Share on Social Media


வ.உ.சி-யின் 85-வது நினைவு தினத்தையொட்டி நெல்லை வ.உ.சி மணிமண்டபத்திலுள்ள வ.உ.சி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் கட்சியினர் மரியாதை செய்துவிட்டு வெளியே வந்தார்கள். அப்போது, பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் கட்சியினருடன் அங்கு வந்தார்.

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டபோது, தன் பி.ஏ-விடம் சால்வை எடுத்துவரச் சொன்ன நயினார் நாகேந்திரன், திடீரென்று தனுஷ்கோடி ஆதித்தனுக்கு அணிவித்து, தடாலென காலில் விழுந்து வணங்கினார். “நான் வெற்றிபெற்றதும் தனுஷ்கோடி ஆதித்தனை வீட்டுக்குச் சென்று சந்திக்க விரும்பினேன். அதற்கு நேரம் வாய்க்கவில்லை. இப்போது நேரில் பார்த்ததால், வயதிலும் அனுபவத்திலும் பெரியவரான அவரிடம் ஆசிபெற்றேன்’’ என்று நயினார் பெருந்தன்மையுடன் சொன்னாலும், இதைப் பார்த்து ஏக கடுப்பில் இருக்கிறார்களாம் பா.ஜ.க புள்ளிகள்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே, குமாரகோவில் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான என்.ஐ பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது. கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்டவற்றோடு செயல்படும் இந்தப் பல்கலைக்கழகத்தை ஆளுங்கட்சிக்கு தொடர்புடைய குழுமம் ஒன்று விலைக்கு வாங்குவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறதாம். இந்த நிலையில், நவம்பர் 15-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மழைச்சேத பாதிப்புகளைப் பார்க்க வந்த முதல்வர், குமாரகோவிலில் கல்லூரி வளாகம் அமைந்துள்ள இடத்தில் ஒரு கால்வாய் உடைப்பைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில், வைக்கல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தன.

இதையடுத்து, “வீடுகளே இல்லாத குமாரகோவில் பகுதிக்கு முதல்வர் சென்றது கல்லூரியைப் பார்வையிடத்தான்!” என்று முதல்வர் விசிட்டுக்கும், பல்கலைக்கழக விற்பனைக்கும் முடிச்சுப்போட்டு பேசுகிறார்கள் உள்ளூர் மக்கள். இது பற்றி தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டால், “அந்தக் குழுமத்துக்கும், முதல்வர் தரப்புக்கும் எப்பவுமே ஆகாது; முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடலாமா!” என்கிறார்கள் நக்கலாக!

அ.தி.மு.க-வின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, அந்தக் கட்சியின் சார்பில் பிரமாண்ட பொன்விழா மாநாடு, கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது என்று பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான எந்தப் பூர்வாங்கப் பணியையும் கட்சியின் தலைமை எடுக்கவில்லை.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்

அ.தி.மு.க தலைமை அலுவலகம்

குறிப்பாக, மாநாட்டுச் செலவை யார் ஏற்பது என்பதில் இரட்டைத் தலைமைகளுக்குள் கருத்து மோதல் உருவாகவே… பொன்விழா நிகழ்வுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இது தெரியாமல், ‘மாநாடு எப்போது நடக்கும்?’ என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் அப்பாவி அ.தி.மு.க தொண்டர்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *