐபிஎல்லில் தன்னுடைய முதல் ஹாட்ரிக்கை எடுத்தார் நரைன். தனது ஸ்டாக் டெலிவரிகளான நக்கில் பால், ஸ்கிட்டர்ஸ், கேரம் பால் மூலமாக அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடித்துக் கொண்டிருந்தார்.

டி20யின் டாப் பௌலராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான நியாயத்தை நரைன் பெரியதாக நிரூபித்தார். பேட்ஸ்மேன்கள், பௌலர்களின் பௌலிங் திறமைக்கெல்லாம் சவால் விடும் டி20 ஃபார்மட்டில், மெய்டன் ஓவரை ஒரு பௌலர் வீசுவதே பெரிய விஷயம் என்றால், அப்படி ஒரு தளத்தில், அழுத்தம் நிறைந்த சூப்பர் ஓவரை ஒரு மெய்டன் ஓவரை வீசுபவர், எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக இருப்பார். அப்படியொரு சாதனைச் சம்பவத்தை, 2014-ம் ஆண்டு, ஜூலையில் நடந்த கரீபியன் பிரிமீயர் லீக்கில், கயானா அமேசான் வாரியர்ஸுக்கு சார்பாக விளையாடிய போதுதான் நரைன் நிகழ்த்தினார்.

ரெட் ஸ்டீலுக்கு எதிரான அந்தப் போட்டி, டிராவில் முடிவடைய, சூப்பர் ஓவரைச் சந்தித்த நரைனின் அமேசான் வாரியர்ஸ், 12 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அந்த ரன்களை டிஃபெண்ட் செய்ய, நரைன் பந்து வீச வந்தார். பேட்ஸ்மேனாக ஆன் ஸ்ட்ரைக்கில், தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன்களில் ஒருவரான பூரண் இருந்தார். வீசிய முதல் நான்கு பந்துகளையும் டாட் பாலாக மாற வைத்த நரைன், ஐந்தாவது பந்தில், பூரணின் விக்கெட்டை, லாங் ஆஃபில் நின்றிருந்த குப்டிலிடம் கேட்ச் கொடுக்க வைத்ததன் வாயிலாக எடுத்தார். ஆறாவது பந்தைச் சந்தித்த ராஸ் டெய்லராலும் ரன் எடுக்க முடியாமல் போக, கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு சூப்பர் ஓவர், மெய்டனானது மட்டுமில்லாது, முத்தாய்ப்பாக, விக்கெட் மெய்டனாகவும் மாறி, ஒப்பற்ற டி20 பௌலராக நரைனை அடையாளம் காட்டியது.

EgNoQfSVAAAEok0 Tamil News Spot
சுனில் நரைன்

2015-க்கு முந்தைய சமயத்தில், நரைனின் இன்னொரு பெரிய பலமாய் இருந்தது, அவருடைய வேகமும் வீசப்படும் பந்துகளின் லெந்த்தும்தான். பெரும்பாலான பந்துகளை மணிக்கு 88 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய நரைன், ஷார்ட் லெந்த்தில் பந்துகளை வீசுவதன் மூலமாகவும், பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி தருவார். நரைனின் பந்துகளைச் சந்திக்க, பேட்ஸ்மென்கள் திணறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்து வந்தது.

நரைனின் கரியரில், மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது, 2017-ம் ஆண்டு ஜனவரியில், பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக அவரை ஓப்பனராக ஆட வைத்ததுதான். அந்தப் போட்டியில், எதிர்கொண்ட 13 பந்துகளில், 21 ரன்களைக் குவித்து, ஹார்ட் ஹிட்டாக, தன்னை நிருபித்திருந்தார். எதிரணியின் மைக்கேல் பீரை, பவர்பிளே ஓவர்களில் சமாளிப்பதற்காக, இது ஒரு தந்திரக் காய் நகர்வாகவே, ரெனிகேட்ஸ் அணியால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அதையே ஸ்மார்ட் மூவாக, நரைன் மாற்றிக் காட்டினார். விளைவு, கேகேஆருக்காக அந்தாண்டு ரசல் காயம் காரணமாக விளையாட முடியாமல் போக, அதிரடியாக நரைனை ஓப்பனராக, தைரியமாகக் களமிறக்கினார் கம்பீர். 2017-க்கு முந்தைய ஆண்டுகளில், 8-வது அல்லது அதற்கும் கீழான பேட்டிங் பொசிஷன்களில் களமிறங்கிக் கொண்டிருந்த நரைனை நம்பிக்கையுயன் கம்பீர் இறக்க, அவரது நம்பிக்கையைப் பொய்யாக்கவில்லை நரைன்.

2017-ல் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில், வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்த நரைன், ஆர்சிபி பௌலர்களை அரற்றி விட்டார். குறிப்பாக, தனது சக நாட்டு வீரரான சாமுவேல் பத்ரீயின் ஓவரைச் சிறப்பாக சம்பவம் செய்து கலங்கடித்துக் கதற வைத்துவிட்டார். அன்று சுழன்றடித்த சுனில் நரைன் என்னும் புயலால் மொத்தமாக காலியானது ஆர்சிபியின் கூடாரம். டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து முகமெல்லாம் பூரிப்பாக நின்றிருந்த கம்பீர், தனது முடிவு எவ்வளவு சரியானதென்பதை அந்நேரம் உணர்ந்திருப்பார். அந்தாண்டு ஐபிஎல்லில், 224 ரன்களை, 172 என்ற ஸ்ட்ரைக்ரேட்டோடு குவித்த நரைன், அதற்கடுத்த ஆண்டு, 190 ஸ்ட்ரைக்ரேட்டோடு, 357 ரன்களைக் குவித்து, ஒரு முழுமையான ஆல் ரவுண்டராக உருவெடுத்து நின்றார். இதற்குப்பின் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், டாக்கா டைனமைட்ஸ் என எல்லா அணிகளும் நரைனை, ஓப்பனிங்கில் இறக்க ஆரம்பித்தன. இப்படி, ஒரு முழுமுதல் டி20 வீரராக, நரைன் உருவாக, கம்பீரின் பங்கும் மிக முக்கியமானதாக அமைந்தது‌.

88697 thumb Tamil News Spot
சுனில் நரைன்

டி20-ல் தொடக்க ஓவர்களை எப்படிச் சந்திக்க வேண்டுமென்ற அணுகுமுறையையே மொத்தமாக மாற்றிக்காட்டினார் நரைன். கிட்டத்தட்ட இன்னிங்ஸின், 30-40 விழுக்காடு ரன்கள் சேர்ந்துவிடும் பவர்பிளே ஓவர்களை, தனது அதிரடி ஆட்டத்தினால் ஆக்கிரமித்து, போட்டியின் போக்கை, தனது அணியின் கட்டுக்குள் கொண்டுவரும் வித்தையை நரைன் நிகழ்த்திக் காட்டினார். ஒருநாள் போட்டிகளில் ஓப்பனராக எப்படி ஆட வேண்டுமென்று, 90-களில் ஜெயசூர்யா செய்து காட்டினாரோ, அதையேதான் ஒருநாள் போட்டிகளிலும், நரேன் செய்து காட்டினார்.

பணத்திற்காக, டி20 டோர்னமெண்ட்களில் அதிகமாக கவனம் செலுத்துவதால்தான், நரைன் மற்றும் ரசலால், மேற்கிந்தியத் தீவுகளுக்காக, லாங் ஃபார்மட்டுகளில் ஆட முடியவில்லை எனக் கொஞ்சம் கடுமையாகவே சாடியிருந்தார், முன்னாள் மேற்கிந்தியத் தீவுகளின் வீரர், கங்கா. ஆனால், உண்மையில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் போர்டுனான உட்பூசல்கள், சரியான சம்பளம் கிடைக்காமல் போனது என பல காரணங்களும் அதற்குள் ஒளிந்து இருக்கின்றன. 2019-ம் ஆண்டு, தனது விரல் காயத்தால், உலகக் கோப்பை தொடரைத் தவறவிட்ட போது, தனது வேதனையை வெளிப்படையாகவே தெரிவித்தார் நரைன். நாளின் முடிவில், நாட்டுக்காக ஆடுவதே தனக்கு திருப்தியளிக்கும் எனவும், தனது விரலின் காயத்தால், நான்கு ஓவர்கள் வீசவே சிரமப்படுவதால், 50 ஓவர் போட்டிகளும், டெஸ்டும் தனது திறனுக்கு அப்பாற்பட்டதாக மாறி விட்டதாகவும், நரைன் வேதனை தெரிவித்திருந்தார்.

எப்படி, முத்தையா முரளிதரன் தன்னுடைய பௌலிங் ஆக்ஷனுக்காக, பலமுறை அக்னிக்குளியல் நடத்தி, தங்கமாய் மீண்டுவந்து ஜொலித்தாரோ, அதேபோல், நரைனும் தனது பௌலிங் ஆக்ஷனுக்காக, பலமுறை கேள்விக்குள்ளாக்கப்பட்டு, பரிட்சிக்கப்பட்டுள்ளார்.

122399 thumb Tamil News Spot
சுனில் நரைன்

தனது பௌலிங் ஆக்ஷனை சரி செய்வதற்காக, 2015-ம் ஆண்டு உலகக் கோப்பையையே மிகுந்த வேதனையுடன் தவறவிட்டார் நரைன். பௌலிங் ஆக்ஷனை சரி செய்து திரும்பி வந்தபோதும், அதில் திருப்தியாகாத ஐசிசி, அவருக்கு மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் ஆடத் தடைவிதித்தது.

நரைன் ஆடிய காலகட்டத்தை, 2015-க்கு முன், 2015-க்குப் பின் என இரண்டாய்ப் பிரித்துப் பார்த்தோமேயானால், முதல் காலகட்டத்தில், தலைசிறந்த ஈடுஇணையற்ற ஆஃப் ஸ்பின்னராக அவரே இருந்தார். 2015-க்குப் பின்னும், அவர் சோடை போகவில்லை. இன்னமும் திறன் மிகுந்தவராகவே இருக்கிறார், பழைய நரைனாக அவர் இல்லை, எனினும், இன்னமும் நரைன் ஒரு தலைசிறந்த வீரர்தான். டி20 ஃபார்மட்டின் ராஜாதான் அவர்.

தான் விளையாடும் அணியின் பிரதான ஆயுதமாக, இன்னமும் பல சம்பவங்களைச் செய்து காட்டிக் கொண்டுதான் இருக்கிறார் நரைன். இன்னமும் செய்வார்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நரைன்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *