Share on Social Media


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக அறிவித்த சசிகலா, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அ.தி.மு.க நிர்வாகிகளுடன் அலைபேசியில் உரையாடுவது போன்ற ஆடியோக்களை வெளியிட்டு வந்தார். அப்படி வெளியான ஆடியோக்களில் பெரும்பாலும், “நான் விட மாட்டேன், கட்டாயம் வந்துடுவேன். கட்சியை மீட்பேன். கொரோனா காலம் முடியட்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வருவேன்” போன்ற கருத்துகளே பிரதானமாக இடம்பெற்றிருந்தன. அ.தி.மு.க தலைமையிலிருந்து சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றச் சொன்னபோது பல இடங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. மாறாக சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு சில இடங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாகவும் அடுத்ததாக தஞ்சை அல்லது திருச்சியில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் சொல்லிவந்தனர். ஆனால், கொரோனா தளர்வுகள் அமலுக்கு வந்தபிறகும் அரசியல் ரீதியான செயல்பாடுகள் எதுவும் இல்லாமல் அமைதியாகவே இருந்தார் சசிகலா.

அதேவேளை, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவைத்தலைவர் மதுசூதனனை அ.தி.மு.க கொடிகட்டிய காரில் வந்து பார்த்தது, அவரின் மறைவுக்கு அவரின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தது, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமியின் மறைவுக்கு மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் தெரிவித்தது என லைம்லைட்டிலே இருந்தார் சசிகலா. இந்த நிலையில், வரும் அக்டோபர் 17-ம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி அவர் ஜெயலலிதாவின் சமாதிக்கு வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சசிகலாவின் ஆதரவாளர்கள் இதுகுறித்து, தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் வெளிப்படையாகவே பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், அக்டோபர், 16, 17 ஆகிய இரண்டு நாள்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் சசிகலா கலந்துகொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *