Share on Social Media


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் அவர் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திவிட்டு கண்ணீர் விட்டு அழுதார் வி.கே.சசிகலா. 2017-ல் ஜெயலலிதா மறைந்த பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்லும்முன் ஜெயலலிதா சமாதியில் சபதம் செய்துவிட்டுச் சென்ற சசிகலா, கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதிதான் முதல்முறையாக அவர் சமாதிக்குச் சென்றார். தற்போது இரண்டாவது முறையாக ஜெயலலிதாவின் நினைவு நாளில் அவர் சமாதிக்கு சசிகலா சென்றிருக்கிறார். மேலும் சசிகலா அ.தி.மு.க உட்கட்சி தேர்தல் குறித்தும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்,,“ஒற்றுமையாக இருந்தால்தான் எதிரிகளை வெல்ல முடியும். அ.தி.மு.க தொண்டர்கள் தாக்கப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இனியும் என்னால் சும்மா இருக்க முடியாது!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ்

சிறையிலிருந்து விடுதலையானது முதல் தீவிர அரசியலுக்கு வருகிறேன், அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கிறேன் என்பது தொடங்கி எல்லோரும் இணைந்து பணியாற்றலாம், எடப்பாடி, ஓ.பி.எஸ் என யார் மீதும் தனக்கு வெறுப்பில்லை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் முகாம் அலுவலகம், பொதுச்செயலாளர் எனப் பல்வேறு வகையில் அ.தி.மு.க-வைக் கைப்பற்ற முட்டி மோதிப் பார்த்துவிட்டார் சசிகலா. ஆனால், யாரும் அசைந்துகொடுத்ததாகத் தெரியவில்லை. அசைய நினைத்தவர்களையும் அ.தி.மு.க தலைமை அதிரடியாகக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டது. அ.தி.மு.க-வின் அதிகார முகமாக இருந்த சசிகலா தற்போது அதன் அருகில் கூட நெருங்க முடியாமல் தவிப்பதற்கான காரணம் என்ன என்ற விசாரணையில் இறங்கினோம்…

Also Read: உட்கட்சித் தேர்தலுக்கு எதிராக உண்ணாவிரதம்?! – தொண்டர்களைத் திரட்ட சசிகலா சதுரங்க ஆட்டம்

அ.தி.மு.க-வுக்குள் நுழைய முடியாததற்குக் காரணம் என்ன என மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டோம். “நவீன அரசியலில் பிடியைக் கைப்பற்றியவர்கள் அதை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஒரு கட்சியில் மிகப்பெரிய அதிகாரமே போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் சின்னத்தில் கையெழுத்திடுவதுதான். அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்துக்குக் கையெழுத்திடும் அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைப்பற்றி மூன்று தேர்தலைச் சந்தித்துவிட்டார்கள். நிரந்தரப் பொதுச்செயலாளர் எம்.ஜி.ஆர், நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என இருந்தது போல விரைவில் நிரந்தர இரட்டைத் தலைமை எடப்பாடி, ஓ.பி.எஸ் என அறிவித்துவிடுவார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் சம அதிகாரம் இருக்கிறது. அ.தி.மு.க-வின் முடிவுகளை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இப்படியிருக்கும்போது வி.கே.சசிகலாவிடம் இவற்றையெல்லாம் கொடுத்துவிட்டு மீண்டும் இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருக்கலாம் என யோசிக்கக்கூட மாட்டார்கள்.

New Project 11 Tamil News Spot
ரவீந்திரன் துரைசாமி

எடப்பாடி பழனிசாமியை அடையாளம் காட்டியது சசிகலா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். அவரே சசிகலாவுக்கு இனி அ.தி.மு.க-வில் இடமேயில்லை எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார். எனவே அவரை மீறி சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்க்கலாம் என்ற கருத்தை முன்வைக்க மாட்டார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “ஓ.பன்னீர்செல்வமும் சசிகலா தங்கள் தலைமையை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அ.தி.மு.க-வில் சேர்ப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என்கிறார். தன்னை அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எனச் சொல்லிக்கொண்டிருக்கும் சசிகலா எப்படி இவர்களின் தலைமையை ஏற்றுக் கொள்வார். சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை இந்தப் பிரச்னை இப்படியே ஓடிக்கொண்டேதான் இருக்கும். அதுவரை தேர்தல்களில் இரட்டை இலைக்கு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டுக் கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அடுத்தகட்டத்தை நோக்கிச் சென்று கொண்டேதான் இருப்பார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் கையெழுத்திடுவார்கள். பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வார்கள். சசிகலா அதிகாரத்தில் இருந்திருக்கிறார்.

jaya 43 Tamil News Spot
ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன்

எடப்பாடி, ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் சசிகலா மீது மரியாதையோடு நடந்திருக்கிறார்கள். அதையெல்லாம் மனதில் வைத்து எப்படியும் தன்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்கு எந்தளவு பலனிருக்கும் என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்” எனச் சசிகலாவின் நிலை குறித்து விவரித்தார்.

Also Read: அதிமுக அலுவலகத்தில் அதகள மோதல் ஆரம்பம்?! – திடீர் விசிட் வருவாரா சசிகலா?

சசிகலாவின் அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் துரை.கருணாவிடம் பேசினோம். “வி.கே.சசிகலா, `2016-ல் தன்னைப் பொதுச்செயலாளராக எல்லோரும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தார்கள். அதன்பின் சிறைக்குச் சென்றதால் கட்சிப் பணியில் என்னால் தொடர்ந்து செயல்பட முடியவில்லை. மீண்டு வந்தபிறகு தீவிர அரசியலில் ஈடுபட நினைத்திருந்தபோது அ.தி.மு.க-வில் எனக்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியதாலும், மூன்றாவது முறையாக அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதாலும் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாகக் கூறினேன். ஆனால், அப்படி நடக்கவில்லை. அதுமட்டுமல்ல நாடாளுமன்றம் தொடங்கி, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரை அ.தி.மு.க சந்தித்த தொடர் தோல்விகளால் தொண்டர்கள் சோர்வடைந்திருப்பதோடு, பின்னடைவையும் சந்தித்திருக்கிறது. எனவே, பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க-வை ஒருங்கிணைத்து மீண்டும் வலுவான கட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில்தான் அரசியலுக்கு வருகிறேன்’ என்கிறார். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது எடப்பாடி, ஓ.பி.எஸ் உட்பட அனைவருக்கும் பதவி கிடைக்கக் காரணமாக இருந்தவர் சசிகலா. அன்வாராஜா தொடங்கி பலருக்கும் சசிகலா மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்து பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், அது குறித்துப் பேச்சைத் தொடங்கியதும் அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கிவிடுவதால் மற்றவர்கள் பேசப் பயப்படுகிறார்கள்.

durai karuna Tamil News Spot
துரை கருணா

இரட்டைத் தலைமையின்கீழ் தான் இனி அ.தி.மு.க செயல்படும் எனக் கட்டமைத்துவிடுவார்கள். ஆனால், தொண்டர்களுக்குள் இந்த ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. ‘என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது’ என்பதுதான் அ.தி.மு.க-வின் தற்போதைய நிலைமை. இதைச் சரி செய்ய தன்னால் முடியும் என சசிகலா நம்புகிறார். அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார்” என்றார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *