Share on Social Media


அப்படத்தில், கதாநாயகி (கேதரின் தெரேஸா) கதாநாயகனை செல்போனில் அழைத்து, ‘’நான் குழாயாண்ட நிக்குறேன்… இங்க வா’’ என்று வரச்சொல்லி அவனிடம் காதலை சொல்வதும், ”கட்டிக்கிறியா” என்று வெளிப்படையாக கேட்பதும், அவன் வீட்டுக்கு திரும்பி செல்லும்போது சிரிப்பதும் மீண்டும் மீண்டும் பலமுறை பார்த்து ரசித்தவை.

ஆர்யா - துஷாரா 'சார்பட்டா'

ஆர்யா – துஷாரா ‘சார்பட்டா’

’லவ் ப்ரப்போசல்’ என்றதும் காலம்காலமாக ஆண்தான் முதலில் காதலை சொல்லவேண்டும், பெண் வெட்கத்தில் கால் பெருவிரலால் போர்வெல் போட்டதுபோல் தண்ணீர் வருமளவு பூமியை நோண்டி வெட்கப்படவேண்டும் என்று மனதில் பதிந்திருந்த தமிழ் திரைப்படக் காட்சிகளை அடித்து காலி செய்தது அக்காட்சி.

‘காலா’ திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரிராவ் எந்நேரமும் சத்தமாக பேசுபவராக, ரஜினியை அதட்டுபவராக இருந்தாலும் வீட்டை விட்டு செல்லும் தன் மகனிடம் பேசும் காட்சிகளில் பொறுமையாக அன்பான அம்மாவாக நடிப்பில் மிளிர்வார். தனது பழைய காதலியை பார்த்துவிட்டு வரும் கணவனிடம் ஆதங்கத்துடன், ‘’எட்டாப்பு படிக்கறப்ப தப்படிக்கிற பெருமாள் என் பின்னாடியே திரிஞ்சான். எனக்கு டிக்கெட் போடு நானும் ஒரெட்டு போய் பார்த்துட்டு வந்திர்றேன். உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமா” என்று கதாநாயகி கோபித்து சம உரிமை பேசுவது, கதாநாயகன் ரஜினி மனைவி பின்னாடியே சென்று சமாதானம் செய்யும் காட்சிகள் ரஜினியின் திரைப்படங்களில் இதுவரை கண்டிராதது.

இந்த உரையாடல்கள் எல்லா குடும்பத்திலும் சாத்தியமில்லை என்றாலும் கணவன் – மனைவி இடையே இந்த ’ஸ்பேஸ்’ மிக முக்கியமானது என்பதை உணர்த்தியிருப்பார் இயக்குநர் இரஞ்சித். அதேப்போல் ரஜினியின் மகளாக வரும் யோகி (தன்ஷிகா) சுதந்திரமான பெண்ணாக, ஆண்களுக்கு சமமாக சண்டையிட்டு கதாநாயகனையே காப்பாற்றுவளாக காட்டப்பட்டது எந்த சினிமாவிலும் வராத காட்சி.

துஷாரா 'சார்பட்டா'

துஷாரா ‘சார்பட்டா’

‘காலா’ திரைப்படத்தில் புயல் (அஞ்சலி பாட்டில்) கதாபாத்திரம் சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய இளம்பெண், போராளி. ஒரு போராட்டத்தின்போது அவளை அவமானப்படுத்தும் நோக்கில் மூன்று காவலர்கள் சேர்ந்து புயலின் சுடிதார் பேன்ட்டை உருவி எறிவார்கள். சட்டென்று அதிர்ச்சியில் நிலைக்குலைந்து போகும் புயல் ஆடையை நோக்கி தவழ்ந்து செல்வாள்.

ஆனால், ஆடையை எடுக்காமல் அருகில் இருக்கும் லத்தியை எடுத்து மூவரையும் திருப்பி அடிப்பாள். பெண்ணுக்கு சுயமரியாதை என்பது வலுக்கட்டாயமாக ஆடை களையப்படும்போது ஓடி ஒளிந்து உடலை மறைத்துக்கொள்வது அல்ல… தனக்கு அநீதி இழைத்தவர்களை திருப்பி அடிப்பதில் இருக்கிறது. மேலும், பெண்ணின் உடலில் புனிதம் எதுவுமில்லை என்றும் அவளது உடலுக்கு ஒருவர் தீங்கிழைப்பதால் அவள் அவமானப்படத் தேவையில்லை எனவும் மிக ஆழமான பெண்ணுடல் பற்றிய அரசியலை ஒரு சிறு காட்சியில் அற்புதமாக காட்டியிருப்பார் இரஞ்சித்.

ஷங்கரின் ’எந்திரன்’ திரைப்படத்தில் ரோபோ, தீ விபத்தில் சிக்கிக்கொண்டு ஆடைகள் முழுவதும் எரிந்துபோய் நிர்வாணமாக இருக்கும் இளம்பெண்ணை காப்பாற்றி தூக்கி வரும். தன்னை மற்றவர்கள் அந்த கோலத்தில் பார்த்துவிட்ட அவமானத்தில் அந்தபெண் அவ்விடத்திலேயே தற்கொலை செய்துகொள்வாள். மேற்கொண்டு அடுத்தடுத்த காட்சிகளில்கூட, ’அது ஒரு விபத்து, அதில் அவமானம் ஏதுமில்லை’ என்பதை சொல்லாமல் அப்பெண்ணின் தற்கொலை சரிதான் என்பதுபோல் காட்சிகள் நகரும். இதுதான் வழக்கமான ’தமிழ் சினிமா’ டெம்ப்ளேட்.

ஆடை களையப்பட்டால், வன்புணர்வுக்கு உள்ளானால் பெண்கள் அவமானத்தில் தலைகுனிய வேண்டும், தற்கொலை செய்துகொள்ள வேண்டும், குறைந்தபட்சம் அழவேண்டும் என்றிருந்த தமிழ் சினிமாவில் ‘காலா’ பட புயல் கதாபாத்திரம் மூலம் ’திருப்பி அடி’ எனும் வலுவான வழியை தொடங்கி வைத்தார் இரஞ்சித்.

ஆர்யா, கலையரசன், துஷாரா - 'சார்பட்டா'

ஆர்யா, கலையரசன், துஷாரா – ‘சார்பட்டா’

காதல் திருமணமே செய்திருந்தாலும் பெண் முதலிரவு அறைக்குள் வெட்கப்பட்டுக்கொண்டே வரவேண்டும், சிணுங்க வேண்டும், விளையாட்டுக்காவது கணவனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் எனும் ’பழந்தமிழ் சினிமா’ பண்பாட்டின் மீதும் அடித்து ஆடுகிறாள் ‘சார்பட்டா’ மாரியம்மா. திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் வருபவள் வெளியில் கேட்கும் இசைக்கு ஏற்றவாறு குத்தாட்டம் போடுகிறாள், ஆட்டம் முடிந்து கணவன் மேல் பாய்ந்து விழும் மாரியம்மாதான் எக்காலத்துக்குமான நாயகி.

மலையாள திரைப்படங்களில் வருவதைப்போன்று வெளிப்படையாக கட்சி பெயர், தலைவர்கள் படம், கொடி பயன்படுத்தும் பழக்கத்தை சமகாலத்தில் ’சார்பட்டா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இரஞ்சித் தொடங்கி வைத்திருப்பதில் மகிழ்ச்சி. அதேபோல் இனி வரும் திரைப்படங்களில் முன்நின்று அரசியல் செய்யும் பெண் கதாபாத்திரங்களை அவர் உருவாக்க வேண்டும்.

பா. ரஞ்சித்தின் திரைப் பெண்கள் அசலானவர்கள். கொண்டாட்டமானவர்கள். அவரது திரைப்படங்கள் தொடர்ந்து பெண்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தருவதாக இருப்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதை குறிப்பிட்ட வரையறைக்குள்ளாகவே அவர் சுருக்கிவிடக்கூடாது.

‘அட்டக்கத்தி’ மீனாட்சி, ‘மெட்ராஸ்’ ரமா, ‘காலா’ ஈஸ்வரி ராவ், ‘சார்பட்டா’ மாரியம்மா எல்லோரும் தைரியமாக பேசும் பெண்களாக இருந்தாலும் அவர்கள் குடும்பம், கணவன், பிள்ளைகளைத் தாண்டி யோசிப்பவர்களாக இல்லை. கணவனின் வெற்றிக்கு பின்னால் நிற்கும் பெண்களாகவே இருக்கிறார்கள்.

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தும் சினிமாக்களை எதிர்பார்க்கிறோம், கோரிக்கை வைக்கிறோம். ஏனெனில், புரிதல் உள்ளோரிடம் தானே உரிமையாகக் கேட்கவும் முடியும்!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *