Share on Social Media

சுடுவதெல்லாம் தங்கம் என்கிற பீஸ்ட் மோடில் இருக்கிறார் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர். 20 வயதேயாகும் இளம் வீரரான இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் 50 மீ ரைஃபிள் 3P பிரிவில் பங்கேற்க இருக்கிறார். துப்பாக்கிச் சுடுதல் உலகின் இளம் புயலாக பரபரப்பை கிளப்பியிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதில் துடிப்பாக இருக்கிறார்.

மத்தியப்பிரதேசத்தில் பிறந்த இவர், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை வீர் பகதூர் சிங் விதவிதமான துப்பாக்கிகளை சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும், அவருக்கு காடுகளுக்குள் வேட்டைக்கு செல்லும் பழக்கமும் இருந்திருக்கிறது. இதனால் சிறுவயதிலேயே பொம்மை துப்பாக்கிக்கு பதில் ஒரிஜினல் துப்பாக்கியை வைத்தே விளையாடும் வாய்ப்பெல்லாம் ஐஸ்வரிக்கு கிடைத்துள்ளது. ஐஸ்வரியின் சகோதரரான நவ்தீப் சிங் ஒரு துப்பாக்கிச் சுடுதல் வீரர். இளம் வயதிலிருந்தே துப்பாக்கியுடன் புழங்கியதாலும் சகோதரரின் மூலம் கிடைத்த ஊக்கத்தாலும் ஐஸ்வரியும் துப்பாக்கிச் சுடுதலில் முழுமையாக இறங்கினார்.

ஆரம்பமே அவருக்கு கொஞ்சம் சறுக்கலாகவே அமைந்தது. சுடுதலுக்கான பயிற்சி பெற்று சில போட்டிகளில் மட்டுமே பங்கேற்றிருந்த நிலையிலேயே, துப்பாக்கியை சரியாக பயன்படுத்தவில்லை என டெக்னிக்கல் காரணங்களை கூறி அவருக்கு ஒரு வருடம் இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

முதல் கோணல் முற்றும் கோணல் என பழமொழிகளெல்லாம் பேசி பொழுதை கழிக்காமல், தீவிர பயிற்சியில் இறங்கி ஒரு வருட தடை முடிந்த பிறகு வெறித்தனமான ஃபார்மோடு வந்தார் ஐஸ்வரி.

2019 ISSF ஜுனியர் உலகக்கோப்பையில் தங்கப்பதக்கத்தை வென்றவர், அதே ஆண்டில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்று டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதியும் பெற்றார். மேலும், 50மீ 3P பிரிவில் இவர் எடுத்த ஸ்கோர் உலக சாதனையாகவும் பதிவானது.

ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி உலகக்கோப்பையிலும் மூன்று பதக்கங்களை வென்றிருந்தார். குறிப்பாக, அவர் தனியாக களமிறங்கியிருந்த 50மீ 3P பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார். அணிகள் பிரிவில் ஒரு வெள்ளி மற்றும் வெண்கலத்தையும் வென்றிருந்தார்.

ஜுனில் நடைபெற்ற குரோஷியா ஒலிம்பிக்கிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்திருந்தார்.

உலகளவிலான தரவரிசை பட்டியலில் இப்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவரை விட அதிக அனுபமுள்ள சீனியர்கள் பலருமே தரவரிசை பட்டியலில் இவருக்கு பின்னால்தான் இருக்கின்றனர். துப்பாக்கிச் சுடுதல் களத்திற்குள் வந்த நான்கைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே பல பெரிய உச்சங்களை அடைந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். இந்தியாவின் பதக்க எதிர்பார்ப்பு பட்டியலில் இவருடைய பெயர் முன்னிலையில் இருக்கிறது. இளம்புயலாக பீஸ்ட் மோடில் கலக்கிக்கொண்டிருக்கும் ஐஸ்வரி சிங் தோமர் ஒலிம்பிக்கிலும் அதகளப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாகவும் இருக்கிறது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *