Share on Social Media


கோவை மாநகரின் முக்கிய ரோடுகள் அனைத்திலும் பாலம் வேலைகள் ஒரே நேரத்தில் நடப்பதுடன், மிகவும் தாமதமாக நடப்பதாலும், உரிய மாற்றுவழிகள் ஏற்படுத்தாத காரணத்தாலும், நகரமெங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

கோவை மாநகரில் அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு என முக்கிய ரோடுகள் அனைத்திலும் ஒரே நேரத்தில், பாலம் கட்டும் வேலைகள் நடந்து வருகின்றன.தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை இரண்டின் சார்பிலும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, முந்தைய ஆட்சியின்போது, இந்தப் பணிகள் துவக்கப்பட்டன.

நகரின் வளர்ச்சிக்கு, இந்த பாலங்கள் பெரிதும் பயன் தரும் என்றாலும், பணிகளைத் தெளிவான திட்டமிடல் இல்லாமல் அவசரகதியில் துவக்கப்பட்டதால், உரிய மாற்று வழிகள் உருவாக்கப்படவில்லை.மேட்டுப்பாளையம் ரோட்டில்…இரண்டு பாலங்கள் கட்டும் வேலை நடக்கும் மேட்டுப்பாளையம் ரோட்டில், இன்று வரை பல்லாயிரக்கணக்கான மக்கள், உரிய மாற்று வழியின்றி பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இருக்கின்ற மாற்று வழிகளும் குன்றும், குழியுமாக மக்களின் முதுகெலும்பைப் பதம் பார்க்கின்றன.

பொள்ளாச்சி ரோட்டில்…உக்கடம்-ஆத்துப்பாலம் இடையிலான பாலம் கட்டும் பணி, இரண்டு பகுதியாக நடந்து வருகிறது. அங்கு கரும்புக்கடை, ஆத்துப்பாலம் பகுதிகளில், முக்கிய நேரங்களில் மிகக்கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போதிய அளவில் போலீசாரும் நிறுத்தப்படுவதில்லை. மாற்று வழியான சுண்டக்காமுத்துார் ரோடும் படுமோசமாக உள்ளது.அவிநாசி ரோட்டில்… இங்கு 10 கி.மீ., துாரத்துக்கு பாலம் கட்டும் பணியும், ஆமை வேகத்தில் நடக்கிறது.

பல்வேறு இடங்களில், இறங்கு தளங்கள், ஏறுதளங்கள் அமைக்க வேண்டி இருப்பதால், ஆண்டுகணக்கில் பணிகள் இழுக்குமென்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. அங்கும் வாகன போக்குவரத்து கட்டுப்பாடின்றி இருப்பதால், நெரிசலும் விபத்தும் அதிகமாகி வருகிறது.திருச்சி ரோட்டில்… ரெயின்போ பகுதியிலிருந்து பழைய ஸ்டாக் எக்சேஞ்ச் வரையிலும் பாலம் கட்டும் பணி நடப்பதால், வாகனங்கள் அனைத்தும் ரேஸ்கோர்ஸ், ரெட்பீல்ட்ஸ், புலியகுளம், சவுரிபாளையம் வழியில் செல்கின்றன. ஆனால் அந்த ரோடும் மிக மோசமாகவும், பல இடங்களில் குறுகலாகவும் இருப்பதால், அங்கும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இவ்வாறு திரும்பிய திசையெல்லாம், பாலங்கள் கட்டும் பணியால், மாநகரில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்வதற்கு, மணிக்கணக்கில் செலவிட வேண்டியுள்ளது.கால விரயம், எரிபொருள் விரயம், காற்று மாசு அதிகமாகிறது. மனித உழைப்பும் வீணாகிறது. எனவே, இந்த பாலங்கள் கட்டும் பணியை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.அதற்கு தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறைகளை ஒருங்கிணைத்து, கள ஆய்வு செய்து, கூட்டங்களை நடத்தி, பணிகளை துரிதப்படுத்த வேண்டிய பொறுப்பு, மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது.

அதேபோன்று, மாநகர காவல்துறை, மாநகராட்சி போன்ற துறைகளையும் ஒருங்கிணைத்து, உரிய மாற்று வழிகளை உருவாக்க வேண்டும்; தற்போதுள்ள மாற்று வழிகளையும் விரைவாகச் சீரமைக்க வேண்டும். இதுதொடர்பாக தொழில் அமைப்புகளுடன், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் போன்ற சமூக அமைப்புகளும், அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கைகளை அனுப்பி வருகின்றன.நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் கோவையில் அடிக்கடி ஆய்வு செய்து, இந்தப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே, இவர்கள் உள்ளிட்ட கோவை மக்கள் அனைவரின் கோரிக்கை.-நமது நிருபர்-



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *