பனாஜி: சிறந்த நிர்வாகம் வழங்குவதில் கோவா முன்னிலை வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோவா சென்ற பிரதமர் மோடி, அம்மாநில விடுதலை தின நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அம்மாநில விடுதலைக்காக போராடிய தியாகிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து பாய்மர படகுகளின் அணிவகுப்பு மற்றும் வீரர்களின் சாகசத்தை பார்வையிட்டார்.
பின்னர் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் பெரும்பகுதியை முகலாயர்கள் ஆட்சி செய்த போது, கோவா, போர்ச்சுக்கல் ஆட்சியின் கீழ் வந்தது. பல நூற்றாண்டுகள் கடந்தாலும், இந்தியா மீதான பற்றை கோவா மறக்கவில்லை. இந்தியாவும் கோவாவை மறக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு இத்தாலி சென்றிருந்த போது வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்தித்தேன். அப்போது, அவரை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். அதற்கு அவர், எனக்கு நீங்கள் கொடுத்த மிகப்பெரிய பரிசு என பதிலளித்தார். இது, இந்தியாவின் ஒற்றுமை, துடிப்பான ஜனநாயகம் மீது அவர் கொண்ட அன்பை காட்டுகிறது.
ஒருவரின் தனிப்பட்ட வருமானம் அடிப்படையில், சிறந்த நிர்வாகம் அளிப்பதில் கோவா முன்னிலை வகிக்கிறது. கோவா மக்கள் கடினமான, நேர்மையான, திறமையான உழைப்பாளிகள் என்பதை மனோகர் பாரிக்கர் மூலம் நாட்டு மக்கள் பார்த்தனர். அவர் தனது வாழ்க்கை மூலம் மாநிலத்திற்காக அர்ப்பணித்து கொண்டதையும், இறுதி மூச்சுவரை மக்களுக்காக உழைத்ததையும் நாம் பார்த்தோம். இவ்வாறு மோடி பேசினார்.
Advertisement