Share on Social Media

கபில்தேவை வைத்து ஆரம்பித்த இந்த சிறு வியாபார யுக்திதான், பின்னாளில் சச்சின் டெண்டுல்கர் எனும் கிரிக்கெட் கடவுளால் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்து, இந்தியர்கள் அனைவருக்கும், எம்ஆர்எஃப் ஸ்டிக்கர் மீது தீராக் காதலைப் பிறக்கச் செய்தது. எம்ஆர்எஃப் பேட்டை சதமடித்த பின் சச்சின் தூக்கிக்காட்டுவதைப் பார்ப்பதற்காக, ஒருநாள் போட்டிகளில் 100 ஓவர்களையும் நாம் பொறுமையாகப் பார்த்த காலகட்டங்களும் உண்டு.

சச்சின் பேட் அனைவரின் தனி கவனத்தையும் பெற, பிற நிறுவனங்கள், மற்ற வீரர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதில், போட்டி போட்டு இறங்கின. அசாருதீனை ரீபோக்கும், டிராவிட்டை வில்ஸும் , நயன் மோங்கியாவை ஃபோர் ஸ்கொயரும், கங்குலி மற்றும் அஜய் ஜடேஜாவை கிங் ஃபிஷர் நிறுவனங்களும், தங்கள் பக்கம் இழுத்தன. தொடர்ந்து, பெரிய நிறுவனங்கள், பெரிய கிரிக்கெட் வீரர்களை தங்கள் பக்கம் சாய்க்கத் தொடங்கின. அதில் முக்கியப் பங்காற்றியது, பிரிட்டானியா மற்றும் ஹீரோ ஹோண்டா. டிராவிட் மற்றும் கங்குலியை பிரிட்டானியா நிறுவனம், தங்களின் ஸ்டிக்கரை ஒட்டி ஆட வைக்க, அவை மிகவும் பிரபலமாயின. கங்குலியை, அதைத் தொடர்ந்து, ஹீரோ ஹோண்டா ஒப்பந்தம் செய்ய, அது அவரின் ஃபேவரிட் ஸ்டிக்கர் ஆனது.

சச்சினுக்கு எப்படி எம்ஆர்எஃப் அமைந்ததோ, அதே அளவுக்கு, டிராவிட்டின் ‘பிரிட்டானியா’ ஸ்டிக்கர் ஒட்டிய பேட், மிகவும் பிரபலம். அதை அவர், பல ஆண்டுகளாக உபயோகப்படுத்தினார், கங்குலியும் ‘ஹீரோ ஹோண்டா’ ஸ்டிக்கர் ஒட்டி விளையாடிய காலத்தில், பல சதங்களை வாரிக் குவித்தார். இந்தியாவின் மூன்று தூண்களுக்கும் ஆஸ்தான முகமாகவே மாறிப்போயின, இந்த பேட்களின் ஸ்டிக்கர்கள்.

இவர்களைத் தொடர்ந்து, அடுத்து இந்திய அணிக்குள் வந்த ஷேவாக், யுவராஜ் சிங், முகமது கைஃப் என பல வீரர்களை, ஹீரோ ஹோண்டா, ரீபோக் போன்ற நிறுவனங்கள், தங்களின் லோகோவைப் பயன்படுத்தி ஆட வைத்தன.

எஸ்எஃப், பிஏஎஸ், எஸ்ஜி, எஸ்எஸ் – இவையெல்லாம் இந்தியாவின் தலைசிறந்த பேட் வடிவமைக்கும் நிறுவனங்கள், ஆனால் ஒரு காலகட்டத்தில், இவற்றையெல்லாம் மறந்துபோய், வீரர்களின் பேட்டிலுள்ள, நிறுவனங்களின் விளம்பரப் பெயர்கள் மட்டுமே மக்கள் மனதில் தேங்கிநிற்க ஆரம்பித்துவிட்டன.வீரர்களுக்கு எது தேவையோ, அதற்கேற்றாற் போன்ற கஸ்டமைஸ்டு பேட்களை வடிவமைத்துத் தரும் வடிவமைப்பாளர்களுக்கான அங்கீகாரம் நாளடைவில் காணாமலே போய்விட்டது.

ஒருபக்கம் மேலும் மேலும் லாபம் கொழிக்கும் வணிகமாக இதுமாற, தங்களது அடையாளத்துக்காக பேட் வடிவமைப்பாளர்கள் ஏங்கித் தவிக்கும் நிலைதான் நீடித்தது. சச்சின், டிராவிட் , கங்குலி போன்ற நட்சத்திர வீரர்களுக்கு, கோடிகளில் கொட்டி ஸ்பான்சர் செய்ய, இந்த பேட் தயாரிப்பாளர்களால் முடியவில்லை.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *