Share on Social Media

மற்ற விளையாட்டுகளில் எதிர்பார்த்த வீரர்/வீராங்கனைகள் கடுமையாக சொதப்பிக் கொண்டிருக்க, பாக்ஸிங்கில் மட்டுமே எதிர்பாராத வீரர்கள் கூட ஆக்ரோஷ குத்துகளை விட்டு சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். லவ்லினா, பூஜா ராணி வரிசையில் இப்போது சதிஷ் குமார் எனும் வீரர் சர்ப்ரைஸ் பதக்க நம்பிக்கையாக உயர்ந்திருக்கிறார்.

சூப்பர் ஹெவிவெயிட் பிரிவில் ஜமைக்கா வீரரான ரிக்கார்டோ பிரவுனை 4-1 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார் சதிஷ் குமார்.

சூப்பர் ஹெவி வெயிட் பிரிவில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றிருக்கும் முதல் வீரரே சதிஷ் குமார்தான். இன்னும் ஒரு வெற்றியை பெற்றால் போடியத்தில் ஏறி வரலாறே படைத்துவிடுவார்.

சதிஷ் குமார் உத்திரப்பிரதேசத்தில் புலந்த்சகரில் ஒரு கிராமத்தில் பிறந்தவர். எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சதிஷ் குமாருக்கு மூன்று சகோதரர்கள். கிராமங்களில் பிறந்து எளிய பின்னணியை கொண்டவர்களாக இருக்கும் இளைஞர்கள் அதிகப்படியாக காவல்துறை, இராணுவம் போன்ற பிரிவுகளில் வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

சதிஷ் குமார்

தமிழக கிராமங்களிலும் கூட இதுதான் நிலை. பெரிய பொருளாதார வசதிகளும், நகரவாசிகளுக்கு கிடைக்கும் உயர்கல்விக்கான விழிப்புணர்வு வெளியும் இவர்களுக்கு பெரியளவில் கிடைக்காமல் இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. அவர்களுக்கு சொத்தாக இருப்பது அவர்களின் உடல்திறன் மட்டுமே. அதை முழுமையாகப் பயன்படுத்தி தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் காவல்துறை, இராணுவம் போன்ற பணிகளுக்கு அதிகம் செல்கின்றனர். சதிஷ் குமாரின் வாழ்விலும் இதே நிலைதான். இவருடைய மூத்த சகோதரர் இராணுவத்தில் இணைய அவரின் அடியொற்றி தீவிர முயற்சிக்கு 18 வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்தார் சதிஷ் குமார்.

இராணுவமே அவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இராணுவத்தில் விளையாட்டு பயிற்சிகளின் போது சீனியர் அதிகாரி ஒருவர் சதிஷ் குமாரின் உயரத்தை பார்த்துவிட்டு, பாக்ஸிங் ட்ரையல்ஸுக்கு நீ வந்தே ஆக வேண்டும் என கட்டளையிட்டிருக்கிறார். உயரதிகாரி என்பதால் அவரின் கட்டளையை மீற முடியாமல் ட்ரையல்ஸுக்கு சென்றார்.

இதுவரை பாக்ஸிங் பற்றியெல்லாம் பெரிய ஐடியா இல்லாமல் இருந்த சதிஷ் குமாரின் கைகளில் பாக்ஸிங் கிளவுஸ் மாட்டப்பட்டது. அதன்பிறகு, அவருடைய பயணமெல்லாம் ஒரு வழிப்பாதையில் மட்டுமே. திரும்பி பார்ப்பதற்கோ பின்னால் இரண்டடி வைப்பதற்கோ பாதை மாறுவதற்கோ வழியே இல்லை.

அடுத்தடுத்த பயிற்சிகள்… விடாப்பிடி முயற்சிகள் பாக்ஸிங்கில் சதிஷின் தரத்தை உயர்த்தியது. குத்துகள் வலுவாகின… பதக்கங்கள் மாலையாகின!

AP21210127418834 Tamil News Spot
சதிஷ் குமார்

2009-லிருந்து தேசிய போட்டிகளில் தொடர்ச்சியாக வெல்ல ஆரம்பித்தார். பாக்ஸிங்கில் இந்தியாவின் இளம் நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்தார். இந்த சமயத்தில்தான் விளையாட்டு வீரர்கள் தவிர்க்கவே முடியாத ஒரு காலகட்டத்துக்குள் பயணப்பட தொடங்கினார்.

அந்த காலகட்டத்தின் பெயர் காயமும் மீண்டெழுதலும். எல்லா வீரர்/வீராங்கனைகளும் இந்த காலகட்டத்தை கடக்காமல் இருக்க முடியாது. காயங்களிலிருந்து எவ்வளவு சீக்கிரம் மீண்டு வந்து தன்னுடைய பழைய ஃபார்மை மீட்டெடுக்கிறார்கள் என்பதிலேயே அவர்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

2013-ல் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் கண்ணிற்கு மேலே ஒரு வலுவான குத்து வாங்கி இரத்தம் சொட்ட நின்றார் சதிஷ் குமார். கண்ணில் வாங்கிய அந்த குத்திலிருந்து மீண்டு வர அவருக்கு சில காலம் பிடித்தது. மீண்டு வந்து 2014-15 ஆசிய மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக பதிய தொடங்கும் போது, அதே கண்ணில் மீண்டும் ஒரு குத்து வாங்கினார்.

அபாயகரமான அடி, கொஞ்சம் விட்டிருந்தால் பார்வையே பறி போயிருக்கும். ஆனாலும், இந்த காயம் கொடுத்த வலியை விட ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனதே சதிஷுக்கு பெரும் வலியாக இருந்தது.

காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வர அவருக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தது. மீண்டு வந்த பிறகு அவரின் குத்துகள் இன்னும் வலுவாக இருந்தது. ஏக்கம், வலி, ஏமாற்றம் என அத்தனை உணர்வுகளும் இன்ஃபினிட்டி ஜெம்மாக ஜொலிக்க சதிஷின் கைகள் தானோஸின் கைகளாக உருமாறியது. எதிரிகள் சரிந்தனர். பதக்கங்கள் மீண்டும் மாலையாக கழுத்தை அலங்கரித்தன.

செக் குடியரசில் நடைபெற்ற க்ராண்ட் ப்ரியில் தங்கம், டெல்லி க்ராண்ட் ப்ரியில் வெள்ளி, காமென்வெல்த் போட்டியில் வெள்ளி என அடித்து அசரடித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஆசிய தகுதிச்சுற்றில் வெற்றிபெற்று டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான டிக்கெட்டையும் பெற்றார்.

AP21210129303217 Tamil News Spot
சதிஷ் குமார்

சூப்பர்ஹெவிவெய்ட் பிரிவில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் வீரர் என்கிற பெருமையையும் பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்று போடியத்தில் ஏறவும் தயாராக இருக்கிறார்.

ஒரு இராணுவ வீரனுக்கு எப்போதும் எல்லாவற்றையும் விட தன்னுடைய தேசமே முதன்மையானது. தேசத்திற்காக செய்ய துணியாத விஷயமே இல்லை. இந்திய கொடியை தாங்கிய ஜெர்சி அணிந்து போராடும் சதிஷ், எல்லையில் நிற்கும் இராணுவ வீரரின் மனநிலையையே கொண்டிருக்கிறார். அவர் இந்தியாவை அவ்வளவு எளிதில் தோல்வியை தழுவ விட்டுவிடமாட்டார். விரைவில் அவரின் கழுத்தில் பதக்கம் ஜொலிக்கும்!

சதிஷ் குமாரின் காலிறுதிப்போட்டி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் அவர் உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலோவை சந்திக்க இருக்கிறார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *