Share on Social Media


வாழ முடியா வாழ்விலிருந்து தப்பிக்க நினைக்கும் ஒருவருக்கு டைம் மிஷின் கிடைத்தால் என்னாகும் என்பதுதான் ZEE5-ல் வெளியாகியிருக்கும் ‘டிக்கிலோனா’.

‘ஹாக்கி’ மணியாக வாழ்வைக் கலக்கலாக வாழ நினைக்கும் மணிக்கு கிடைத்ததென்னவோ ‘லைன்மேன்’ மணி வேலை. 2027-ல் நகரமே இருளில் மூழ்கியிருக்க, அவர் செல்லும் இடத்தில் நடக்கும் சம்பவங்கள் அவருக்கு காலத்தை மாற்ற ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இறந்தகால மாற்றங்கள் நிகழ்காலத்தில் ஏற்படுத்தும் நிகழ்வுகளும், எதிர்காலத்தில் தரும் புதிர்களும் என நீள்கிறது கதை. இப்படியெல்லாம் மெனக்கெட்டு குழப்பும் அளவுக்கு சிக்கலான சயின்ஸ் ஃபிக்ஷன் கதை எல்லாம் இல்லை. ‘ஓ மை கடவுளே’ படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் கடவுளுக்குப் பதிலாக டைம் மெஷின் செட் செய்து ஓடவிட்டால் தோராயமாக, அது ‘டிக்கிலோனா’வில் வந்து நிற்கும்.

டிக்கிலோனா

மணியாக சந்தானம். தடுக்கி விழுந்தாலும் கவுன்ட்டருடன்தான் விழுகிறார். எல்லா வசனத்துக்கும் சந்தானத்திடம் பதில் வசனம் இருக்கிறது. அதில் நிறைய வசனங்கள் சிரிக்கவும் வைக்கின்றன. சந்தானம், மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், யோகிபாபு, முனிஸ்காந்த், லொள்ளு சபா மாறன், சேசு என சந்தானத்தின் எல்லா படங்களையும் காப்பாற்றும் நகைச்சுவை டீம் இதிலும் சிறப்பாகவே சிரிப்பித்திருக்கிறார்கள்.

2020 டு 2027 என்பதால் உலகம் பெரிதாக மாறவெல்லாம் இல்லை. புதிய கட்டடங்கள், டிரான்ஸ்பரன்ட் மொபைல், மின்சார வாரியத்தின் டெக் ரீடர், ஈ சைக்கிள், எலைட் டாஸ்மாக் எனச் சில விஷயங்களில் காமெடி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி. டிக்கிலோனா புகழ் ‘ஜென்டில்மேன்’ காட்சியையும் இணைத்திருக்கிறார்கள். ரிவர்ஸ் கியரில் போட்டு வரும் செந்திலைப் போல, பின்னோக்கி காலத்தில் செல்வதனால் வைத்த டைட்டிலோ என்பது தெரியவில்லை. ‘கேஜிஎஃப்’ படத்தின் டப்பிங்கில் கலக்கிய நிழல்கள் ரவியை அதே எஃபக்ட்டில் வித்தியாசமானதொரு வேடத்தில் பயன்படுத்தியதும் சிறப்பு. மாறன், சேசு இன்னும் சில காட்சிகளில் கூட வந்திருக்கலாம். ஹர்பஜன் சிங் கேமியோ செய்திருக்கிறார். அந்த வகையில் சிங்குக்கு ஒரு வாழ்த்துகள்!

டிக்கிலோனா

டைம் டிராவலின் முதல் அத்தியாத்தில் இருக்கும் காமெடி, எமோஷன்கள் இரண்டாம் அத்தியாத்தில் இல்லை. பிரியாவாக நடித்திருக்கும் அனகாவிற்காவது எமோஷனல், கோபம், கிளாமர் என சில விஷயங்களைக் கதைக்குள் சேர்த்திருக்கிறார்கள். மேக்னாவாக வரும் ஷிரினுக்கு ஒரே வேடம்தான்.

உருவ கேலி வசவுகளை எல்லாம் கடந்துதான் சந்தானத்தின் ஒன்லைனர்களுக்கும் சிரித்துக்கொண்டு இருக்கிறோம். சந்தானம் என்றாலே உருவகேலி வசனங்கள்தானா?! ஒட்டுமொத்தமாக Dad’s little princess, பணக்கார பெண்கள் எப்போதும் பார்ட்டி செய்வார்கள் போன்ற ஸ்டீரியோடைப் வசனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன. மாடர்ன் பெண் என்றால் இவர்கள்தான், Bit Tok, பாய் பெஸ்ட்டி என இயக்குநர் கார்த்திக் யோகி பெண்கள் மீதும், சமூகத்தின் மீதும் வைத்திருக்கும் மதிப்பீடுகள் டைம் டிராவலில் பின்னோக்கி செல்லும் அளவுக்குத்தான் இருக்கிறது. அதிலும் சுதந்திரமா இருக்கறதுன்னா என்னன்னு தெரியுமா என சந்தானம் பாடம் எடுப்பதெல்லாம்… இன்னும் நீங்களாம் அப்டேட் ஆகலையா நண்பா?!

Dikkiloona 2 Tamil News Spot
டிக்கிலோனா

படத்தின் டைட்டில் கார்டில் முதலில் வரும் பெயர் யுவன்தான். அதற்கேற்ப பிஜிஎம்மில் பட்டாசாய் தூள் கிளப்பியிருக்கிறார். ‘பேர் வச்சாலும்’ பாடலை அப்படியே பழைய குரல்களை வைத்து ரீமிக்ஸ் செய்தது சிறப்பு. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வித டெக்னாலஜி வசதிகளும் இல்லாதபோது பல கமல்களை சுவாரஸ்யமாய் உலவவிட்ட ஒரு பாடலின் புதிய படமாக்களில் வருவதென்னவோ இரண்டு சந்தானங்களும், ஒரு கர்லா கட்டையும் மட்டும்தான்.

இரண்டாம் பாதியின் அவுடேட்டட் அபத்தங்களை மாற்றி, காமெடி வசனங்களில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் ‘டிக்கிலோனா’ மிஸ் செய்யக்கூடாத என்டர்டெய்னராக இருந்திருக்கும்!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *