Share on Social Media


நடிகரும், இயக்குனரும், கதாசிரியருமான ஆர்.என்.ஆர். மனோகர் (வயது 61) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

‘சலீம்’, ‘வேதாளம்’, ”விஸ்வாசம்’, ‘டெடி’ உள்பட பல படங்களின் நடிகராகவும் அறியப்பட்டவர் இவர். 1994-ல் வெளியான ‘மைந்தன்’ படம் மூலம் கதாசிரியராகவும் இணை இயக்குநராகவும் அறிமுகமானார். ‘கோலங்கள்’ படத்தில் கதாசிரியராகவும் இணை இயக்குநராகவும் பணியற்றியதோடு அப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அந்தப் படத்திற்கு சிறந்த கதைக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்தது. தவிர, ‘புதுமைபித்தன்’, ‘தென்னவன்’, புன்னகை பூவே’, ‘வந்தே மாதரம்’ ஆகிய பாடங்களிலும் கதாசிரியராக பணியாற்றியவர். கடந்த இருபது நாட்களாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மரணமடைந்தார்.

மனோகர் இயக்கிய ‘மாசிலாமணி’, ‘வேலூர் மாவட்டம்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் வெற்றி பழனிச்சாமி. மனோகரின் நினைவுகளைப் பகிர்ந்தார்.

“மனோகர் ரொம்ப தன்மையான மனிதர். ஒரு நடிகராகும் ஆசையில் தான் சினிமாவிற்குள் வந்தார். ஆனால், கதாசிரியர், இயக்குநர் என பல திறமைகளை வெளிக்காட்டினார். அவர் இயக்கிய இரண்டு படங்களையும் ஒரே தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்தது. ‘மாசிலாமணி’ படத்திற்கு முன்பு அவர் எனக்கு அறிமுகமில்லை. படப்பிடிப்பு டீமில் உள்ள லைட்மேன்களில் இருந்து அத்தனை பேரிடமும் ஒரே மாதிரியாகத்தான் பழகுவார். எந்த ஒரு விஷயத்திற்கும் டென்ஷன் ஆகாதவர். சினிமாவில் நிறைய போராட்டங்களை சந்தித்தவர். சினிமாவுக்கு முயற்சி செய்து வயது கடந்து கொண்டே வந்தால், நாற்பது வயதில் எல்லாம் மனம் சோர்வடைந்து விடும். ஆனால், மனோகர் சார் முதல் படம் பண்ணும் போது 40 வயதுக்கு மேல். அந்த வயதிலும் இளமை துடிப்புள்ள ஒரு காதல் கதையை இயக்கினார்.

அவரது மகன் இறப்பிற்கு பின் மனம் தளர்ந்து போனவருக்கு நடிப்பு ஆறுதல் அளித்தது. நல்ல நல்ல கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைத்ததில், முழு கவனத்தையும் நடிப்பில் செலுத்தினார். பல வருஷமாவே அவரோடு தொடர்பில் இருக்கேன். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதும் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். சீக்கிரமே நலம் பெற்று வீடு திரும்புவார் என நினைத்தேன். அவரது மரணத்தை எதிர்பார்க்கவில்லை” என குரல் உடைந்து பேசினார் வெற்றி.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *