Share on Social Media


மொழிவாரி மாநிலங்கள் குறித்த அம்பேத்கரின் சிந்தனை தெளிவாக இருக்கிறது. மொழிவாரி மாநிலங்கள் தொடர்பான அவரது புத்தகத்தில் சம்ஸ்கிருதம் அலுவல் மொழி என்பது பற்றி எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அவர் சொல்லாத ஒரு கருத்தை, போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்கள். இந்தப் போக்கு நீண்டகாலமாக இருந்துவருகிறது. அம்பேத்கருக்கு சாவர்க்கருடன் தொடர்பு இருந்தது என்றும், இந்து மகா சபாவுடன் அம்பேத்கர் பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும், அவர்களுடன் பேசித்தான் இந்து மதத்தின் ஒரு கிளையாக இருக்கக்கூடிய பௌத்தத்தைத் தழுவினார் என்றும் பல பொய்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

பௌத்தம் இந்து மதத்தின் ஒரு கிளை கிடையாது. அதை அம்பேத்கர் கடுமையாக மறுத்திருக்கிறார். பௌத்தத்தைத் தழுவியதற்கான காரணங்களை அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் முகாமுக்கு அம்பேத்கர் சென்றார் என்பதுகூட பத்திரிகைகள் வாயிலாகத்தான் சொல்லப்பட்டுவருகிறது. அதற்கு வேறு எந்த ஆதாரமும் கிடையாது. அம்பேத்கரின் 17 தொகுதிகளில் அப்படி எந்தவொரு செய்தியும் கிடையாது.

அம்பேத்கர் எங்கெல்லாம் சென்றார், எந்தத் தேதியில் என்னென்ன செய்தார் என்பவை அனைத்தும் பதிவுகளாக இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் முகாமுக்குச் சென்றார் என்பதற்கு எந்தவொரு குறிப்பும் கிடையாது. மகாராஷ்டிரா அரசு அம்பேத்கர் தொடர்பான ஓர் ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதில், 1930-களில் அம்பேத்கர் முதல் வட்ட மேசை மாநாட்டுக்குச் செல்லத் தொடங்கியதிலிருந்து அவர் இறக்கும்வரை அவர் என்னென்ன செய்தார் என்பது பற்றி உளவுத்துறை கண்டறிந்த குறிப்புகள் உள்ளன. அதுதான் ஆதாரம். அதில் இவர்கள் சொல்வதுபோல எதுவும் இல்லை. ஒரு ’பேப்பர் கட்டிங்’கை வைத்துக்கொண்டு இவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளில் செய்தி பிரசுரமாவதில் பல கோளாறுகள் உள்ளன என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.

அம்பேத்கர் குறித்து ஆதாரமில்லாத, தவறான செய்திகள் சிலரால் தொடர்ந்து சொல்லப்பட்டுவருவதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., சம்ஸ்கிருதம், சாவர்க்கர், இந்து மதம் ஆகியவற்றை அம்பேத்கருடன் தொடர்புபடுத்தி ஒரு தரப்பினர் சொல்லிவரும் செய்திகள் ஆளும் வர்க்கத்தினருக்கும், ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஏற்புடையவையாக இருக்கின்றன. அம்பேத்கரை எதிர்க்க முடியாத சூழலில், அவரை தன்வயப்படுத்த முயல்கிறார்கள். அதற்காக, அவர் சொல்லாதவற்றையெல்லாம் சொன்னதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *